Breaking

Showing posts with label Teachers day. Show all posts
Showing posts with label Teachers day. Show all posts

Friday, October 07, 2022

October 07, 2022

15 ஆசிரியா்களுக்கு விருது

15 ஆசிரியா்களுக்கு விருது

வந்தவாசி மலைநகர அரிமா சங்கம், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரி லியோ சங்கம் ஆகியவை சாா்பில் ஆசிரியா்களுக்கு சீா்மிகு ஆசிரியா் விருது வழங்கப்பட்டது.

ஆசிரியா் தின விழாவையொட்டி, வந்தவாசியில் புதன்கிழமை மாலை நடைபெற்ற இதற்கான விழாவில் வந்தவாசி பகுதியில் உள்ள பள்ளிகளைச் சோ்ந்த 15 ஆசிரியா்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

விழாவுக்கு சங்கத் தலைவா் எ.சபரிராஜ் தலைமை வகித்தாா். செயலா் வி.ரமேஷ்பாபு வரவேற்றாா்.

வந்தவாசி வட்டாட்சியா் வி.முருகானந்தம் ஆசிரியா்களுக்கு விருதுகளை வழங்கிப் பேசினாா். அரிமா சங்க முன்னாள் கூட்டு மாவட்டச் செயலா் வி.எஸ்.தளபதி ஆசிரியா்களை பாராட்டிப் பேசினாா். சங்கப் பொருளாளா் சி.சின்னராஜன் நன்றி தெரிவித்தாா்.

Monday, September 05, 2022

September 05, 2022

ஆசிரியர் தின வாழ்த்துகள் - பள்ளிக்கல்வித்துறை

பள்ளிக்கல்வித்துறையின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி

Teacher's Day Wishes - of School Education - Download here
September 05, 2022

ஆசிரியர் இல்லா ஊர் நன்மை பயக்காது

சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றாலாகிய கடுகம் உடல்நோயைப் போக்கி நலம் நல்கும். அதுபோல் நான்கடியாலான திரிகடுகம் முதல் மூன்றடிகளில் அறியாமையைப் போக்குகிறது. எண்ணற்ற நன்னெறிகளைக் கூறும் நல்லாதனார் கல்வியின் அவசியம், எத்தகைய கல்வி நலம் பயக்கும், ஆசிரியரின் பெருமை எனக் கல்வியின் சிறப்புகளைப் பட்டியலிட்டுக்காட்டுகிறார்.

இன்றைய நாளில் ஆசிரியர் இல்லாமலேயே மாணவர் கற்கும் நிலையும் காண்கிறோம். ஆனாலும் மாணவர்களின் தனிமனித ஒழுக்கத்திற்கும் சமூக மேம்பாட்டிற்கும் உற்ற துணையாய் நிற்கும் ஆசிரியச் சமூகத்தின் இடத்தை, இட்டு நிரப்ப யாரால் முடியும்?

திரிகடுகம் வாழ்வில் நன்மை பயக்காதவை என்று சிலவற்றைக் குறிப்பிடுகிறது.

கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கு அறுக்கும்

மூத்தோரை இல்லாஅவைக் களனும் பாத்து உண்ணாத்

தன்மையிலாளர் அயல் இருப்பும் இம்மூன்றும்

நன்மை பயத்தல் இல். (பாடல் - 10)

கணக்காயர் என்ற சொல் நெடுங்கணக்கு முதலியவற்றைக் கற்பிக்கும் ஆசிரியரைக் குறிக்கிறது. நல்ல கல்வி கற்பிக்க தக்கவர் இல்லாத ஊரிலிருப்பது பயனற்றது என்பதே இதன் பொருள்.

கணக்காயர் என்ற தமிழ்ச்சொல்லைக் "கற்றதூஉமின்றிக் கணக்காயர் பாடத்தாற் பெற்றதாம் பேதையோர் சூத்திரம்' என நாலடி கூறுகிறது. கற்கும் கல்வி நலம் விளைவிப்பதாக இருக்க வேண்டும். கற்க வேண்டும் என்பதற்காக கண்டதையும் கற்கக் கூடாது. எதைக் கற்க வேண்டும் என வழிகாட்ட ஆசிரியர் தேவை. கற்க வேண்டியதைக் கண்டு தெளிந்து கற்பவன் பண்டிதன் ஆவான் என்பதே கண்டதைக் கற்க பண்டிதன் ஆவான் என்ற முதுமொழி.

பலவற்றை வாசித்து ஆராய்ந்து தெளிந்து கற்பதே பெருமைபெற்ற நல்லவர்களது கொள்கை ஆகும்.

வருவாயுட் கால் வழங்கி வாழ்தல் செருவாய்ப்பச்

செய்தவை நாடாச் சிறப்புடைமை-எய்தப்

பலநாடி நல்லவை கற்றல் இம்மூன்றும்

நலமாட்சி நல்லவர் கோள். (பாடல்.21)

கல்வி அனைத்திலும் தலைசிறந்தது. அதனால்தான் நல்லாதனார் பல்லவையுள் நல்லவை கற்றலும் என அழுத்தம் கொடுக்கிறார்.

நுண்மொழி நோக்கிப் பொருள்கொளலும், நூற்குஏலா

வெண்மொழி வேண்டினும் சொல்லாமை, நல்மொழியைச்

சிற்றினம் அல்லார்கண் சொல்லலும் இம்மூன்றும்

கற்றறிந்தார் பூண்ட கடன். (பாடல்.32)

நூல்களில் உள்ள சொற்களை ஆராய்ந்து நுட்பமாகப் பொருள் அறிதலும், நூல்களுக்குத் தகாப் பயனற்ற சொற்களை மற்றவர் விரும்பினாலும் கூறாது இருத்தலும், உயிர்க்கு உறுதிபயக்கும் சொற்களைப் பண்பில்லாதவரிடத்துச் சொல்லுதலும் என இவற்றைக் கற்றறிந்தவர் மேற்கொள்ள வேண்டிய கடமையாகக் கூறுகிறார்.

கற்பிப்பவர் முக மலர்ச்சியுடன் கற்றுத் தந்தால் கற்போர் நெஞ்சில் கல்வி கல்மேல் எழுத்துபோல் பதியும்.

கால் தூய்மை இல்லாக் கலிமாவும் (பாடல்.46) எனத் தொடங்கும் பாடலில் சீறிக் கறுவி வெகுண்டுரைப்பான் பள்ளி இம்மூன்றும் என்ற அடிகளில் மாணவர் மேல் சீற்றம் கொண்டு சினந்து பாடம் சொல்லிக் கொடுப்போர் உள்ள கல்விச் சாலை இவற்றை அறிவுடையோர் விரும்புவதில்லை என்கிறது திரிகடுகம். மேலும் மனிதர்களில் மிக உயர்ந்தவர்கள் எனக் குறிப்பிடும்போது வல்லிதின் சீலம் இனிது உடைய ஆகாறும் (பாடல்.26) என்கிறது.

ஒழுக்கத்தில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களே தலைசிறந்தவர்கள் என்பது புலனாகிறது. மேலும் திரிகடுகத்தில் யாருக்கு நல்லுலகு இல்லை எனும்போது கற்றாரைக் கைவிட்டு வாழ்ந்தவனுக்கு என்கிறது.

நாம் இவ்வுலகில் நெறிதவறாத வாழ்க்கை வாழ கல்வி சிறந்த அணியாக விளங்குகிறது. கற்றவர் சொல்லுக்கும் செயலுக்கும் என்றும் தனி மதிப்புண்டு. வாழ்க்கைக்கு நன்மைகளைச் சொல்லும் நூல்களைக் கற்பதுபோல் இனிதான செயல் வேறு ஒன்றும் இல்லை.

Sunday, September 04, 2022

September 04, 2022

தேசிய ஆசிரியர் விருது வென்றவர்களுடன் நாளை பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை;

தேசிய ஆசிரியர் விருது வென்றவர்களுடன் நாளை பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை;

தேசிய ஆசிரியர் விருது வென்றவர்களுடன் நாளை பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார். தங்களது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், மாணவர்களின் வாழ்வையும் வளமாக்கிய, நாட்டின் தலைசிறந்த ஆசிரியர்களின் தனித்துவம் வாய்ந்த பங்களிப்பை கொண்டாடுவது, கௌரவிப்பது ஆகியவை தேசிய ஆசிரியர் விருதின் நோக்கமாகும்.

தொடக்கநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்களுக்கான மக்களின் அங்கீகாரத்தை தேசிய ஆசிரியர் விருது அளிக்கிறது. இந்த விருதுக்காக இந்த ஆண்டு இணையதளம் வாயிலாக விறுவிறுப்பாகவும் வெளிப்படைத் தன்மை வாயிலாகவும் நடைபெற்ற மூன்று கட்ட நடைமுறைகளில் நாடு முழுவதிலுமிருந்து 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாளை 4:30 மணிக்கு லோக் கல்யாண் மார்கில் தேசிய ஆசிரியர் விருது வென்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடவிருக்கிறார்.
September 04, 2022

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி - நாள் : 04.09.2022

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி

நாள் : 04.09.2022

அறிவு ஒளியூட்டி அறியாமை இருள் அகற்றும் ஆசிரியப் பேரினமே! உங்கள் யாவருக்கும். என் இதயம் நிறைந்த இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்!

ஒரு சிறந்த நாடு. எப்படித் திகழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூற வந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

"தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு " - என்கிறார்.

இக்குறட்பாவிலுள்ள 'தக்கார்' என்னும் சொல்லுக்கு ஒழுக்க நெறி தவறாமல் வாழ்வோர் என்று உரையாசிரியர்கள் பொருள் காண்பர். ஆனால் தக்கார்' என்று சுட்டப் பெறுவோர் "ஆசிரியர்" என்று பொருள் காண நான் விழைகின்றேன். ஏனெனில், தமக்குரிய நெறியிலிருந்து வழுவாது. பிறழாது தாமும் வாழ்ந்து. வளரும் இளம் தலைமுறையினரையும் அந்நெறிப்படி வாழக் கற்றுக் கொடுக்கும் பொறுப்புமிக்கவர்களாக இருப்பவர் ஆசிரியர்களே.

மனிதர்களை-மதிவாணர்களாக்குவதும், மாமேதைகளாக்குவதும் ஏன் மனிதர்களை மனிதர்களாக்குவதும் கல்விதான். காலத்தால் அழிக்க முடியாத அத்தகைய கல்விச் செல்வத்தை மாணவச் செல்வங்களுக்கு அள்ளித் தருபவர்கள் ஆசிரியப் பெருமக்களே!

அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்கவும், பள்ளி செல்லும் வயதுள்ள குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்க்கவும். அவ்வாறு சேர்க்கப்பட்ட குழந்தைகளை இடைநிற்றல் ஏதுமின்றி முழுமையாகத் தொடரவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற கற்றல் அடைவுகளை உறுதி செய்யவும். ஆசிரியர்களுக்குச் சிறந்த பயிற்சிகளை அளித்து அவர்தம் திறன்களை வளர்க்கும் நோக்கோடு தமிழ்நாடு அரசு 2022-2023-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.36.895.89 கோடியை ஒதுக்கியுள்ளது. கொரோனா பெருந்தொற்றினால் மாணவர்களிடையே உருவான கற்றல் இழப்புகளை ஈடு செய்ய, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு அவர்தம் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே 2 இலட்சம் தன்னார்வலர்களைக் கொண்டு, அக்டோபர் 2021 முதல் "இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தினை" அரசு செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்திற்கென சுமார் ரூ.163 கோடி இதுவரை செலவிடப்பட்டுள்ளது.

மேலும், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு பயன்படும் வகையில் "நான் முதல்வன்" என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், எதிர்வரும் 2025-ஆம் ஆண்டிற்குள், 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்துக் குழந்தைகளும் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண்ணறிவுத் திறன்களைப் பெறும் நோக்கோடு. 2021-22-ஆம் ஆண்டில் "எண்ணும் எழுத்தும் இயக்கம்" தொடங்கப்பட்டு, பல்வேறு செயல்பாடுகளுக்கென ரூ.66.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம், 18 வயதிற்குட்பட்ட இளம் எழுத்தாளர்களில் ஆண்டுதோறும், மூன்று சிறந்த எழுத்தாளர்களைத் தேர்வு செய்து ரூ.25,000/- ரொக்கம். கேடயம் மற்றும் சான்றிதழுடன் "கவிமணி விருது" வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பள்ளி மாணாக்கர்களுக்குத் தமிழ்மொழித் திறனறித் தேர்வு நடத்தி, ஆண்டு தோறும் 1500 பேர் தெரிவு செய்யப்பட்டு. இரண்டாண்டுகளுக்கு ஊக்கத் தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள். பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள், மாணவர்கள் என சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் பயன்பெறும் வண்ணம் மதுரையில் "முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவு நூலகம்” அமையவுள்ளது.

நாட்டின் எதிர்காலச் சொத்துக்களாம் இளைய தலைமுறையை, நன்முத்துக்களாக உருவாக்கம் பெரும் பொறுப்புக்குச் சொந்தக்காரர்களாகிய ஆசிரியப் பேரினத்தை அரசும், நாட்டோரும், நல்லோரும் மதித்துப் போற்றுவதன் அடையாளமே இந்த ஆசிரியர் தின விழாக் கொண்டாட்டம்.

வகுப்பறை அனுபவங்களின் மூலம் இடையறாது பணி செய்து மென்மேலும் திறம் பெற்று சிறந்த ஆசிரியர்களாய் என்றும் சீர்பெற்று விளங்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

Total Pageviews

Search This Blog