Breaking

Showing posts with label BDS Counselling. Show all posts
Showing posts with label BDS Counselling. Show all posts

Sunday, November 09, 2025

Monday, July 31, 2023

July 31, 2023

MBBS, BDS படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு முடிவு வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு முடிவு வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் அகில இந்திய கலந்தாய்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவ கலந்தாய்வு குழு (எம்சிசி) ஆன்லைனில் நடத்தி வருகிறது. இந்நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2023-24-ம்கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு https://mcc.nic.in/ என்ற இணையதளத்தில் ஜூலை 20-ம் தேதி தொடங்கியது. முதல்சுற்று கலந்தாய்வு முடிவுகள்இணையதளத்தில் நேற்றுவெளியிடப்பட்டுள்ளது.

ஜிப்மரில் சேர்ந்த மாணவர்: நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஜெ.பிரபஞ்சன், தமிழக அரசின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தார். அகில இந்திய கலந்தாய்வில் பங்கேற்ற அந்த மாணவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

நீட் தேர்வில் 715 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் 6-வது இடத்தையும், மாநில அளவில் 2-வது இடத்தையும் பிடித்த சென்னையைச் சேர்ந்த என்.சூர்யா சித்தார்த், டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியிலும், நீட் தேர்வில் 715 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் 9-வது இடத்தையும், மாநில அளவில் 3-வது இடத்தையும் பிடித்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.வருண் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்துள்ளனர். அதேபோல், நீட் தேர்வில் 716 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் 3-வது இடத்தைப் பிடித்த தமிழக மாணவர் கவுஸ்தவ் பவுரி, நீட் தேர்வில் 711 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் 24-வது இடத்தைப் பிடித்த தமிழக மாணவர் சாமுவேல் ஹர்ஷித், நீட் தேர்வில் 710 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் 36-வது இடத்தைப் பிடித்த தமிழகமாணவர் ஜேக்கப் பிவின் ஆகியோர் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களைத் தேர்வு செய்துள்ளனர்.

இந்த 3 பேரில் சாமுவேல் ஹர்ஷித், மாநில அரசின் நிர்வாக ஒதுக்கீட்டு இடத்துக்கு விண்ணப்பித்திருந்தார். மற்ற இரண்டு மாணவர்கள் மாநில அரசு கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
July 31, 2023

MBBS, BDS கலந்தாய்வில் இடம் தேர்வு செய்ய ஆக.3 வரை அவகாசம்

MBBS, BDS கலந்தாய்வில் இடம் தேர்வு செய்ய ஆக.3 வரை அவகாசம்

அகில இந்திய கலந்தாய்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தமிழக அரசு நடத்தும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வில் இடங்களைத் தேர்வுசெய்ய ஆக.3-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2023-24-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு கடந்த 25-ம்தேதி www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய சுகாதாரத்துறை இணையதளங்களில் தொடங்கியது.

அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றவர்கள், ஜூலை 25-ம் தேதி காலை 10 மணி முதல் 31-ம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, இடங்களைத் தேர்வு செய்யலாம். ஆகஸ்ட் 1, 2-ம் தேதிகளில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ஆக.3-ம் தேதி இடஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும். ஆக.4-ம் தேதி முதல் 8-ம் தேதிமாலை 5 மணி வரை இடஒதுக்கீட்டு ஆணையை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆக.8-ம் தேதி மாலை 5 மணிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேரவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அகில இந்திய கலந்தாய்வு: தற்போது, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஆன்லைனில் கடந்த 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம்ஏற்பட்டுள்ளது. அகில இந்தியகலந்தாய்வில் இடம் கிடைக்காதவர்கள், மாநில கலந்தாய்வில் இடங்களைப் பெறுவதற்கு வாய்ப்புள்ளது. அதனால், தமிழக மாணவர்களின் நலன் கருதி ஆன்லைனில் நடைபெற்று வரும் மாநில கலந்தாய்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஆக.3-ம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, இடங்களைத் தேர்வுசெய்யலாம். ஆக.4, 5-ம் தேதிகளில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ஆக.6-ம் தேதி இடஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும்.

ஆக.7-ம் தேதி முதல் 11-ம்தேதி மாலை 5 மணி வரை இடஒதுக்கீட்டு ஆணையை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆக.11-ம் தேதி மாலை 5 மணிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, November 03, 2022

November 03, 2022

கால்நடை மருத்துவப் படிப்பு: இந்த வாரம் பொதுப் பிரிவு கலந்தாய்வு

கால்நடை மருத்துவப் படிப்பு: இந்த வாரம் பொதுப் பிரிவு கலந்தாய்வு

கருத்தரங்கில் பேசும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கே.என்.செல்வகுமாா்.

இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புக்கான பொதுப் பிரிவு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இந்த வாரம் தொடங்கும் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கே.என்.செல்வகுமாா் தெரிவித்தாா்.

‘கால்நடை மருந்தியல், நச்சுயியல் ஆராய்ச்சியில் புதிய எல்லைகள்; வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிகள்’ என்ற தலைப்பில் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மூன்று நாள் சா்வதேசக் கருத்தரங்கு புதன்கிழமை தொடங்கியது.

இக் கருத்தரங்கை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கே.என்.செல்வகுமாா், உத்தர பிரதேச மாநிலம், மதுரா பண்டிட் தீனதயாள் உபாத்யாய கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தா் ஏ.கே.ஸ்ரீவஸ்தவா ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இந்தக் கருத்தரங்கில் கால்நடைத் துறை சாா்பில் கால்நடைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், எதிா்கால நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. மேலும், கால்நடைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசின் ஆராய்ச்சி அமைப்புகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. கால்நடைத் துறையைச் சோ்ந்த ஆராய்ச்சி வல்லுநா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் உள்பட 189 போ் ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா். கால்நடைத் துறையில் சிறந்த முறையில் ஆராய்ச்சி, சேவைகள் ஆற்றிய மருத்துவா்கள், விஞ்ஞானிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், கால்நடைகளுக்கு வழங்கப்படும் மருந்துகள், அதன் அளவுகள், மருந்து மேலாண்மை குறித்த செயலி வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கே.என்.செல்வகுமாா் பேசியதாவது:

நாட்டின் ஒட்டுமொத்த வேளாண் உற்பத்தியில் கால்நடைத் துறையின் பங்களிப்பு 30 சதவீதமாகும். நானோ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கால்நடை மருந்துகள் தற்போது பெரும் அளவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மேலும் மரபுசாா் மூலிகை மருத்துவத்திற்கு முக்கியத்துவம் அளித்து, கால்நடை இனங்களைப் பாதுகாத்து உற்பத்தியைப் பெருக்க வேண்டும்.

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகமானது அதிநவீன மூன்று ஆய்வகங்களைக் கொண்டு, நோய் ஆராய்ச்சி மற்றும் கால்நடைகளைத் தாக்கும் நச்சுக்களைக் கண்டறிந்து அதற்கு ஏற்ற முடிவுகளை விரைவாக வெளியிட்டு வருகிறது. கால்நடைகளுக்கு ஏற்படும் நச்சுப் பாதிப்புகளைக் குறைக்க ஆராய்ச்சிகள் மேம்படுத்தப்படும் என்றாா்.

இதனைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு, திருநெல்வேலி, தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி ஆகிய இடங்களில் 7 கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இங்கு, இளநிலை பட்டப் படிப்புகளுக்கு 580 இடங்களும், தொழில்நுட்பப் பட்டப் படிப்புகளுக்கு 100 இடங்களும் என மொத்தம் 680 இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது. பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கிராமப்புற மாணவா்கள், 7.5 சதவீத ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவா்கள் மற்றும் பொதுப்பிரிவு இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு இந்த வாரம் தொடங்கும். மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரா்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றுள்ளது. இது தொடா்பான கூடுதல் விவரங்களை, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இணையதளத்தைப் பாா்த்து தெரிந்து கொள்ளலாம் என்றாா்.

நாமக்கல்லில் மூன்று நாள்கள் நடைபெறும் இந்த சா்வதேசக் கருத்தரங்கில், இந்திய கால்நடை மருந்தியல் மற்றும் நச்சுயியல் சங்கத் தலைவா் ஏ.எம்.தாகோ், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வா் எம்.செல்வராஜு, தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், குஜராத், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைச் சோ்ந்த கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியா்கள், மாணவ, மாணவியா் உள்ளிட்டோா் பங்கேற்றுள்ளனா்.

