Breaking

Showing posts with label மாணவர். Show all posts
Showing posts with label மாணவர். Show all posts

Monday, August 08, 2022

August 08, 2022

தமிழ் இலக்கிய திறனறிவுத் தேர்வு: பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,500

தமிழ் இலக்கிய திறனறிவுத் தேர்வுக்கு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.



தேர்வு செய்யப்படும் 1500 மாணவர்களுக்கு மாதம் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.



இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,



தமிழ் மரபு பற்றிய அறிவும் இலக்கிய ஆற்றலும் மிக்க இளைய சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் நடத்தப்படும் தமிழ் ஒலிம்பியாடு தேர்வு மிக முக்கியமானது.

தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 2022 - 2023 ஆம் கல்வியாண்டு முதல், தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு நடத்தப்படவுள்ளது.



இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500 வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும்.



இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.



10-ஆம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும்.



2022-2023-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் (சிபிஎஸ்இI ஐஎஇஎஸ்இ) பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள், 01.10.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.



இத்தேர்விற்கு மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.



எனவே, மாணவர்கள் இத்தேர்விற்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 22.08.2022 முதல் 09.09.2022 வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/-சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு
அறிவுறுத்தப்படுகிறது.

Monday, August 01, 2022

August 01, 2022

மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை நூதன தண்டனை!

மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை நூதன தண்டனை!

தவறு செய்யும் மாணவர்களுக்கு, திருக்குறள்களை படித்து பொருளோடு ஆசிரியரிடம் எழுதிக்காட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட விநோத தண்டனைகளை வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துதறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கற்றல் குறைபாடு

ஒரு மாணவர் சரியாக படிக்கவில்லை என்றால் முதலில் அந்த மாணவரின் கற்றல் குறைபாடு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். பின்னர் முறையான ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

பெற்றோரிடம் வசூலித்தல்

பள்ளி சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால், சேதமடைந்த பொருளை மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மாற்றித்தர வேண்டும்.

அத்துமீறிய செயல்கள்

பஸ்களில் தொங்கிக்கொண்டு பயணம், பொது இடங்களில் இடையூறு ஏற்படுத்துதல், ஆசிரியர்களை அவமதித்தல், ராகிங், சாதி-மத அடிப்படையில் பிற மாணவர்களை புண்படுத்துதல், உருவகேலி, பள்ளிச்சுவர்களில் படங்கள் வரைதல், தகாத வார்த்தைகள் பேசுதல் போன்றவை மாணவர்கள் அடிக்கடி செய்யும் தவறுகள் ஆகும். இந்த செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவருக்கு முதலில் பள்ளி ஆலோசகர் தக்க ஆலோசனைகளை வழங்கவேண்டும்.

அந்த மாணவர் 2-வது, 3-வது முறையாக இதே தவறை செய்தால் சில ஒழுங்குமுறை நுட்பங்களை ஆசிரியர்கள் கையாளலாம். நூதன தண்டனைகள்

5 திருக்குறள்களை படித்து பொருளோடு ஆசிரியரிடம் எழுதிக்காட்ட வேண்டும்.

2 நீதிக்கதைகளை வகுப்பறையில் சொல்ல வேண்டும்.

5 செய்தி துணுக்குகளை சேகரித்து வகுப்பறையில் ஒரு வாரத்துக்கு படித்துக்காட்ட வேண்டும்.

ஒரு வாரத்துக்கு வகுப்பு தலைவராக பொறுப்பேற்க வேண்டும்.

5 வரலாற்று தலைவர்கள் பற்றி வகுப்பறையில் எடுத்துரைக்க வேண்டும்.

நல்ல பழக்கவழக்கங்கள், பாதுகாப்பு மற்றும் முதலுதவி பற்றி வரைபடம் (சார்ட்) எழுதவேண்டும்.

பள்ளியில் சிறிய காய்-கனி தோட்டம் அமைக்கவேண்டும்.

பிளாஸ்டிக் மற்றும் இதர பொருட்களை வைத்து கைவினைப்பொருட்கள் தயாரிக்கவேண்டும்.

அந்த மாணவருக்கு தன் தவறை திருத்திக்கொள்ள ஒரு மணி நேரம் அவகாசம் தந்து, ஏன் இந்த தவறை செய்தார் என எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கச் செய்ய வேண்டும். திருந்த வாய்ப்பு

அதற்கு பிறகும் அந்த மாணவர் தவறை உணரவில்லை என்றால் அருகேயுள்ள போலீஸ் நிலையத்தில் இருந்து குழந்தைநேய அதிகாரி மூலம் அறிவுரை வழங்கலாம். அதன் பின்னரும் தவறுகள் தொடர்ந்தால் அருகேயுள்ள அரசு பள்ளிக்கு அந்த மாணவரை மாற்றலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆக தவறு செய்யும் மாணவர்கள், தங்கள் தவற்றைத் திருத்திக்கொள்ள பலமுறை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Sunday, July 31, 2022

July 31, 2022

100க்கு 151 மார்க் எடுத்த மாணவர்!

பீகார் மாநிலத்தில் பல்கலை ஒன்றின் மாணவர் அரசியல் பாட பிரிவில் 100க்கு 151 மார்க்குகள் எடுத்துள்ளார். இது அச்சுபிழை காரணம் என பல்கலை., தெரிவித்து உள்ளது.

பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ளது லலித்நாராயண்மிதிலா பல்கலைகழகம். இந்த பல்கலைகழகத்தில் ஹானர்ஸ் இளங்கலை பிரிவு மாணவர் ஒருவர் அரசியல் பாட தேர்வை எழுதினார். இதில் அவர் 100க்கு 151 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்த மதிப்பெண் வித்தியாசம் குறித்து மாணவர் கூறுகையில் இவை தற்காலிக மதிப்பெண் பட்டியல் என்ற போதிலும் கடைசி நேரத்திலாவது அதிகாரிகள் மதிப்பெண் பட்டியலை சரி செய்து இருந்திருக்கலாம் என தெரிவித்தார். இதே பல்கலை.,யை சேர்ந்த பி.காம் மாணவர் ஒருவர் கணக்கு மற்றும் நிதிதாள் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் பெற்றுள்ளார். இருப்பினும் அவர் அடுத்த கட்ட தரத்திற்கு உயர்த்தப்பட்டு உள்ளார். இதை கண்டுபிடித்த மாணவர் தவறை சுட்டிக்காட்டியதை அடுத்து அவருக்கு சரியான மதிப்பெண் பட்டியலை பல்கலை நிர்வாகம் வழங்கி உள்ளது.

இச்சம்பவம் குறித்து பல்கலைகழகத்தின் பதிவாளர் முஷ்டாக் அகமது கூறுகையில் மேற்கண்ட இரண்டு மதிப்பெண் தாள்களிலும் தட்டச்சு பிழைகள் இருந்தன. அவை கண்டுபிடித்த பிறகு சரியான மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு விட்டன. இவைகள் வெறும் அச்சுபிழை மட்டுமே வேறு காரணங்கள் ஒன்றும் இல்லை என தெரிவித்தார்.

Tuesday, July 26, 2022

July 26, 2022

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு முதல்வரின் அறிவுரை

பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

மாணவிகளுக்கு மன, உடல் ரீதியாக இழி செயல் நடந்தால் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது

மாணவர்கள் அவமானத்தை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்

இதையும் படிக்க | பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் சார்பாக 41 பக்கங்கள் அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் செயல்பாட்டுத் திட்டம் வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு

மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் கூடவேக்கூடாது; தலைநிமிரும் எண்ணமே வேண்டும்

மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் மனம் விட்டு பேச வேண்டும்

படிப்போடு கல்வி முடிவதில்லை; பாடம் நடத்திய பிறகு ஆசிரியர் பணி முடிந்துவிடாது

கல்வி நிறுவனம் நடத்துவோர் தொழில் வர்த்தகமாக இல்லாமல் தொண்டாக நினைக்க வேண்டும்

- சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

Wednesday, July 13, 2022

July 13, 2022

பள்ளிகளில் மாணவர்களுக்கு காகிதக் கலையை கற்றுத் தர வடமாநில இளைஞர்களுக்கு அனுமதி: தமிழ் ஆர்வலர்கள் அதிருப்தி

தமிழகத்தில் கரோனா காலகட்டத்துக்கு பிறகு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களிடையே கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை குறைப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ள இல்லம் தேடி கல்வித் திட்டம் கல்வியாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதன்தொடர்ச்சியாக நடப்பு கல்வியாண்டில் 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்விஇணைச் செயல்பாடுகள் என்ற பாடவேளை சேர்க்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த பாடவேளைகளில் இலக்கிய மன்றம், சுற்றுச்சூழல் மன்றம், விநாடி வினா மன்றம் போன்ற மன்ற செயல்பாடுகள் மற்றும் நூல் வாசிப்பு, நுண்கலைகள் போன்ற கலைச் செயல்பாடுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், நுண்கலை பாடவேளையில் இடம்பெற்றுள்ள காகித கலையை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வடமாநில இளைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பாசிரியர்கள் ஏற்கெனவே உள்ள நிலையில், இதைக்கற்றுக் கொடுக்க வட மாநில இளைஞர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பது கல்வியாளர்கள், தமிழ் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ் கலை இலக்கியப் பேரவையின் திருச்சிமாவட்டச் செயலாளர் மு.த.கவித்துவன் கூறியது: வடமாநில இளைஞர்கள் சிலர் தமிழக பள்ளிக் கல்வித்துறையின் அலுவலர்கள் கையொப்பமிட்ட ஆணையுடன் பள்ளிகளுக்கு வந்து, காகிதக் கலையை கற்றுத் தருவதாக கூறுகின்றனர். அவர்கள் மாணவர்களிடம் பணம் எதுவும் வசூலிக்கக் கூடாது என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவர்கள் கொண்டுவரும் காகிதக் கலை புத்தகத்தை மாணவர்களிடம் விற்கும் வேலையைத் துரிதமாகச் செய்து வருகின்றனர். தமிழகத்தில் நேர்த்தியான சிறப்பாசிரியர்கள் இருக்கும்போது, இதற்கு வடமாநிலத்தவரை அனுமதித்திருப்பது கண்டனத்துக்குரியது என்றார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘காகிதக் கலை பயிற்சியை சிறப்பாசிரியர்கள் கொண்டு வழங்க முடியாது. அதற்கான பிரத்யேக பயிற்சி பெற்ற கைவினை கலைஞர்களை கொண்டுதான் வழங்கப்பட வேண்டும்.

வழக்கமாக யோகா, காகிதக் கலை உள்ளிட்ட கல்வி இணை செயல்பாடுகள் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் இலவசமாக மாணவர்களுக்கு வழங்கப்படும். அதன் அடிப்படையில் தற்போது காகிதக் கலை பயிற்சிஅளிக்க டெல்லியை சேர்ந்த நிபுணர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இதில் உள்நோக்கம் இல்லை.

குறைபாடுகள் இருப்பின் அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கைவினை கலைஞர்கள் யாரேனும் தன்னார்வ அடிப்படையில் பயிற்சி அளிக்க முன் வந்தால் அவர்களுக்கும் வாய்ப்பு தரப்படும்’’ என்றனர்.

Monday, July 11, 2022

July 11, 2022

மாணவர்களின் புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்கான ‘இன்ஸ்பயர்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்கான மத்திய அரசின் ‘இன்ஸ்பயர்’ விருதுக்கு, தகுதியான பள்ளி மாணவர்களின் பெயரை செப்.30-ம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் எஸ்.சவுந்தரராஜ பெருமாள், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறை சார்பில் ஆண்டுதோறும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ‘இன்ஸ்பயர்’ விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டில் விருதுக்கு மாணவர்களை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.

எனவே, 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.inspireawards-dst.gov.in என்ற இணையதளத்தில் செப்.30-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் வகுப்புக்கு 5 பேரையும், நடுநிலைப் பள்ளிகளில் 3 பேரையும் பதிவு செய்யலாம். அதிகப்படியான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் ரூ.10,000 செலுத்தப்படும். எனவே, வங்கிக் கணக்கு விவரங்களை பதிவு செய்யும்போது, மாணவர்கள் பெயரிலான தனி கணக்காக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை முதன்மை கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog