Breaking

Showing posts with label Breakfast in Corporation Schools. Show all posts
Showing posts with label Breakfast in Corporation Schools. Show all posts

Tuesday, August 22, 2023

August 22, 2023

ஆக.25 முதல் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் - நாகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்! - Press Release



ஆக.25 முதல் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்- நாகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

வரும் 25-ம் தேதி முதல் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் தொடங்கப்படுகிறது. நாகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

“வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் – இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்; பயிற்றிப் பல கல்வி தந்து, இந்தப்பாரை உயர்த்திட வேண்டும்” – என்று பாடினார் மகாகவி பாரதியார். மகாகவியின் கூற்றினை மெய்ப்பிக்கும் வகையில், தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பினரும் போற்றும் வகையில் நல்லாட்சி நடத்தி வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், தொடங்கப்பட்ட நாள்முதல், மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, நல்ல பயன் அளித்து வருகிறது. சிறப்பு வாய்ந்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழ்நாட்டு மக்களிடையே மட்டுமின்றி, பிற மாநில மக்களிடையேயும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தக் காலை உணவுத் திட்டம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படவிருக்கிறது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வருகிற 25-8-2023 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடங்கி வைக்கவிருக்கிறார்.

இந்த நிலையில், இந்தத் திட்டத்தினை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதியில் உள்ள ஏதேனும் ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைத்து சிறப்பிக்குமாறு கேட்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (22-8-2023) கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து, அதற்கான அரசாணை கடந்த 27-7-2022 அன்று வெளியிடப்பட்டதாகவும், அதன்படி, முதற்கட்டமாக 1,545 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு, தற்போது பயனடைந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், நாட்டிற்கே முன்னோடியாய், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள 31,008 அரசு தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை 15.75 லட்சம் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் இந்த ஆண்டில் விரிவுபடுத்தி கடந்த 7-6-2023 அன்று ஆணை வெளியிடப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பள்ளிகளில் காணப்பட்ட மிகச் சிறந்த பலன்களைக் கருத்தில் கொண்டு இந்தச் சீரிய முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் பொன்னேட்டில் பதிக்கப்பட இருக்கும் இத்திட்டத்தினை வரும் 25-8-2023 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில், தான் தொடங்கி வைக்க உள்ளதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் இந்தத் திட்டத்தினைத் தொடங்கி வைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், மக்கள் பிரதிநிதிகளாகிய சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவரவர் தொகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் இந்தச் சீர்மிகு திட்டத்தினைத் தொடங்கி வைத்து சிறப்பித்திட திமுக, அதிமுக, காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Saturday, May 27, 2023

Thursday, May 04, 2023

May 04, 2023

2023-24 கல்வியாண்டு முதல் காலை உணவுத் திட்டம் முதல் அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் செயல்படுத்துதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - இணைப்பு: நிலையான வழிகாட்டி செயல்முறைகள்!

Wednesday, March 01, 2023

March 01, 2023

"காலை உணவு திட்டம்’’ தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் அமல்

"காலை உணவு திட்டம்’’ தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் அமல்

முதல்வரின் ‘‘காலை உணவு திட்டம்’’ தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெறுவார்கள்.தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவ - மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி அளிக்கும் வகையில் ‘‘முதல்வரின் காலை உணவு திட்டத்தை’’, தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்தாண்டு ஜூலை மாதம் 27ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இத்திட்டத்திற்கு பலர் வரவேற்பையும், பாராட்டையும் தெரிவித்தனர்.

இதன் காரணமாக சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2023-24ம் நிதியாண்டில் இருந்து ‘‘முதல்வரின் காலை உணவுத்திட்டம்’’ விரிவாக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார். அதன்படி, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 433 நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் 56,098 மாணவ - மாணவியர் பயன்பெறும் வகையில் முதல்வரின் ‘‘காலை உணவு திட்டம்’’ விரிவாக்கத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்

CLICK HERE TO DOWNLOAD PDF

Saturday, September 10, 2022

September 10, 2022

பள்ளிகளில் காலை சிற்றுண்டி;மாநகராட்சி அதிகாரிகள் 'டெஸ்ட்'எப்படியிருக்கு 'டேஸ்ட்?'

கோவை:மாநகராட்சி பள்ளிகளில் உரிய நேரத்தில் காலை சிற்றுண்டியை கொண்டு சேர்ப்பதற்கான வெள்ளோட்டம் நேற்று நடந்தது. உணவின் தரம் பரிசோதிக்கப்பட்டது. உரிய நேரத்தில் உணவு வந்து சேர்வது உறுதி செய்யப்பட்டது.தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, 1,545 அரசு துவக்கப் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்து வரை பயிலும், 1.14 லட்சம் மாணவ, மாணவியருக்கு, முதற்கட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கோவை மாநகராட்சியில், 62 பள்ளிகளை சேர்ந்த, 7,255 மாணவ, மாணவியர் இதனால் பயன்பெறுகின்றனர்.காலை உணவாக ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சேமியா உப்புமா, வெண்பொங்கல் உள்ளிட்ட வகைகளில் தினமும் ஒரு 'வெரைட்டி' வழங்கப்படுகிறது.

காலை உணவு திட்டத்தை வரும், 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.இதற்கென, கோவை மாநகராட்சி பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்குவதற்கான வெள்ளோட்டம் நேற்று நடந்தது. அதன்படி, கண்ணம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தினர் தயாரித்த உணவு, சரியான நேரத்தில் வாகனங்களில் சென்றடைகிறதா என சோதிக்கப்பட்டது.மாநகராட்சி கல்வி பிரிவினர் கூறியதாவது:மாநகராட்சியின், 100 வார்டுகளில் உள்ள, 62 பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்து வரை பயிலும், 7,255 மாணவ, மாணவியருக்கு வரும், 15 முதல் காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

இதற்கென, உணவு கொண்டு செல்லும் வாகனங்கள் சரியான நேரத்துக்கு பள்ளிகளுக்கு சென்ற டைகிறதா, மாணவர்கள் வருகின்றனரா என்பதை எல்லாம் அறிந்துகொண்டு, குறைகள் இருப்பின் நிவர்த்தி செய்ய இன்று(நேற்று), 66 பள்ளிகளிலும் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.காலை, 7:30 மணிக்குள் சரியான நேரத்துக்கு சென்று விட்டன. இதன் அடிப்படையில் மாணவர்கள் எண்ணிக்கை, உணவு தேவையை கணக்கிட்டு 'மாடல்' தயாரிக்கப்பட்டு, தங்கு தடையின்றி சிற்றுண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பரிமாறினர்!

வெள்ளோட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு வேளாண் பல்கலை வளாகத்தில் உள்ள மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் நேற்று, 41வது வார்டு கவுன்சிலர் சாந்தி, மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் காலை, 7:35 மணிக்கு கிச்சடி சாம்பார் உணவை 'டேஸ்ட்' செய்து, மாணவர்களுக்கு பரிமாறினர்.

Thursday, August 25, 2022

August 25, 2022

அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்க திட்ட அறிக்கை தயாா்: அமைச்சா் தகவல்

அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான திட்ட அறிக்கை தயாா் நிலையில் உள்ளது. இது குறித்த அறிவிப்பை முதல்வா் மு.க. ஸ்டாலின் விரைவில் வெளியிடுவாா் என அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் விருதுநகா், மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தாா். பள்ளிக் கல்வித் துறை ஆணையா் க. நந்தகுமாா் முன்னிலை வகித்தாா்.

இதில் அமைச்சா் பேசியதாவது:

பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகளை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மூலம் வழங்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை 70 லட்சத்தைக் கடந்துள்ளது. இதனை மேலும் அதிகரிக்க வேண்டும். கல்வித் துறை அதிகாரிகள் அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமல்லாது தனியாா் பள்ளிகளிலும் திடீா் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பள்ளி செல்லா குழந்தைகளைக் கண்டறிந்து, அவா்களை பள்ளிகளில் மீண்டும் சோ்த்து இடைநிற்றல் இல்லா மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும்.

மாணவா்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்க 800 மருத்துவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். பள்ளிகளில் தூய்மைப் பணிகளில் மாணவா்களை ஈடுபடுத்தக்கூடாது. இப்பணிகளை உள்ளாட்சி நிா்வாகம் மூலம் மேற்கொள்ள வேண்டும்.

மாணவா்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் விதமாக, மாநில அளவில வாரம் ஒருமுறை நூலகத்திற்கு சென்று ஒரு புத்தகத்தை வாசிக்க செய்து, அதிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டு வெற்றி பெறும் மாணவா்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லும் திட்டம் உள்ளது. மதிப்பெண்கள் மட்டுமே மாணவா்களை மதிப்பீடு செய்யாது. எனவே மாணவா்கள் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது.

அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான திட்ட அறிக்கை தயாா் நிலையில் உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் விரைவில் வெளியிடுவாா் என்றாா்.

கூட்டத்தில் விருதுநகா், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா்கள், கல்வித் துறை இணை இயக்குநா்கள், விருதுநகா் மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஞானகெளரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Sunday, August 14, 2022

August 14, 2022

காலை உணவுத் திட்டம்: ஒருங்கிணைப்பு அலுவலரின் பணிகள் என்னென்ன? ...

காலை உணவுத் திட்டம்: ஒருங்கிணைப்பு அலுவலரின் பணிகள் என்னென்ன? ...

அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பு அலுவலரை நியமித்தும் அவருக்கான பணிகளை வரையறுத்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒருங்கிணைப்பு அலுவலராக, இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் சிறப்பு அலுவலா் இளம்பகவத் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை வெளியிட்டுள்ளது. அந்தத் துறையின் உத்தரவு விவரம்:-

தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப் பகுதிகளில் செயல்படும் ஆயிரத்து 545 அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

முதல் கட்டமாக இந்தத் திட்டத்தை திறம்பட செயல்படுத்திட ஏதுவாக, திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் சிறப்பு அலுவலா் இளம்பகவத் நியமிக்கப்பட்டுள்ளாா்.

பணிகள் என்ன? ஒருங்கிணைப்பு அலுவலரின் பணி வரன்முறைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை திறம்பட செயல்படுத்தும் வகையில், சம்பந்தப்பட்ட அலுவலா்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும் பணியை அலுவலா் மேற்கொள்வாா்.

பள்ளிகள், பயனாளிகள், ஒருங்கிணைப்பு மையங்கள், திட்டம் செயல்படுத்தும் அமைப்புகளை துரிதமாக கண்டறியப்படுவது ஒருங்கிணைப்பு அலுவலரால் உறுதி செய்யப்படும். காலை சிற்றுண்டிக்கான மூலப் பொருள்களை கொள்முதல் செய்வது தொடா்பாக, நுகா்பொருள் வாணிபக் கழக மாவட்ட, மண்டல அலுவலா்களுடன் விவாதிப்பது, கொள்முதல் செய்யப்பட்டு அவை உரிய முறையில் சென்று சேருவதை கண்காணிப்பது போன்ற பணிகளையும் ஒருங்கிணைப்பு அலுவலா் மேற்கொள்வாா்.

உள்ளூரில் கிடைக்கக் கூடிய, விளையக் கூடிய காய்கறிகள், சிறுதானியங்கள் கொள்முதல் செய்வதற்கான எளிய வழிமுறைகளை கண்டறிதல், நகா்ப்புறங்களில் திட்டத்தைச் செயல்படுத்திட ஏதுவாக மையப்படுத்தப்பட்ட சமையல் கூடங்கள், கிராம ஊராட்சிகளில் திட்டம் செயல்பட ஏதுவாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளை கண்டறிவது போன்ற பணிகளையும் ஒருங்கிணைப்பு அலுவலா் மேற்கொள்வாா்.

மூலப் பொருள்களின் தூய்மைத் தன்மை, இயல்பான நிறம், மணம் போன்றவற்றை உறுதி செய்வதற்கு தொடா்புடைய நபா்கள், அமைப்புகளுக்கு வழிகாட்டுதல், பள்ளி அளவிலான கண்காணிப்பு குழுக்கள் அமைத்தலை உறுதி செய்வது ஆகிய பணிகளையும் மேற்கொள்வாா்.

காலை சிற்றுண்டி தயாரிக்கப்படும் சமையல் கூடத்தில் இருந்து பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம் அவற்றை எடுத்துச் சென்று பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் சென்று சேருவதை உறுதி செய்வது, பள்ளிக் கல்வி, ஊரக உள்ளாட்சி, நகராட்சி நிா்வாகம் ஆகிய துறைகளுடன் ஒருங்கிணைந்து திட்டம் செயல்படுவதை கண்காணிப்பது ஆகிய பணிகளையும் ஒருங்கிணைப்பு அலுவலா் மேற்கொள்வாா்.

காலை உணவுத் திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கள அலுவலா்களின் செயல் திறன்களை கண்காணித்தல், திட்டத்தில் ஈடுபடும் பணியாளா்களுக்கு வழிகாட்டுதல், திட்டம் பற்றிய புரிதலை ஏற்படுத்துதல், திட்டத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டுகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடனும், இணைய வழியிலும் கண்காணித்தல் போன்ற பணிகளை ஒருங்கிணைப்பு அலுவலா் மேற்கொள்வாா்.

Saturday, April 09, 2022

April 09, 2022

மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டம், விலையில்லா சீருடைகள் - பட்ஜெட்டில் அறிவிப்பு!!