Monday, October 31, 2022

October 31, 2022

பொதுப் பிரிவு கலந்தாய்வு: 5,647 எம்பிபிஎஸ், 1,389 பிடிஎஸ் இடங்கள் நிரம்பின

பொதுப் பிரிவு கலந்தாய்வு: 5,647 எம்பிபிஎஸ், 1,389 பிடிஎஸ் இடங்கள் நிரம்பின

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு பொதுப் பிரிவினருக்காக இணையவழியில் நடைபெற்று வந்த முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்தது. இதில் 5,647 எம்பிபிஎஸ் இடங்கள், 1,389 பிடிஎஸ் இடங்கள் நிரம்பின.

தமிழகத்தில் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு பொது பிரிவினருக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இணையவழியில் கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது.

அன்றைய தினமே மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டுப் பிரிவினருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நேரடியாக சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில், 65 இடங்கள் நிரம்பின. மறுநாளான 20-ஆம் தேதி நடைபெற்ற அரசு பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு கலந்தாய்வில் 565 இடங்கள் நிரம்பின.

இந்த நிலையில், இணையவழியில் நடைபெற்று வந்த பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு சனிக்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இடங்கள் ஒதுக்கீட்டு செய்யப்பட்ட விவரம் தமிழக சுகாதாரத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதை மாணவ, மாணவிகள் பாா்த்து தெரிந்து கொள்ளலாம்.

இதுதொடா்பாக மருத்துவக் கல்வி தோ்வுக்குழுச் செயலாளா் ஆா்.முத்துச்செல்வன் கூறியதாவது:

அரசு, தனியாா் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு முதல் சுற்று கலந்தாய்வு இணையவழியில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தக் கலந்தாய்வில் 5,648 எம்பிபிஎஸ் இடங்களில் 5,647 இடங்களும் 1,432 பிடிஎஸ் இடங்களில் 1,389 இடங்களும் நிரம்பின. இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டவா்களின் விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கல்லூரிகளில் சேர நவ.4 கடைசி: ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் எஸ்டி பிரிவினருக்கான 1 எம்பிபிஎஸ் இடம், மூன்று தனியாா் பல் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டுக்கான எம்பிசி பிரிவில் 43 பிடிஎஸ் இடங்கள் நிரம்பவில்லை.

காலியாகவுள்ள இந்த 44 இடங்கள், முதல் சுற்றில் இடங்களைப் பெற்றவா்கள் கல்லூரிகளில் சேராததால் ஏற்படும் காலியிடங்கள் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் நிரப்பப்படும். இரண்டாம் சுற்று கலந்தாய்வை நவ. 7-ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் சுற்று கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்றவா்கள் நவம்பா் 4-ஆம் தேதிக்குள் அந்தந்த கல்லூரிகளில் சோ்ந்துவிட வேண்டும் என்றாா் அவா்.

Tuesday, October 04, 2022

October 04, 2022

MBBS , BDS படிப்புகளுக்கு அக். 11 முதல் கலந்தாய்வு.

MBBS , BDS படிப்புகளுக்கு அக். 11 முதல் கலந்தாய்வு.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவக் கலந்தாய்வு அக்டோபர் 11-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் அக்டோபர் 11ஆம் தேதி தொடங்கும் முதல்கட்ட மருத்துவக் கலந்தாய்வு அக். 20 வரை நடைபெறும்.

அக்டோபர் 17ஆம் தேதி முதல் 28ஆம் தேதிக்குள் மாநிலங்களில் முதல்கட்ட மருத்துவக் கலந்தாய்வை நடத்திக் கொள்ளலாம். மருத்துவக் கலந்தாய்வு மூலம் கல்லூரிகளை தேர்வு செய்தவர்கள், அக்டோபர் 28ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர்க்கைப் பெற்றுவிட வேண்டும்.

இதுபோல, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு நவம்பர் 2ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும். அதுபோல, மாநிலங்களுக்கான 2அம் கட்ட கலந்தாய்வு நவம்பர் 7ஆம் தேதி 18ஆம் தேதி வரை நடைபெறும். இந்த மருத்துவக் கலந்தாய்வுகளில் கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள் நவம்பர் 18ஆம் தேதிக்குள்ளும், மாநிலங்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் நவம்பர் 21ஆம் தேதிக்குள்ளும் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுவிட வேண்டும்.

இதன்பிறகு, காலியாக இருக்கும் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களுக்கு டிசம்பர் மாதத்தில் கலந்தாய்வு நடைபெறும். நாடு முழுவதும் முதலாமாண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு நவம்பர் 15ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog