Breaking

Showing posts with label anbumani. Show all posts
Showing posts with label anbumani. Show all posts

Saturday, September 21, 2024

September 21, 2024

திமுக ஆட்சியில் தனியார் நிறுவனங்களில் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பா? எங்கு, எப்போது? வெள்ளை அறிக்கை தேவை! -பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை

Saturday, February 10, 2024

February 10, 2024

மருத்துவக்கல்வி: 3 ஆண்டுகளில் ஒரு கல்லூரி கூட தொடங்கப்படவில்லை. என்ன செய்யப் போகிறது திமுக அரசு?

மருத்துவக்கல்வி: 3 ஆண்டுகளில் ஓரிடம், ஒரு கல்லூரி கூட தொடங்கப்படவில்லை. என்ன செய்யப் போகிறது திமுக அரசு? - பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி Medical Education: Not a single college has been started in 3 years. What is the DMK government going to do? - PMK. Chairman Anbumani Ramadoss Question

தமிழ்நாட்டில் 2024-25ஆம் ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவோ, புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவோ தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அடுத்த ஆண்டு முதல் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதோ, மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிப்பதோ சாத்தியமில்லை என்றாகி விட்ட நிலையில், மருத்துவக் கல்வி கட்டமைப்பை விரிவாக்குவதில் அரசு காட்டும் அலட்சியம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ள நிலையில், அவற்றில் 32 மாவட்டங்களில் மட்டும் தான் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற கொள்கையின் அடிப்படையில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இதுவரை புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கோ, ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் 32 மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை ஏற்படுத்துவதற்கோ எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.

இதன்மூலம், தமிழ்நாட்டில் மருத்துவக் கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தமிழக அரசு தவறவிட்டு விட்டது. 10 லட்சம் மக்கள்தொகைக்கு 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற புதிய விதிமுறையை கடந்த ஆகஸ்ட் 16-ஆம் நாள் தேசிய மருத்துவ ஆணையம் நடைமுறைப்படுத்தியது. அந்த விதிகளின்படி, தமிழக மக்கள் தொகைக்கு தேவையானதை விட கூடுதலான மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் இருப்பதால், தமிழ்நாட்டில் இனி புதிய மருத்துவக் கல்லூரிகள் அனுமதிக்கப்படாது என்றும் மருத்துவ ஆணையம் ஆணையிட்டது. அதற்கு எதிராக தமிழ்நாட்டில் இருந்து நான் தான் முதன்முதலில் குரல் கொடுத்தேன். மத்திய சுகாதாரத்துறையின் முன்னாள் அமைச்சர் என்ற முறையில் இந்தியப் பிரதமருக்கு கடிதமும் எழுதினேன். அதன் பயனாக தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறப்பதற்கான கட்டுப்பாடுகள் ஓராண்டுக்கு தளர்த்தப்பட்டன. அதன்படி 2024&-25ஆம் ஆண்டில் புதிய கல்லூரிகளை திறக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியது. அடுத்த ஆண்டு முதல் தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க முடியாது, கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை உருவாக்க முடியாது எனும் போது, பா.ம.கவின் போராட்டத்தால் கிடைத்த கடைசி வாய்ப்பை தமிழக அரசு பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

ஆனால், அந்த வாய்ப்பை தமிழக அரசு தவறவிட்டு விட்டது. அதுமட்டுமின்றி புதிய கல்லூரிகள் மற்றும் கூடுதல் இடங்களுக்கு விண்ணப்பிக்காதது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குனர் சங்குமணி அளித்துள்ள விளக்கம் வருத்தத்தை அளிக்கிறது,‘‘இந்தியாவிலேயே எங்களிடம் (தமிழ்நாட்டில்) தான்  அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றை அதே எண்ணிக்கையிலான  இடங்களுடன் தொடர்ந்து நடத்துவோம்’’ என்று மருத்துவர் சங்குமணி கூறியிருக்கிறார். புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்கும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என்பதையே மருத்துவக்கல்வி இயக்குனர் அளித்துள்ள விளக்கம் காட்டுகிறது. இது மருத்துவக் கல்வி வளர்ச்சியில் பின்னடைவை ஏற்படுத்தும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக எண்ணிக்கையில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனாலும், அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கபட வேண்டும் என்பது தான் தமிழக அரசின் அறிவிக்கப்பட்ட நிலைப்பாடு ஆகும். அந்த இலக்கை எட்ட தமிழக அரசு அனைத்து வகைகளிலும் போராடியிருக்க வேண்டும். தமிழக அரசு நினைத்திருந்தால் அதன் சொந்த நிதியில் கடந்த 3 ஆண்டுகளில் தலா இரு கல்லூரிகள் வீதம் உருவாக்கி அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகளை அமைத்திருக்க முடியும். ஆனால், மத்திய அரசு நிதியில் மருத்துவக் கல்லூரிகளை அமைக்கப் போகிறோம், அதற்காக மனு கொடுத்திருக்கிறோம் என்று வெற்று வசனம் பேசியே 3 ஆண்டுகளை தமிழக அரசு வீணடித்து விட்டது.

ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் ஒரு புதிய மருத்துவக் கல்லூரியைக் கூட திறக்கவில்லை; ஒரே ஒரு மருத்துவ இடத்தைக் கூட கூடுதலாக உருவாக்கவில்லை என்பதை மன்னிக்கவே முடியாது. 1984&ஆம் ஆண்டில் தொடங்கி கடந்த 40 ஆண்டுகளில் முழுமையாக நீடித்த எந்த ஆட்சியிலும் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்ததே இல்லை.


40 ஆண்டுகளில் நடப்பு திமுக அரசு தான், அதன் ஐந்தாண்டு ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட திறக்கவில்லை; ஒரே ஒரு கூடுதல் மாணவர் சேர்க்கை இடத்தைக் கூட உருவாக்கவில்லை என்ற அவப்பெயரை சுமக்கப் போகிறது.

திமுக அரசு அதன் கடந்தகால தவறுகளை களைவதற்கு சிறந்த வழி புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது மட்டும் தான். எனவே, தேசிய மருத்துவ ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று, மருத்துவக் கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களிலும் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசே அதன் சொந்த நிதியில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Saturday, January 20, 2024

January 20, 2024

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 7 ஆண்டாக உயர்த்தப்படாத கிரீமிலேயர் வரம்பு: இரு மடங்காக உயர்த்த அன்புமணி இராமதாஸ் அறிக்கை



7 ஆண்டாக உயர்த்தப்படாத கிரீமிலேயர் வரம்பு: இரு மடங்காக உயர்த்த வேண்டும்! - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரிமீலேயர் வருமான வரம்பு  ரூ. 8 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டு 7 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இன்று வரை அந்த வரம்பு உயர்த்தப்படவில்லை. கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அதை பரிசீலிக்கக் கூட மத்திய அரசு முன்வராதது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பெரும் வருத்தத்திலும், மன உளைச்சலிலும் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் கிரீமிலேயர் என்ற தத்துவம் பின்பற்றப்பட வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. மண்டல் ஆணைய பரிந்துரைப்படி, மத்திய அரசின் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு  வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 1992&ஆம் ஆண்டில் அளித்த தீர்ப்பில் கிரீமிலேயர் என்ற தத்துவத்தை திணித்தது. அதன்படி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் அனைவருக்கும் 27% இட ஒதுக்கீடு வழங்கப்படாது. மாறாக, அவர்களில் கிரீமிலேயர் என்றழைக்கப்படும் உயர்வருவாய் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படும்; குறைந்த வருவாய் உள்ளவர்களுக்கு மட்டுமே ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கப்படும்.1993-ஆம் ஆண்டில் கிரீமிலேயர் முறை அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ. 1 லட்சமாக இருந்தது. அதன்பின் பணவீக்கமும், வருமானமும் குறிப்பிடத்தக்க அளவில் உயராததால் 11 ஆண்டுகளாக கிரீமிலேயர் உச்சவரம்பு உயர்த்தப்படவில்லை. 2004-ம் ஆண்டில் ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்ட கிரீமிலேயர் வரம்பு, அதன்பின் 2008-ம் ஆண்டில் ரூ.4.5 லட்சம், 2013-ஆம் ஆண்டில் ரூ. 6 லட்சம் எனப் படிப்படியாக உயர்த்தப்பட்டு, 2017-ஆம் ஆண்டில் ரூ. 8 லட்சம் என்ற அளவை அடைந்தது. அதன்பின் 2020, 2023 ஆகிய ஆண்டுகளில் கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட்டிருக்க வேண்டும்; ஆனால், அவ்வாறு உயர்த்தப்படாததால் தான் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பெரும்பான்மையினரால் 27% இட ஒதுக்கீட்டை பெற முடியாத நிலை உருவாகியுள்ளது.

2020-ம் ஆண்டில் ஏற்பட்ட கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாகவும்,  கிரீமிலேயர் வரம்பை கணக்கிடுவதில் ஊதியம் மற்றும் வேளாண்மை  வருவாயையும்  சேர்த்துக் கொள்ளலாம் என்ற வல்லுனர் குழு பரிந்துரையை செயல்படுத்துவதற்கு  எழுந்த எதிர்ப்பு ஆகியவற்றின் காரணமாக அம்முயற்சி தடைபட்டது. அதற்குப் பிறகு 2023&ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த ஆண்டில் அதற்கான முயற்சிகளைக் கூட மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்பது வருத்தமான உண்மை.

கிரீமிலேயர் வரம்பை உயர்த்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. அண்மையில் இது தொடர்பான வினா ஒன்றுக்கு நாடாளுமன்றத்தில் விடையளித்த மத்திய சமூகநீதித்துறை இணை அமைச்சர் வீரேந்திரகுமார், ‘‘பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயர் வரம்பு  ஆண்டுக்கு ரூ.8 லட்சமாக உள்ளது. இதுவே போதுமானது என்று மத்திய அரசு கருதுகிறது. இது தொடர்பாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து எந்த பரிந்துரையும் கோரப்படவில்லை’’ என்று கூறினார். மத்திய அரசின் இந்த நிலைப்பாடு முற்றிலும் தவறானது; கள நிலைக்கு முற்றிலும் எதிரானது ஆகும். 2017&ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 7 ஆண்டுகளில் பணவீக்கம் கடுமையாக உயர்த்திருக்கிறது; அதை சமாளிக்கும் வகையில் பல்வேறு ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானமும் உயர்ந்துள்ளது. அதற்கு இணையாக கிரீமிலேயர் வரம்பு 2020&ஆம் ஆண்டில் ரூ.12 லட்சமாகவும், 2023&ஆம் ஆண்டில் ரூ.15 லட்சமாகவும் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யப்படாததால் கடந்த சில ஆண்டுகளில் வருவாய் அதிகரித்த பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கிரீமிலேயர்களாக கருதப்பட்டு, இட ஒதுக்கீட்டு வரம்பிலிருந்து நீக்கப்பட்டு விட்டனர். இதை விட பெரிய சமூக அநீதி இருக்க முடியாது. கிரீமிலேயர் வரம்பை உயர்த்துவதற்கான பரிந்துரையை மத்திய அரசுக்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வழங்குவது வழக்கம். ஆனால், எட்டாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடந்த 2022&ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காலாவதியாகி இரு ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், இன்று வரை ஒன்பதாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்படவில்லை. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்ட பிறகு தான், ஆணையத்திற்கு புதிய தலைவரும், ஒரே ஓர் உறுப்பினரும் நியமிக்கப்பட்டனர். ஆனாலும், ஆணையம்  இன்னும் செயல்படாமல் தான் கிடக்கிறது. ஒன்பதாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் குறித்த தேதியில் அமைக்கப்பட்டிருந்தால், அதன் பரிந்துரைப்படி கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட்டிருக்கக் கூடும்.

கல்வியிலும், சமூக நிலையிலும் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும். அக்கடமையை நிறைவேற்றும் வகையில்,  கிரிமீலேயர் வரம்பை இப்போதுள்ள ஆண்டுக்கு ரூ.8 லட்சம் என்ற அளவிலிருந்து, இரு மடங்காக, அதாவது ரூ.16 லட்சமாக உயர்த்தி மத்திய அரசு ஆணையிட வேண்டும். அத்துடன் ஒன்பதாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து,  அதை முழு அளவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Friday, December 15, 2023

December 15, 2023

10 மாதங்களாகியும் வெளியிடப்படாத தேர்வு முடிவுகள்: மாணவர்கள் வாழ்க்கையுடன் TNPSCயும், அரசும் விளையாடக்கூடாது! - Anbumani Ramadoss

10 மாதங்களாகியும் வெளியிடப்படாத தேர்வு முடிவுகள்: மாணவர்கள் வாழ்க்கையுடன் TNPSCயும், அரசும் விளையாடக்கூடாது! - Anbumani Ramadoss - Exam results not released after 10 months: TNPSC and Govt should not play with students' lives!



10 மாதங்களாகியும் வெளியிடப்படாத தொகுதி 2 தேர்வு முடிவுகள்: மாணவர்கள் வாழ்க்கையுடன் டி.என்.பி.எஸ்.சியும், அரசும் விளையாடக்கூடாது!

தமிழக அரசுத் துறைகளில் தொகுதி 2, 2 ஏ பணிகளில் சேர்ந்து விடலாம் என்று ஆவலுடன் காத்திருந்த போட்டித்தேர்வர்களை தமிழக அரசும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும் மீண்டும் ஒரு முறை ஏமாற்றியிருக்கின்றன. தொகுதி 2, 2 ஏ தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் திருத்தும்பணி 80% நிறைவடைந்து விட்டது, மீதமுள்ள பணிகளும் முடிக்கப்பட்டு திசம்பர் முதல் வாரத்தில் 6000 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கைகளால் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் அறிவித்திருந்த நிலையில், திசம்பர் இரண்டாவது வாரம் நிறைவடைந்தும் எதுவும் நடக்கவில்லை. போட்டித்தேர்வு எழுதியவர்களின் மன உளைச்சல் அதிகரித்தது தான் மிச்சம்.

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள இரண்டாம் தொகுதி பணியிடங்கள் 121, தொகுதி 2ஏ பணியிடங்கள் 5097 ஆகியவற்றை நிரப்புவதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ஆம் நாள் வெளியிடப்பட்டது. அப்பணிகளுக்கான முதனிலைத் தேர்வு முடிவுகள் முடிந்து கடந்த பிப்ரவரி 25-ஆம் நாள் நடத்தப்பட்ட முதன்மைத் தேர்வுகளின் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதமே வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நவம்பர் மாதம் வரை வெளியிடப்படாததை கடந்த நவம்பர் 6-ஆம் தேதி அறிக்கை மூலம் சுட்டிக்காட்டியிருந்தேன். ஆனால், தாமதமே இல்லை; திசம்பரில் முடிவு வெளியிடப்படும் என்று அமைச்சர் அளித்த வாக்குறுதி காற்றுடன் கலந்து விட்டது. ஆமையிடமும் வீழும் வேகத்தில் தான் டி.என்.பி.எஸ்.சி செயல்படுகிறது. தொகுதி 2, 2ஏ பணிகளுக்கான முதன்மைத் தேர்வை எழுதியவர்கள் வெறும் 52,000 பேர் மட்டும் தான். முதன்மைத் தேர்வில் ஒவ்வொரு போட்டியாளரும் 2 தாள்களை எழுத வேண்டும்; அதன்படி மொத்தம் 1.04 லட்சம் விடைத்தாள்களை திருத்த வேண்டும். அவை அனைத்தும் இரண்டே வகைப்பட்டவை தான். அவற்றை மிக எளிதாக திருத்தி விட முடியும். ஆனால் அதைக்கூட 10 மாதங்களாக திருத்தி, முடிவுகளை வெளியிட முடியாத நிலையில் தான் டி.என்.பி.எஸ். சி இருக்கிறது என்றால், அதற்கு பொறுப்பானவர்களும், ஆட்சியாளர்களும் போட்டித் தேர்வர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

தொகுதி 2, 2ஏ பணிகளுக்கான போட்டித்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு இரு ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. ஒரு தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதில் தொடங்கி, முடிவுகளை அறிவதற்காக இரு ஆண்டுகள் காத்திருப்பது போட்டித் தேர்வர்களின் மனநிலையை கடுமையாக பாதிக்கும். ஆனால், இதுகுறித்த அக்கறை எதுவும் அரசுக்கு இல்லை. அதனால் தான் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவியை ஒன்றரை ஆண்டுகளாக காலியாக வைத்துக் கொண்டு, வெறும் நான்கு உறுப்பினர்களுடன் ஆணையத்தை அரசு நடத்தி வருகிறது. 2023-ஆம் ஆண்டு நிறைவடையவிருக்கும் நிலையில், இதுவரை 19 ஆள்தேர்வு அறிவிக்கைகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை வெறும் 4217 மட்டுமே. தேர்வாணைய வரலாற்றில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது இந்த ஆண்டாகத் தான் இருக்கக்கூடும். இவ்வளவு மந்தமாக செயல்படுவதற்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்ற அமைப்பே தேவையில்லை.

தேர்வர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொகுதி 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒரு வாரத்தில் வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிய தலைவரையும், 10 உறுப்பினர்களையும் உடனடியாக நியமிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Thursday, December 07, 2023

December 07, 2023

புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க மறுப்பு: தமிழக நலனை திமுக அரசு தாரைவார்த்து விட்டது!-

புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க மறுப்பு: தமிழக நலனை திமுக அரசு தாரைவார்த்து விட்டது!- பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்.

இந்தியா முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பதற்காக தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியிருந்த காலக்கெடு நவம்பர் 26-ஆம் நாளுடன் நிறைவடைந்து விட்ட நிலையில், தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்காக விண்ணப்பிக்க தமிழக அரசு தவறி விட்டது. 2025-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில், கிடைத்த அரிய வாய்ப்பை தமிழக அரசு தவற விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப் பட்டுள்ளன. மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற கொள்கையின் அடிப்படையில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த் வலியுறுத்தி வருகிறது. 2021 தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், இதுவரை ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட தமிழக அரசு தொடங்கவில்லை. அதற்கான நடவடிக்கைகளையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. மற்றொருபக்கம், 10 லட்சம் மக்கள்தொகைக்கு 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற புதிய விதிமுறையை கடந்த ஆகஸ்ட் 16-ஆம் நாள் தேசிய மருத்துவ ஆணையம் நடைமுறைப்படுத்தியது. அந்த விதிகளின்படி, தமிழக மக்கள்தொகைக்கு தேவையானதை விட கூடுதலான மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் இருப்பதால், தமிழ்நாட்டில் இனி புதிய மருத்துவக் கல்லூரிகள் அனுமதிக்கப்படாது என்றும் மருத்துவ ஆணையம் ஆணையிட்டது. அதற்கு எதிராக தமிழ்நாட்டில் இருந்து நான் தான் முதன்முதலில் குரல் கொடுத்தேன். மத்திய சுகாதாரத்துறையின் முன்னாள் அமைச்சர் என்ற முறையில் பிரதமருக்கு கடிதமும் எழுதினேன். அதன் பயனாக தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறப்பதற்கான கட்டுப்பாடுகள் ஓராண்டுக்கு தளர்த்தப்பட்டன. அதன்படி 2024-25ஆம் ஆண்டில் புதிய கல்லூரிகளை திறக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியது.

அதன்படி, 2024-25ஆம் ஆண்டில் புதிய கல்லூரிகளைத் தொடங்க நவம்பர் 16-ஆம் நாள் முதல் 26-ஆம் நாள் வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க வேண்டும் என்பதில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால் புதிய மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக 2025-26ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முடியாது என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இது தான் கடைசி வாய்ப்பு என்பதால் அதை தமிழக அரசு உறுதியாக பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கத் தவறியதன் மூலம் தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை தாரை வார்த்து விட்டது. இது அரசின் பெரும் தோல்வி. புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கத் தவறியிருப்பதன் மூலம், தேசிய மருத்துவ ஆணையம் அதன் விதிகளை திருத்தாத வரை, தமிழ்நாட்டில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவே முடியாது என்ற நிலையை திமுக அரசு ஏற்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஓர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற கனவை நனவாக்கவே முடியாத பின்னடைவை திமுக அரசு ஏற்படுத்தியிருக்கிறது. புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்காக விண்ணப்பிக்காதது ஏன்? என்பது குறித்து தமிழக அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக விண்ணப்பிக்கவில்லை. ஆனால், மத்திய அரசு நிதியுதவியுடன் அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முயற்சி செய்து வருவதால் தான் இப்போது புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கவில்லை என்று அரசு சார்பில் அதிகாரப்பூர்வமற்ற வகையில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

அரசு அல்லது தனியார் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கும் திட்டத்தை கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 3 கட்டங்களாக மத்திய அரசு செயல்படுத்தியது. இத்திட்டத்தின்படி மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான செலவில் மத்திய அரசு 60 விழுக்காட்டையும், மாநில அரசு 40 விழுக்காட்டையும் பகிர்ந்து கொள்ளும். இத்திட்டத்தின்படி முதல் இரு கட்டங்களில் அனுமதிக்கப்பட்ட 82 மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று கூட தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. மூன்றாம் கட்டமாக 75 மருத்துவக்கல்லூரிகள் அறிவிக்கப்பட்ட போது, அவற்றில் 15 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று பா.ம.க. தான் முதன்முதலில் வலியுறுத்தியது. அதைத் தொடர்ந்து தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளால் தமிழகத்திற்கு மொத்தம் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் கிடைத்தன. அந்தத் திட்டம் முடிவுக்கு வந்து விட்ட நிலையில், இனி மத்திய அரசு உதவியுடன் தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க வாய்ப்பில்லை.

இந்த உண்மையை மறைத்து விட்டு, மத்திய அரசு உதவியுடன் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்போவதாக தமிழக அரசு கூறுவது மக்களை ஏமாற்றும் செயலாகும். 3 ஆண்டுகள் ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையில், புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், ஐந்தாண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட தொடங்காத அரசு என்ற அவப்பெயரை இன்றைய அரசு சுமக்க நேரிடும். எனவே, தேசிய மருத்துவ ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று, 6 மாவட்டங்களிலும் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசே அதன் சொந்த நிதியில் தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Thursday, September 21, 2023

September 21, 2023

மைனஸ் மதிப்பெண் எடுத்தாலே முதுநிலை மருத்துவம் சேரலாம் என்றால், நீட் தேர்வு தகுதியை குறைக்கிறதா, அதிகரிக்கிறதா?



மைனஸ் மதிப்பெண் எடுத்தாலே முதுநிலை மருத்துவம் சேரலாம் என்றால், நீட் தேர்வு தகுதியை குறைக்கிறதா, அதிகரிக்கிறதா? - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வினா?.

இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தகுதி மதிப்பெண்கள் பூஜ்ஜியம் பெர்சைன்டைல் ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. அதாவது முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எழுதியவர்கள் அனைவருமே, கோடிக்கணக்கில் பணம் இருந்தால் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரலாம் என்பது தான் இதன் பொருளாகும். நடப்பாண்டிற்கான முதுநிலை நீட் தேர்வில் 30 பேர் ஒற்றை இலக்கத்திலும், 14 பேர் பூஜ்ஜியம் மதிப்பெண்களும், 13 எதிர்மறை மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு இப்போது கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இது மருத்துவக் கல்வியின் தரத்தை எந்த வகையில் உயர்த்தாது, கண்டிப்பாக குறைக்கும். இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.

மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டில் 8 ஆயிரத்துக்கும் கூடுதலான முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் நிரப்பப்படாமல் போகும் என்றும், அந்த இடங்களை நிரப்ப தகுதியான மாணவர்கள் இல்லை என்பதால் தான் தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதாக மத்திய அரசின் தரப்பிலும், தேசிய மருத்துவ ஆணையத்தின் தரப்பிலும் கூறப்படுகிறது. இது சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாத வாதம் ஆகும். காலியாக இருக்கும் இடங்களில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவை தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் தான் உள்ளன. அவற்றின் வருமானம் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. முதுநிலை நீட் தேர்வுக்கான விதிகளின்படி, மொத்தம் 800 மதிப்பெண் கொண்ட தேர்வில் பொதுப்போட்டிப் பிரிவினருக்கு 291 மதிப்பெண்களும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 257 மதிப்பெண்களும் தகுதி மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தன. தேர்வு எழுதிய 2 லட்சத்து 517 பேரில், 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் மேற்கண்ட மதிப்பெண்களை பெற்று முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர். இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்பில் உள்ள மொத்த இடங்களே 45,337 தான். அவற்றை நிரப்ப அந்த இடங்களை விட கிட்டத்தட்ட மும்மடங்கினர் தகுதி பெற்று இருக்கும் போது, தகுதி மதிப்பெண்களை குறைத்து கூடுதலாக 80,000 பேருக்கு தகுதி வழங்க வேண்டிய தேவை என்ன?

முதுநிலை மருத்துவப் படிப்பில் காலியாக இருக்கும் இடங்களில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலான இடங்கள் தனியார் கல்லூரிகளில் தான் உள்ளன. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தமிழக அரசின் கல்வி நிறுவனங்களில் ஆண்டு கல்விக் கட்டணமே ரூ.20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை தான். ஆனால், தனியார் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கல்விக்கட்டணம் ரூ.40 லட்சத்துக்கும் அதிகம் ஆகும். இந்த அளவு கல்விக்கட்டணத்தை செலுத்துவது இதுவரை தகுதி பெற்ற மாணவர்களால் சாத்தியமில்லை என்பதால் தான், 8000 இடங்கள் நிரம்பவில்லை. இப்போது அந்தக் கட்டணத்தை செலுத்தும் அளவுக்கு புதிய போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கவே தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டு 80,000 பேருக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது சமூக அநீதி ஆகும். முதுநிலை மருத்துவக் கல்வி இடங்கள் வீணாகக் கூடாது, அவ்வாறு வீணானால் மருத்துவ வல்லுனர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்விக் கட்டணத்தை குறைத்து, அந்த இடங்கள் அனைத்தையும் அரசே கலந்தாய்வு மூலம் நிரப்பினால், ஏற்கனவே தகுதி பெற்ற மாணவர்களைக் கொண்டு அனைத்து இடங்களையும் நிரப்ப முடியும். ஆனால், தகுதியான மாணவர்கள் தேவையில்லை, பணம் வைத்துள்ள மாணவர்கள் தான் தேவை என்று தேசிய மருத்துவ ஆணையமும், தனியார் கல்லூரிகளும் எதிர்பார்ப்பது தான் அனைத்து சிக்கல்களுக்கும், சீரழிவுகளுக்கும் காரணம் ஆகும்.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு 2010-ஆம் ஆண்டு முதன்முறையாக அறிவிக்கப்பட்ட போது, தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் விலை வைத்து விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதும் தான் அதன் நோக்கங்கள் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால், அவை இரண்டுமே நடக்கவில்லை. மாறாக தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தகுதியைப் பற்றிக் கவலைப்படாமல் கோடிக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதற்கு துணை செய்வதற்காகவே நீட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது இப்போது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவும், மருத்துவக் கல்வி வணிகமயமாவதை தடுக்கவும் நீட் தேர்வு எந்த வகையிலும் உதவவில்லை என்பதே உண்மை. எனவே, மருத்துவப் படிப்புக்கான அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Wednesday, September 13, 2023

September 13, 2023

உணவிலும் தீண்டாமை: மாணவர்களின் நெஞ்சங்களில் நஞ்சு கலக்கக் கூடாது



உணவிலும் தீண்டாமை: மாணவர்களின் நெஞ்சங்களில் நஞ்சு கலக்கக் கூடாது - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை அடுத்த உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பட்டியலினப் பெண் சமைத்த உணவை உட்கொள்ள மாணவர்கள் மறுப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் வேதனையளிக்கின்றன. சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதியார் பிறந்த மண்ணில் உணவில் கூட தீண்டாமை கடைபிடிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாடு முழுமைக்கும் அண்மையில் விரிவாக்கப்பட்ட காலை உணவுத் திட்டத்தில் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளது. அந்தப் பள்ளியில் முனிய செல்வி என்ற பட்டியலினப் பெண்மணி சமையலராக பணியாற்றி வருகிறார். அவர் சமைத்த உணவை தங்களின் பிள்ளைகள் சாப்பிட மாட்டார்கள் என்று பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர் அறிவித்ததைத் தொடர்ந்து, அப்பள்ளியில் பெரும்பான்மையான பிள்ளைகள் காலை உணவை உண்ணாமல் தவிர்த்து வந்துள்ளனர். உணவை சமைத்தவர் பட்டியலினத்தவர் என்பதால், அந்த உணவை சாப்பிடக்கூடாது என்று குழந்தைகளைத் தடுப்பது மிகக்கொடிய தீண்டாமைக் குற்றம்; இதை ஒருபோதும் மன்னிக்க முடியாது.

பொதுவாகவே குழந்தைகளின் மனம் கள்ளங்கபடமற்றது; உசிலம்பட்டி பள்ளி மாணவ, மாணவியரும் இதற்கு விதிவிலக்கு அல்ல. பட்டியலினப் பெண் சமைத்த காலை உணவை சாப்பிடுவதற்கு அவர்கள் தயாராகவே இருந்துள்ளனர். பல குழந்தைகள் உணவை சுவைத்துப் பார்த்து நன்றாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். அவர்களின் பெற்றோர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே, குழந்தைகள் காலை உணவை தவிர்த்துள்ளனர். பெற்றோருக்கும், சமையலருக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்சினைகள் தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் தலையீட்டைத் தொடர்ந்து இந்தச் சிக்கலுக்கு முடிவு காணப்பட்டிருப்பது மகிழ்ச்சியும், நிம்மதியும் அளிக்கிறது என்றாலும் கூட, உணவில் தீண்டாமை என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. பட்டியலினப் பெண் சமைத்தார் என்பதற்காக மாணவர்கள் உணவைப் புறக்கணிப்பதும், அவ்வாறு செய்ய அவர்களை அவர்களின் பெற்றோர் தூண்டுவதும் இப்போது தான் முதன்முதலில் நடக்கும் நிகழ்வுகள் அல்ல. ஏற்கனவே, பல இடங்களில் இத்தகைய நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. இவை எதிலுமே மாணவர்களுக்கு தொடர்பு இல்லை. பெற்றோரும், சுற்றத்தாரும் அளித்த அழுத்தம் காரணமாகவே இத்தகைய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. மாணவர்கள் பயிலும் நூலின் முதல் பக்கத்தில், அவர்கள் படிக்கும் முதல் சொற்றொடரே, ‘‘தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல்’’ என்பது தான். அத்தகைய குழந்தைகளை, பட்டியலினத்தவர் சமைத்த உணவை உண்ணக்கூடாது என்று தடுப்பது பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சைக் கலக்கும் செயல் ஆகும்.

சாதியின் பெயரால் ஒரு பிரிவினரை ஒதுக்கி வைக்கும் தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடிய காலத்திலிருந்து விலகி நாம் வெகுதூரம் பயணம் செய்து விட்டோம். சமத்துவ சமுதாயம் என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் நாம், கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்காமல் இலக்கை அடைவதில் தான் கவனம் செலுத்த வேண்டும். உணவில் தீண்டாமையை கடைபிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு, கடந்த வந்த பாதையிலேயே திரும்பிப் பயணிப்பது தான் பிற்போக்கான செயலாகும். இது கடந்த காலங்களில் நாம் போராடி, வென்றெடுத்த சமூகநீதியை குழிதோண்டி புதைப்பதற்கு ஒப்பானது. பட்டியலின சகோதரர்களும் மனிதர்கள் தான். தமிழ்நாட்டின் அனைத்து அசைவுகளிலும், மக்களின் அன்றாட வாழ்வுடன் தொடர்புடைய எல்லா நிகழ்வுகளிலும் அவர்களின் பங்களிப்பு உள்ளது. நிலத்தில் நெல்லை நடவு செய்வதில் தொடங்கி அறுவடை செய்வது வரை அவர்களின் உழைப்பு உள்ளது; காய்கறிகள் சாகுபடியிலும், விற்பனையிலும் அவர்கள் பங்கு வகிக்கின்றனர்; பால் உற்பத்தியில் அவர்கள் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது; நாம் வாழும் வீடுகளின் கட்டுமானம் அவர்கள் இல்லாவிட்டால் சாத்தியம் இல்லை. பட்டியலின மக்களின் இத்தகைய பங்களிப்புகளையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் நாம், அவர்கள் சமைத்த உணவை உண்ணக் கூடாது என்று குழந்தைகளை தடுப்பது தவறு; நியாயப்படுத்த முடியாதது.

எனவே, உணவில் தீண்டாமை போன்ற குற்றங்கள் குறித்து மக்களிடத்திலும், மாணவர்களிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அனைவரும் சமம் என்ற உணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் பட்டியலின மக்களை முன்னேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Thursday, April 06, 2023

April 06, 2023

நீட் விலக்கு சட்டத்துக்கு ஒப்புதல் தர தாமதிப்பதா?- அன்புமணி ராமதாஸ் கண்டனம்

நீட் விலக்கு சட்டத்துக்கு ஒப்புதல் தர தாமதிப்பதா?- அன்புமணி ராமதாஸ் கண்டனம்

நிஷாவின் தற்கொலை, நீட் தேர்வு தோல்வி அச்சம் காரணமாக நடப்பாண்டில் நிகழ்ந்துள்ள இரண்டாவது தற்கொலை. மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். சென்னை: பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

- நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக நெய்வேலியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நீட்டுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வருவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. நிஷாவின் தற்கொலை, நீட் தேர்வு தோல்வி அச்சம் காரணமாக நடப்பாண்டில் நிகழ்ந்துள்ள இரண்டாவது தற்கொலை ஆகும். நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதலை விரைவாகப் பெறுவதற்கு மத்திய அரசிற்கு தமிழ்நாடு அரசும் எந்த வகையிலும் அழுத்தம் தரவில்லை. நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெறும் விவகாரத்தில் செய்யப்படும் தாமதம் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சூழல் உருவாக்கப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு விரைவாக செயல்பட்டு நீட் விலக்கு சட்டத்திற்கு நடப்பாண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு முன்பாக ஒப்புதல் பெற வேண்டும். மத்திய அரசும் இனியும் தாமதிக்காமல் நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதேநேரத்தில் மருத்துவப் படிப்பை விட மனித உயிர் மேலானது என்பதால், நீட் தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொள்வதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Monday, April 03, 2023

April 03, 2023

ஆசிரியர்கள் நியமனம் அன்புமணி கோரிக்கை

ஆசிரியர்கள் நியமனம் அன்புமணி கோரிக்கை - Anbumani's request for appointment of teachers பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு பள்ளிகளும், கல்லூரிகளும் மேம்பட வேண்டும். கல்வித்தரம் உயர வேண்டும் என்றால் அனைத்து வகுப்புகளுக்கும், அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர்கள் அமர்த்தப்பட வேண்டும். அதை உறுதி செய்யும் வகையில், அரசு பள்ளிகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வுகள் எவ்வளவு கடினமானவை என்பதற்கு அண்மையில் வெளியான இரண்டாம் தாள் முடிவுகள் தான் சான்றாகும்.

Tuesday, March 28, 2023

March 28, 2023

Pay sacked teachers - பணிநிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்குக: அன்புமணி வலியுறுத்தல்



பணிநிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்குக: அன்புமணி வலியுறுத்தல்

பணிநிரவல் செய்யப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு உடனடியாக அரசு ஊதியம் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் 29.11.2022-ம் நாள் நடத்தப்பட்ட பணி நிரவல் கலந்தாய்வு மூலம் பல்வேறு பள்ளிகளில் அமர்த்தப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு இன்று வரை ஊதியம் வழங்கப்படவில்லை. பணி செய்த ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாதது சரியல்ல. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களில் பெரும்பான்மையினர் குடும்பத்துடன் புதிய பணியிடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். சிலர் தனியாக வாழ்ந்து வருகின்றனர். அதேநேரத்தில் 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத நிலையில் அவர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.


பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விவரங்கள் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை முறையில் (IFHRMS) பதிவேற்றம் செய்யப்படாதது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம். ஆசிரியர்களின் விவரங்களை பதிவு செய்ய இவ்வளவு காலம் ஆவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப நலன்களை கருத்தில் கொண்டு, அவர்களின் விவரங்களை ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை முறையில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Total Pageviews

Search This Blog