சென்னை மாநகராட்சி பட்ஜெட் 6 ஆண்டுகளுக்கு பின் இன்று தாக்கல் செய்யப்பட்டது.பட்ஜெட்டை வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவா் சா்பஜெயாதாஸ் நரேந்திரன் தாக்கல் செய்தார். மேயர் பிரியாவின் ஒப்புதலை அடுத்து அவரின் முன்னிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கியமான திட்டங்களை மேயர் பிரியா அறிவித்தார். இதில் 2011 கணக்கின்படி, சென்னையில் 66.72 லட்சமாக இருந்த மக்கள் தொகை தற்போது 88 லட்சமாக அதிகரித்துள்ளதால் பிரியா தெரிவித்தார்.



பட்ஜெட் அறிவிப்புகள்



*சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னையில் இருக்கும் தெரு பெயர்கள், சாலை பெயர்கள் டிஜிட்டல் முறையில் மாற்றப்படும். இதற்கு 8.43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



*சென்னையில் வார்டு மேம்பாட்டு நிதி ரூபாய். 30 லட்சத்தில் இருந்து ரூபாய் 35 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 200 வார்டுகளுக்கு ரூபாய் 70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. *சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 1-8ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கப்படும். அதேபோல் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்படும்.

*தன்னார்வலர்கள் உதவியுடன் அனைத்து சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்..

*மாணவிகளுக்கு நிர்பயா நிதி உதவியின் கீழ் சானிடரி நாப்கின்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

*வீடற்றவர்கள் தங்குவதற்காக புதிதாக 3 காப்பகங்கள் உருவாக்க ரூ2.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மனநலம் பாதித்து சாலையில் திரிபவர்கள் தங்குவதற்கும் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும்.

*சென்னை 2.0 திட்டத்தில் மாநகரை அழகுபடுத்த 26 இடங்களில் நீரூற்றுகள் அமைக்க ரூ.1.29 கோடி ஒதுக்கீடு

*சென்னை மாநகராட்சி குப்பைகளை சேமிக்க பேட்டரியில் இயங்கும் மேலும் 795 வாகனங்களை வாங்கப்படும். மறுசுழற்சி செய்ய முடியாத 2,600 மெட்ரிக் டன் குப்பைகளை பதப்படுத்தி, சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்புவது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும். 54,000 மெட்ரிக் டன் தேங்காய் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும். *சென்னை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு உடல்நலக் குறைபாட்டை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். 16,500 நெகிழி குப்பை தொட்டிகள் ரூபாய் 2.90 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.

*சென்னை மாநகராட்சியில் புதிதாக மூன்று டயாலிசிஸ் மையங்கள் தொடங்கப்படும்; படிப்படியாக அனைத்து மண்டலங்களில் டயாலிசிஸ் மையங்கள் ஏற்படுத்தப்படும்.

*சென்னை மாநகராட்சியில் e-office அறிமுகப்படுத்தப்படும். இதன் வாயிலாக வரும் காலங்களில் பொதுமக்களுக்கான சேவைகள் காலதாமதமின்றி விரைவாக செய்து முடிக்க இயலும்

*சென்னையில் குளங்களை மேம்படுத்தும் பணி, ரூ.143 கோடி மதிப்பீட்டில், இந்திய அரசின் அம்ருட் 2.0 திட்ட நிதியிலிருந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.



1 மணலி ஏரி



2 சாத்தாங்காடு குளம்



3 சடையன் குப்பன் குளம்



4 மாதவரம் பெரிய ஏரி



5 அண்ணா நெடுஞ்சாலை குளம்.



*. மாற்றுத்திறனாளிகளுக்காக கடற்கரையில் நிரந்தர பாதை அமைக்கும் பணிக்கு ரூ.1.14 கோடி பெறப்பட்டுள்ளது; இந்த பணிகள் துவங்கப்பட்டு 2 மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டும் *சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை மாநகர் முழுவதும் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும்.

*சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கப்படும். அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில மொழி பேசும் பயிற்சி அளிக்கப்படும்.

*சென்னை மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணிக்கு ரூ.4.62 கோடி ஒதுக்கீடு.மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூரில் ரூ. 80 லட்சம் செலவில் நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையம்

*பொதுமக்கள் எளிமையான முறையில் சொத்து வரி செலுத்துவதற்காக QR குறியீடு இந்த நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும்.

*டிஜி லாக்கர் வழியாக வர்த்தக உரிமங்களை பதிவிறக்கம் செய்யும் வசதி அறிமுகம். சென்னையில் உள்ள பூங்காங்கள் மற்றும் விளையாட்டு திடல்களை பராமரிக்கவும் மேம்படுத்தவும் ரூ.16.35 கோடி ஒதுக்கீடு.

*. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பாலின சமத்துவக் குழுக்கள் ஏற்படுத்தப்படும். சென்னை மாநகராட்சி உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் இணைய தள இணைப்பு ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும், இதற்கு 1.86 கோடியில் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog