தொழில்நுட்பத்திற்குள் தொலைந்து விட்ட கற்றல்முறை Learning lost in technology - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 24, 2024

Comments:0

தொழில்நுட்பத்திற்குள் தொலைந்து விட்ட கற்றல்முறை Learning lost in technology

தொழில்நுட்பத்திற்குள் தொலைந்து விட்ட கற்றல்முறை

இரண்டு வயதேயான என் மகளுக்கு, செல்போனை சுயமாக இயக்க தெரியும். நுனிவிரலில், வீடியோக்களை தள்ளி விட்டு பார்க்கிறாள். அலெக் ஷா வை அழைத்து, ஆணையிடுகிறாள். என் மகனின் வீட்டுப்பாடத்தையே, ஏ.ஐ., (ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ்) தான் செய்கிறது.

இப்படியாக, தொழில்நுட்பத்திற்குள் தொலைந்து விட்ட, தம் குழந்தைகள் பற்றிய, பெற்றோரின் பெருமித பேச்சுகளை, சமீபத்தில் அதிகம் கேட்க முடிகிறது. உண்மையில் இது, ஆக்கப்பூர்வ வளர்ச்சிக்கு கைக்கொடுக்குமா என்றால் கேள்விக்குறியே.

இதுகுறித்து, குழந்தைகள் மனநல ஆலோசகர் கவிதா கூறியதாவது: பார்த்தல், கேட்டல், எழுதுதல் வழியாக கற்பதே சிறந்த முறை. இம்மூன்றும் சரிவிகிதத்தில் இருந்தால் தான், அது மூளையின் செயல்பாட்டை துாண்டிவிடும். கற்றதை மறக்காமல் நினைவில் வைத்திருக்க உதவும். புதிய சிந்தனையை துாண்டிவிடும். இதை பள்ளிக்கூடங்கள் முறையாக கடைபிடித்து வந்தன.

கொரோனா தொற்றுக்கு பின், ஊரடங்கு காலத்தில், செல்போன், லேப்டாப் திரைக்குள் வகுப்பறை செயல்பாடுகள் வந்த பிறகு, தொழில்நுட்பங்களின் தாக்கம் அதிகரித்துவிட்டது. இது ஒருவகையில் ஆரோக்கியமான வளர்ச்சி என்றாலும், பழைய முறைப்படி கற்றலில் கிடைத்த பல நன்மைகளுக்கு, இது முட்டுக்கட்டை போட்டுவிட்டது.

இதில், குறிப்பாக எழுத்துப்பயிற்சி குறைந்துவிட்டது. பேனா பிடித்து எழுதும் போது, விரல்களில் உள்ள நரம்புகள் துாண்டப்பட்டு, கவனத்தை ஒருங்கிணைக்கும். பார்த்து, எழுதுவது மனதில் நிற்கும்.

ஆனால் தற்போது வீட்டுப்பாடங்களை, ஆன்லைனில் முடிக்குமாறு ஆசிரியர்களே உத்தரவிடுகின்றனர். எழுத்துப்பயிற்சி குறைவதால், தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை தெரிந்தும், நேர மேலாண்மை இன்மை, சோம்பேறித்தனத்தால் எழுதாமல் வந்துவிடுகின்றனர். விரிவாக விடையளிக்கும் கேள்விகளை விட, அப்ஜெக்டிவ் வகையிலான கேள்விகளையே, மாணவர்கள் அதிகம் விரும்புகின்றனர். இது தொடர்ந்தால், மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதை, பெற்றோரும், பள்ளிகளும் உணர்வது அவசியம்.

தொழில்நுட்பங்கள் வழியாக கற்றல் எவ்வளவு முக்கியமோ அதேபோல, எழுதுதல், வாசித்தலுக்கும் இடம் தர வேண்டும். செயல்வழி வீட்டுப்பாடங்கள் போல, எழுதி சமர்ப்பிக்கவும் அறிவுறுத்த வேண்டும். குழந்தைகள் வீட்டில் எழுதுகிறார்களா என பெற்றோர் கவனிக்க வேண்டும்.

வாசித்தல், எழுதுதல் ஒன்றிணைந்தால் தான், மாணவர்களுக்கு கற்பனைத்திறன் வளரும். இப்பயிற்சி குறைந்தால், மூளையின் செயல்திறனில் மந்தத்தன்மை ஏற்படலாம் என்பதை மறந்துவிட வேண்டாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews