Breaking

Showing posts with label Educational Article. Show all posts
Showing posts with label Educational Article. Show all posts

Friday, September 09, 2022

September 09, 2022

எல்லார்க்கும் எழுத்தறிவு! - சிறப்பு கட்டுரை

குழந்தைப்பருவம் தொடங்கி ஒவ்வொருவரும் தம் அனுபவத்தால் பெற்ற முதன்மையான அறிவு பட்டறிவு. பிறர் வாய்மொழி கருத்தாடல்களால் பெற்ற இரண்டாம் நிலை அறிவு கேட்டறிவு. பின்னர் கல்விக்கூடங்களில் பெற்ற அறிவு கற்றறிவு. எழுத்தறிவு என்பது தொடக்கத்தில் கையொப்பமிடத் தெரிந்த நிலை என்றுதான் இருந்திருக்கும். முன்னொரு காலத்தில் ஓலைகளில் ஒருசிலர் பத்திரப்படுத்தி வைத்திருந்த பழைய பாடல்கள், கதைகள் எல்லாம் எழுத்தாரம்பம் எனலாம்.

கடந்த ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அச்சு வாகனம் எறியபின் நூல்களின் படியெடுப்பும், பிரதி வாசிப்பும் அவரவர் வீட்டுப்படித் திண்ணைகளில் இருந்து விட்டு விடுதலையாகி நவீனத் தொழில்நுட்ப மின்னணு ஊடகங்களில் பிரபஞ்ச வெளியில் விரிவடைந்து விட்டது. இன்று எழுத்தறிவு என்பது வெறும் அச்சிடப்பட்ட உரைகளை கிரகிக்கும் திறன் என்ற நிலை மாறி, காட்சித்தொகுப்புகள், தொழில்நுட்ப விழிப்புணர்வுக்கேற்பப் பரிணமிக்க இயலும். நூலகங்களில், இணையதளங்களில் பதிவாகும் புத்தகங்களும், பத்திரிகைகளும் உலகைப் புரிந்து கொள்ள நமக்கு உதவுகின்றன. தமிழ்மொழியைப் பொறுத்தவரை, சீகன் பால்கு என்கிற கிறித்தவப் பாதிரியார் வேண்டிக் கொண்டதன் பேரில் தமிழ்நாட்டில் முதன் முதலாக 1713-ஆம் ஆண்டு தரங்கம்பாடியில் அச்சகம் ஒன்று தொடங்கப்பட்டது.

பல்வேறு சூழல்களுடன் தொடர்புடைய அச்சிடப்பட்ட அல்லது எழுதப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி எழுத்தின் வரிவடிவத்தை அடையாளம் காணவும், அதனை விளக்கவும், அந்தக் குறியீடுகள் உணர்த்தும் பொருளைப் புரிந்து கொள்ளவும், புதிய சிந்தனையை உருவாக்கவும், தம் கருத்துக்களைப் பிறர்க்குத் தெரிவிக்கவும் கல்வியறிவு உதவுகிறது. இது இலக்குகளை அடைய சமூகம், சமூகத்தில் பங்கேற்கும் அறிவையும் திறனையும் மேம்படுத்துகிறது. புள்ளிவிவர அடிப்படையில், 1820-இல் உலகில் வெறும் 12% மக்கள் மட்டுமே படிக்கவும் எழுதவும் திறன் பெற்றவர்களாக இருந்தனர். இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. 2016-இல் உலக மக்கள்தொகையில் 14 % பேர் மட்டுமே கல்வியறிவு அற்றவர்களாக இருந்தனர். அதிலும் கடந்த 65 ஆண்டுகளில், உலக எழுத்தறிவு விகிதம் ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் 4% வீதம் உயர்ந்து, 1960-இல் 42% ஆக இருந்தது 2015-இல் 86 % ஆக அதிகரித்துள்ளது. "யுனெஸ்கோ'வின் உலகளாவிய கல்வியறிவு மதிப்பீடு இது.

ஆனால் (உலக அளவில் எட்டு பேரில் ஒருவருடன் ஒப்பிடும்போது) இன்னும் நான்கில் ஒரு இந்தியர் படிக்கவோ எழுதவோ முடியாமல் இருக்கிறார். இந்தியாவில் கல்வியறிவு அதிகம் உள்ள மாநிலம் கேரளம். கேரளத்தின் கல்வியறிவு விகிதம் 96.2 % ஆகும். பத்து சதவீத மொழிகள் வெறும் பேச்சு மொழியாக மட்டுமே தேங்கிக் கிடக்கின்றன. அவை எழுத்துலகில் இருந்து காலாவதி ஆகிவிடும் என்பது ஓர் எச்சரிக்கை. அடுத்த நூற்றாண்டுத் தொடக்கத்தில் இன்றைய மொழிகளில் நூற்றுக்குப் பத்துதான் இருக்குமாம்.

இன்றைக்கே நம் குடும்பத்தில் படுகு, துளு, கொங்கணி போன்ற திராவிட மொழிகளுக்கு எழுத்து வரிவடிவம் இல்லை. ஒரு மொழி அழிய இன்னொரு காரணம் அந்த மொழி பேசும் இனம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அழிந்து வருவதுதான். அதனால் ஒவ்வொரு மொழி பேசும் இனமும் அழியாமல் காப்பதும் எழுத்தறிவு காப்பதிலோர் முக்கியப் பணியே.

வீட்டிலும் பொது வெளியிலும், ஊடகங்களிலும் மூத்தவர்கள் மட்டும் ஒரு மொழியை பேசி, எழுதினால் போதாது. அவர்கள், தங்கள் சந்ததியையும் தமிழ் கற்கச் செய்ய வேண்டும். தெருவோரம் கல்விக்கூடம், பிராந்திய மொழி மக்களுடன் அவரவர் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் உதவும். சந்ததியர்க்கு மொழி ஆர்வத்தை ஊட்ட வேண்டும். வெளிமாநிலத்திலோ, வெளிநாட்டிலோ ஒருவர் தம் தாய்மொழியினைப் பயிற்று மொழியாகக் கொள்ள இயலாத சூழல் எழுவது இயல்பு. அங்குள்ள தமிழ்ப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அந்நிய மொழி கற்க விடுகிறார்கள். தம் பிள்ளைகள் சமுதாயத்தில் மதிப்பு பெறுவதைக் காட்டிலும், அவர்களை மதிப்பெண் பெறச்செய்வதே பெற்றோர்களின் இலக்காக மாறிவிட்டது.

எழுத்தும் அதன்வழி பெறப்படும் அறிவும் இன்று பல்லாண்டுகளுக்கு முந்தைய பாடங்களில் நிற்பது மாற வேண்டும். மகாகவி பாரதியாரும் "வேதம் புதுமை செய்' என்றுதான் வற்புறுத்தினார். இன்றைய அறிவியல், தொழில்நுட்ப யுகத்தில் தொழில்நுட்பப் பயன்பாடுகளால் மட்டுமே குடிமக்களின் பொருளாதாரம் உயரும்; மதிப்பும் மேம்படும். இளைஞர்கள், பொழுதுபோக்கு ஊடகங்களில் பழுதுபட்டு விடக்கூடாது. இந்தியாவில் 2020 அக்டோபர் நிலவரப்படி, 137 கோடி மக்கள்தொகைக்கு ஏறத்தாழ 151 கோடி கைப்பேசி இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இணைய வலையில் சிக்கிய மனிதப்பூச்சிகள் வாழும் 222 நாடுகளில் உலகிலேயே இரண்டாம் இடம் இந்தியாவிற்கே. 2016 கணக்கெடுப்பின்படி, உரிமம் பெற்ற தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்கள் 857 என்பதால், 233 நாடுகளில் நம்நாடு 4-ஆம் இடத்தைப் பிடித்துவிட்டது. இலக்கணம் என்ற பெயரில் தமிழின் நெகிழ்வுத் தன்மையை இறுக்கிப் பிடித்தாலும் மொழி நொறுங்கிப்போகும். "கொங்குதேர் வாழ்க்கை' என்று சொன்னால் அந்நாளில் மன்னருக்கே புரிந்தது. இன்று இது என்ன என்றுதான் நம் பிள்ளைகள் கேட்கிறார்கள்.

எழுத்தறிவு இல்லாத கேள்வியறிவும் கூட இன்றைய ஊடக விளம்பரங்களில் பாழ்பட்டு வருகின்றன. செக்கு எண்ணெய்யை எப்படி செக் பண்ணி வாங்குவாய் என்றால், நல்ல எண்ணெய்யாகச் செக் பண்ணி வாங்குவேன் என்ற பதில் தரும் அறியாமை குறித்துக் கருத்துச் சொல்லத்தேவையில்லை. தனது தொலைந்த நாய்க்குட்டி கிடைத்தால் போதும், தமது வழிச்சாலையில் குறுக்கே நிற்பவர், ஒன்றுமே செய்யவில்லை என்றாலும் நன்றி என்று கூறிச்செல்லும் நல்லவர்களால்தான் "உண்டால் அம்ம இவ்வுலகம்'.

எழுத்தும் பேச்சும் தாண்டிப் பயன்பாட்டு நிலையில் கருத்துத்தளத்தில் எழுத்தறிவின் பங்கு முக்கியம். இன்று அதையே பொதுமக்கள், மாணவர்கள், அறிஞர்கள் ஆகிய தளங்களில் மூன்று நிலைகளில் பகுத்து உணரலாம். "விஞ்ஞானம் கற்கிறார் வேலுத் தாத்தா' (1999) என்ற எனது நூல், திருவனந்தபுரம், "அறிவொளி இயக்க'த்தில் வாசித்த கட்டுரை அடிப்படையில் எழுதப்பட்டது. எட்டு வயது மாணவன் ஒருவன், தன் தாத்தாவிற்கு கதை வடிவில் அறிவியல் கருத்துகளை எடுத்துச் சொல்லுவதாக அமைந்த நூல் அது. கணிப்பொறி நுட்பங்கள், இன்டர்நெட், வானவியல் அற்புதம் போன்ற நவீனச் செய்திகள் மட்டுமின்றி, நம் உடலை எப்படிப் பேண வேண்டும் என்பதையும், நாம் உண்ணும் உணவு எப்படி பயனளிக்கின்றது என்பதையும் கூடத் தன் தாத்தாவிற்குப் பெயரன் கற்றுத் தருவதாக அமைகின்றது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகின்றன. 2022-இல் இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் 77.7 %. அதிலும் பெண் கல்வி (70.3%), ஆண்களின் கல்வி (84.7%) அறிவைக் காட்டிலும் குறைவுதான்.

இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டினையொட்டி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் முக்கியத் திட்டம் ஒன்றை வகுத்தது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் 750 மாணவிகளால் உருவாக்கப்பட்டு 75 தொழில்நுட்பப் பயணச் சுமைகளுடன் "அசாதிசாட்' என்று பெயரிடப்பட்ட சிறிய செயற்கைக்கோளை ஏவுகலனில் விண்வெளிக்கு அனுப்பும் திட்டம். இந்த செயற்கைக்கோள் பணிக்கு ஒரு நோக்கம் உள்ளது. விண்வெளி பற்றிய அடிப்படைப் புரிதல் உள்ள (பொருளாதார ரீதியாக நலிவடைந்த) அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவித்து, ஒரு சிறிய பரிசோதனையை உருவாக்கி, "பலூன் செயற்கைக்கோள்' மூலமாகவோ அல்லது விண்பாதையில் சுற்றும் செயற்கைக்கோள் ("ஆர்பிட்டல் சாட்டிலைட்') மூலமாகவோ விண்வெளியின் விளிம்பிற்கு ஏவுவதற்கு அவர்களுக்கு உரிய பயிற்சி அளிப்பதே இதன் நோக்கம். 2022 ஆகஸ்ட் 7- ஆம் தேதி தனது முதல் பயணம் முழு வெற்றி பெறவில்லை.

நம் நாட்டின் மகத்தான தொழில்நுட்ப சாதனைகள் பலவும் ஆயிரக்கணக்கான இளம் பெண்கள், இளைஞர்களின் கடும் முயற்சியால் விளைந்தவைதான். அவர்கள் பலரும் நாட்டின் வெவ்வேறு பாகங்களில் சாதாரண பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயின்றவர்கள் என்பது தெளிவு. உலகின் பல்வேறு பாகங்களில் பணிபுரிந்துவரும் இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட லட்சக்கணக்கான இந்தியர்களில் அனைவருமே இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களிலோ, அதற்கு நிகரான நிறுவனங்களிலோ பயின்றவர்கள் அல்லர். சமீபத்திய கணிபொறி மென்பொருள் அற்புதம் எல்லாம் சாதாரண இளம் பெண்கள், இளைஞர்கள் நிகழ்த்தியதே. அவர்களால் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச இயலாத நிலை இருக்கலாம். ஆனாலும் உலகப் போட்டிக்கு உயர்ந்து நிற்கப் போதிய அளவுக்கு இயக்க விதிமுறைகளைக் கற்று கணிப்பொறி இயக்குவதில் நிபுணத்துவம் பெற அவர்களால் முடியும். இதிலிருந்து ஒரு உண்மை தெளிவாகிறது. இந்தியாவின் மனித ஆற்றல்வள மூலாதாரமே நம் தலையாய உள்ளகத் திறன் தகுதிகளில் ஒன்றாகும். இந்தியாவின் பலம் இதுவே. இன்று, பேச்சும் எழுத்தும் சுமந்து வரும் கருத்துகள்தான் எழுத்தறிவின் பயனைத் தீர்மானிக்கும். எழுத்தறிவின் சீதனங்களை சிந்தாமல், சிதறாமல் பாமரர்க்கும் கொண்டு செல்வோம்.

இன்று (செப். 8) உலக எழுத்தறிவு நாள். கட்டுரையாளர்:

இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).

Monday, September 05, 2022

September 05, 2022

ஆசிரியர் இல்லா ஊர் நன்மை பயக்காது

சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றாலாகிய கடுகம் உடல்நோயைப் போக்கி நலம் நல்கும். அதுபோல் நான்கடியாலான திரிகடுகம் முதல் மூன்றடிகளில் அறியாமையைப் போக்குகிறது. எண்ணற்ற நன்னெறிகளைக் கூறும் நல்லாதனார் கல்வியின் அவசியம், எத்தகைய கல்வி நலம் பயக்கும், ஆசிரியரின் பெருமை எனக் கல்வியின் சிறப்புகளைப் பட்டியலிட்டுக்காட்டுகிறார்.

இன்றைய நாளில் ஆசிரியர் இல்லாமலேயே மாணவர் கற்கும் நிலையும் காண்கிறோம். ஆனாலும் மாணவர்களின் தனிமனித ஒழுக்கத்திற்கும் சமூக மேம்பாட்டிற்கும் உற்ற துணையாய் நிற்கும் ஆசிரியச் சமூகத்தின் இடத்தை, இட்டு நிரப்ப யாரால் முடியும்?

திரிகடுகம் வாழ்வில் நன்மை பயக்காதவை என்று சிலவற்றைக் குறிப்பிடுகிறது.

கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கு அறுக்கும்

மூத்தோரை இல்லாஅவைக் களனும் பாத்து உண்ணாத்

தன்மையிலாளர் அயல் இருப்பும் இம்மூன்றும்

நன்மை பயத்தல் இல். (பாடல் - 10)

கணக்காயர் என்ற சொல் நெடுங்கணக்கு முதலியவற்றைக் கற்பிக்கும் ஆசிரியரைக் குறிக்கிறது. நல்ல கல்வி கற்பிக்க தக்கவர் இல்லாத ஊரிலிருப்பது பயனற்றது என்பதே இதன் பொருள்.

கணக்காயர் என்ற தமிழ்ச்சொல்லைக் "கற்றதூஉமின்றிக் கணக்காயர் பாடத்தாற் பெற்றதாம் பேதையோர் சூத்திரம்' என நாலடி கூறுகிறது. கற்கும் கல்வி நலம் விளைவிப்பதாக இருக்க வேண்டும். கற்க வேண்டும் என்பதற்காக கண்டதையும் கற்கக் கூடாது. எதைக் கற்க வேண்டும் என வழிகாட்ட ஆசிரியர் தேவை. கற்க வேண்டியதைக் கண்டு தெளிந்து கற்பவன் பண்டிதன் ஆவான் என்பதே கண்டதைக் கற்க பண்டிதன் ஆவான் என்ற முதுமொழி.

பலவற்றை வாசித்து ஆராய்ந்து தெளிந்து கற்பதே பெருமைபெற்ற நல்லவர்களது கொள்கை ஆகும்.

வருவாயுட் கால் வழங்கி வாழ்தல் செருவாய்ப்பச்

செய்தவை நாடாச் சிறப்புடைமை-எய்தப்

பலநாடி நல்லவை கற்றல் இம்மூன்றும்

நலமாட்சி நல்லவர் கோள். (பாடல்.21)

கல்வி அனைத்திலும் தலைசிறந்தது. அதனால்தான் நல்லாதனார் பல்லவையுள் நல்லவை கற்றலும் என அழுத்தம் கொடுக்கிறார்.

நுண்மொழி நோக்கிப் பொருள்கொளலும், நூற்குஏலா

வெண்மொழி வேண்டினும் சொல்லாமை, நல்மொழியைச்

சிற்றினம் அல்லார்கண் சொல்லலும் இம்மூன்றும்

கற்றறிந்தார் பூண்ட கடன். (பாடல்.32)

நூல்களில் உள்ள சொற்களை ஆராய்ந்து நுட்பமாகப் பொருள் அறிதலும், நூல்களுக்குத் தகாப் பயனற்ற சொற்களை மற்றவர் விரும்பினாலும் கூறாது இருத்தலும், உயிர்க்கு உறுதிபயக்கும் சொற்களைப் பண்பில்லாதவரிடத்துச் சொல்லுதலும் என இவற்றைக் கற்றறிந்தவர் மேற்கொள்ள வேண்டிய கடமையாகக் கூறுகிறார்.

கற்பிப்பவர் முக மலர்ச்சியுடன் கற்றுத் தந்தால் கற்போர் நெஞ்சில் கல்வி கல்மேல் எழுத்துபோல் பதியும்.

கால் தூய்மை இல்லாக் கலிமாவும் (பாடல்.46) எனத் தொடங்கும் பாடலில் சீறிக் கறுவி வெகுண்டுரைப்பான் பள்ளி இம்மூன்றும் என்ற அடிகளில் மாணவர் மேல் சீற்றம் கொண்டு சினந்து பாடம் சொல்லிக் கொடுப்போர் உள்ள கல்விச் சாலை இவற்றை அறிவுடையோர் விரும்புவதில்லை என்கிறது திரிகடுகம். மேலும் மனிதர்களில் மிக உயர்ந்தவர்கள் எனக் குறிப்பிடும்போது வல்லிதின் சீலம் இனிது உடைய ஆகாறும் (பாடல்.26) என்கிறது.

ஒழுக்கத்தில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களே தலைசிறந்தவர்கள் என்பது புலனாகிறது. மேலும் திரிகடுகத்தில் யாருக்கு நல்லுலகு இல்லை எனும்போது கற்றாரைக் கைவிட்டு வாழ்ந்தவனுக்கு என்கிறது.

நாம் இவ்வுலகில் நெறிதவறாத வாழ்க்கை வாழ கல்வி சிறந்த அணியாக விளங்குகிறது. கற்றவர் சொல்லுக்கும் செயலுக்கும் என்றும் தனி மதிப்புண்டு. வாழ்க்கைக்கு நன்மைகளைச் சொல்லும் நூல்களைக் கற்பதுபோல் இனிதான செயல் வேறு ஒன்றும் இல்லை.

Thursday, July 28, 2022

July 28, 2022

சவாலாகும் வெளிநாட்டுக் கல்வி! பணவீக்கத்தின் தாக்கம் குறித்த தலையங்கம்

சவாலாகும் வெளிநாட்டுக் கல்வி! பணவீக்கத்தின் தாக்கம் குறித்த தலையங்கம்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடா்ந்து வீழ்ச்சியை சந்தித்து, தற்போது 80 ரூபாயை நெருங்கி விட்டது. இதனால், வெளிநாட்டில் படிக்கும், படிக்கச் செல்லும் ஆயிரக்கணக்கான மாணவா்கள் கூடுதல் செலவையும் கல்விக் கட்டணத்தையும் எதிா்கொள்ள வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. மாணவா்கள் மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்ல விழையும் சுற்றுலாப் பயணிகளின் திட்டங்களும் பாதிக்கப்படக்கூடும். இந்த ஆண்டு இதுவரை 7% க்கும் மேலாக ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் படிக்கும் மாணவா்களின் கல்விச் செலவு கடுமையாக அதிகரித்திருக்கிறது. இந்திய மாணவா்கள் ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டில் தாங்கள் படிக்கவுள்ள நகரங்களை நோக்கிப் பயணிக்கத் தொடங்குவாா்கள். அவா்கள் கல்விக் கட்டண அந்நியச் செலாவணிக்காகவும், தங்களது செலவுகளுக்காகவும் அதிகரித்த செலவை எதிா்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே வெளிநாட்டில் பயிலும் இந்திய மாணவா்கள், முன்பே கட்டணம் செலுத்தியிருப்பதால் அவா்கள் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்து கவலைப்படத் தேவையில்லை. முதுநிலை படிப்பில் சேரும்போதே மாணவா்கள் தங்கள் முழு கட்டணத்தையும் முன்கூட்டியே செலுத்திவிடுகிறாா்கள். இளங்கலை மாணவா்களும், ஒவ்வொரு செமஸ்டருக்குமான கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தியிருப்பாா்கள்.

அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களில், செமஸ்டா்கள் செப்டம்பரில் தொடங்கும். எனவே, அவா்களின் மாதாந்திர வாழ்க்கைச் செலவுகள் மட்டுமே தற்போது பாதிப்பை எதிா்கொள்ளும். புதிதாக வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் மாணவா்கள்தான் இனிமேல் பிரச்னையை எதிா்கொள்வாா்கள். இந்திய மாணவா்கள் பெரும்பாலானோா் தங்களது வெளிநாட்டு கல்விக் கட்டணத்துக்கும், செலவுகளுக்கும் பெற்றோரையே முழுவதும் சாா்ந்து இருக்கிறாா்கள். வெளிநாட்டில் தங்கள் செலவுகளை சமாளிக்க டாலா்களை வாங்க அவா்கள் இப்போது கூடுதலாக ரூபாய் தர வேண்டியிருக்கும். அதனால், அவா்களது பெற்றோா்களின் சுமை அதிகரிக்கும்.

அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது. இதே நிலைமை தொடா்ந்தால், அங்கே படிக்கும் மாணவா்களின் வாழ்க்கைச் செலவுகள் வரும் மாதங்களில் கடுமையாக உயரக்கூடும். அத்தகைய மாணவா்களுக்கும், அவா்களது குடும்பங்களுக்கும் மிகப் பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்படும்.

இந்தியாவில் வாழும் பெற்றோா்களும் விலைவாசி ஏற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள். சந்தை நிலவரச் சூழலும், பணவீக்கமும் அனைத்துத் தரப்பினரையும் பாதித்திருக்கின்றன. அதனால் அவா்களது சேமிப்புகள் பாதிக்கப்படக்கூடும். வங்கி வட்டியும் குறைவாக இருக்கும் நிலையில், பிள்ளைகளின் வெளிநாட்டு படிப்புச் செலவு பெற்றோா் பலரையும் கடனாளியாக்கக்கூடும். வெளிநாடுகளில் படிக்கும் மாணவா்கள், குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் படிப்பவா்கள் படித்துக்கொண்டே வேலை பாா்க்கிறாா்கள். அதனால், ஏற்கெனவே வெளிநாடுகளுக்கு சென்று படித்துக் கொண்டிருக்கும் மாணவா்களில் பெரும்பாலோா் பாதிக்கப்பட மாட்டாா்கள். அவா்கள், தங்களது கல்விக் கட்டணத்தை ஏற்கெனவே செலுத்தியிருப்பாா்கள் என்பதுடன், அவா்களது வாழ்க்கைச் செலவுகளை எதிா்கொள்வதற்கு அங்கே ஆதரவு அமைப்புகளும் உள்ளன.

அமெரிக்காவில் படிக்கும் மாணவா்களைத் தவிர, ஏனைய நாடுகளில் படிக்கும் மாணவா்கள் விடுமுறை நாள்களில் முழு நேரமும், படிப்புக் காலத்தில் குறிப்பிட்ட மணி நேரம் வரை ஏதாவது பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சம்பாதிக்கிறாா்கள். அதேபோல, கோடை விடுமுறைக்காக இந்தியா வந்திருக்கும் மாணவா்களும் உடனடியாக பாதிக்கப்பட மாட்டாா்கள்.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடா்ந்து சரிந்து வரும் இந்த சூழ்நிலையில் வெளிநாட்டில் படிக்கும் மாணவா்களும், அவா்களது பெற்றோா்களும் தற்போது என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி பரவலாக எழுகிறது. அவா்களுக்கு உதவ கல்வி ஆலோசனை நிறுவனங்கள் இருக்கின்றன. வெளிநாட்டில் படிக்கும் மாணவா்கள் தங்களுடைய தங்குமிடம், உணவு மற்றும் இதர வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க, பகுதி நேரப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று கல்வி ஆலோசகா்களும், நிதித் திட்டமிடுபவா்களும் பரிந்துரைக்கின்றனா். பல்கலைக்கழக வளாகங்களிலேயே போதுமான வேலைவாய்ப்பு உள்ளதால், மாணவா்களுக்கு வழங்கப்படும் விசாக்கள், அவா்களை வேலை செய்ய அனுமதிக்கிறது.

வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் மாணவா்கள் அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை பக்குவப்படுத்திக்கொள்ள ஓரிரு மாதங்கள் ஆகும். விரைவிலேயே சக மாணவா்கள், கல்வி ஆலோசகா்களின் உதவுயுடன் தங்களது அன்றாடச் செலவை ஈடுகட்ட தகுந்த வேலைவாய்ப்புகளை தேடிக்கொள்கிறாா்கள். பல்கலைக்கழக தங்குமிடச் செலவுகள் அதிகமாக இருந்தால், வளாகத்திற்கு வெளியே குறைந்த வாடகையில் பலா் பகிா்ந்து கொள்ளும் இடங்களை ஏற்பாடு செய்து கொள்கிறாா்கள். அதனால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அவா்களை பாதிக்காது.

இரண்டு ஆண்டு, நான்கு ஆண்டு கால படிப்புக்காக ஆகஸ்ட் மாதம் இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்குச் செல்லவிருக்கும் மாணவா்களுக்குதான் இன்றைய நிலைமை ஒரு பெரும் சவாலாக இருக்கும். அவா்கள் நாணய ஏற்ற இறக்கங்களைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப கல்வி வரவு - செலவுத் திட்டங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

Total Pageviews

Search This Blog