அரசு மருத்துவ கல்லுாரியில் 30 சீட்டு பறிபோகும் அபாயம் பெற்றோர், மாணவர் சங்கங்கள் திடுக் புகார்
தடையில்லா சான்றிதழ் கிடைக்காததால் அரசு மருத்துவ கல்லுாரியில் 30 முதுநிலை சீட்டுகள் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு மருத்துவ கல்லுாரியில் ஆண்டிற்கு 180 மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., முடித்து வெளியே வருகின்றனர். இக்கல்லுாரியில், எம்.டி., எம்.எஸ்., உள்ளிட்ட மருத்துவ சீட்டுகளை அதிகரிக்க கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், அதற்கான தடையில்லா சான்றிதழை, சுகாதார துறை வழங்கததால் வரும் கல்வி ஆண்டில் 30 முதுநிலை மருத்துவ சீட்டுகளை புதுச்சேரி மாணவர்கள் இழக்க உள்ளதாக பெற்றோர் சங்கங்கள் குற்றம் சாட்டி, கவர்னர் மற்றும் முதல்வருக்கு புகார் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து பெற்றோர் மாணவர் சங்க தலைவர் பாலா கூறுகையில், அரசு மருத்துவ கல்லுாரியில் 30 எம்.டி., எம்.எஸ்., இடங்களை உயர்த்த முடிவு செய்து, சுகாதார துறையிடம் என்.ஓ.சி., கேட்டு விண்ணப்பித்துள்ளது.
குறிப்பாக, எம்.எஸ்., படிப்புகளில் தற்போதுள்ள 2 இ.என்.டி., சீட்டுகளை 4 ஆக உயர்த்தவும், 4 பொது அறுவை சிகிச்சை இடங்களை 8 ஆக உயர்த்தவும், 3 மகப்பேறு மருத்துவ சீட்டுகளை 7 ஆக அதிகரிக்க விண்ணப்பிக்கப்பட்டது. இதேபோல் 4 எம்.டி., பொதுமருத்துவ இடங்களை 8 ஆக அதிகரிக்கவும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், எம்.டி., படிப்புகளில் மனநல மருத்துவம், குழந்தைநல மருத்துவம், உயிர்வேதியியல், உடலியல் படிப்புகளில் தலா 4 சீட்டுகள் புதிதாக ஆரம்பிக்க முடிவு செய்துள்ளது.
இதற்காக துறையிடம் தடையில்லா சான்றிதழ் பெற்று இன்று 22ம் தேதிக்குள் மத்திய மருத்துவ கவுன்சிலுக்கு முறையாக கல்லுாரி நிர்வாகம் விண்ணப்பித்திருக்க வேண்டும். ஆனால் சொசைட்டி கல்லுாரியான இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரிக்கு ஏனோ சுகாதார துறை இன்னும் என்.ஓ.சி., வழங்கவில்லை.
இதனால் அடுத்த ஆண்டு புதுச்சேரி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 30 முதுநிலை மருத்துவ சீட்டுகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவ கல்லுாரிக்கு மறுக்கும் சுகாதாரத்துறை நிகர்நிலை பல்கலைக்கழகம் உடனடியாக என்.ஓ.சி., கொடுத்துள்ளது.
இது புதுச்சேரி மாணவர்களுக்கு இழைக்கும் துரோகம். இது தொடர்பாக கவர்னர், முதல்வருக்கு புகார் அனுப்பியுள்ளோம் என்றார்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.