Breaking

Showing posts with label Tamil exams. Show all posts
Showing posts with label Tamil exams. Show all posts

Thursday, February 16, 2023

February 16, 2023

'பத்தாம் வகுப்பு மொழி பாடத் தேர்வு: தாய்மொழியில் எழுத அனுமதி’

'பத்தாம் வகுப்பு மொழி பாடத் தேர்வு: தாய்மொழியில் எழுத அனுமதி’

தாய்மொழியில் 10-ம் வகுப்பு மொழி பாடத் தேர்வு எழுதுவதற்கு அனுமதி - அரசு தேர்வு துறை அறிவிப்பு உச்சநீதிமன்றம் அண்மையில் தமிழை கட்டாய பாடமாக்குவதிலிருந்து ஓராண்டுக்கு விலக்களித்த நிலையில் அதனை பின்பற்றி தேர்வு துறை அறிவித்துள்ளது

10ம் வகுப்பு பொதுத்தேர்வில், சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து, அவரவர் தாய்மொழியில் மொழி பாடத்தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்க அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு தமிழ் கற்பிக்கும் சட்டம் 2006-ன் படி, 1 முதல் 10 வகுப்பு வரை மாணவர்களுக்கு தமிழ்ப்பாடம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் சிறுபான்மை மொழியைத் தாய்மொழியாக கொண்ட மாணவர்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும். அதே சமயம், வேறு மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ள (Migration Transfer மூலம்) மாணவர்கள் தமிழ் மொழியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழிப் பாடம் எழுவதுதில் இருந்து விலக்கு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2019ம் ஆண்டுவழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 2020 -22 வரையிலான கல்வி ஆண்டு வரை மட்டும் சிறுபான்மை மொழியைத் தாய்மொழியாக கொண்ட மாணவர்களுக்கு தமிழ் பாடத்தில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டது

இந்நிலையில், 2023ம் கல்வியாண்டிலும் விலக்கு அளிக்கக் கோரி மாணவர் தரப்பில் இருந்து இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்கே கவுல், ஓஎஸ் ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழை கட்டாய பாடமாக்குவதிலிருந்து ஓராண்டுக்கு விலக்களித்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, மொழிச் சிறுபான்மை மாணவர்கள் தமிழ் பாடத் தேர்வு எழுதுவதில் இருந்து தவிர்ப்பு கோரலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

2023ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் 20 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவு மே 17ம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, February 07, 2023

February 07, 2023

பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்

பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்

பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழகத்தில் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாக்கி 17 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை மேலும் ஓராண்டிற்கு தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கிறது. தமிழகத்தில் தமிழை ஒரு பாடமாகக்கூட படிக்காமல் பட்டம் பெற முடியும் என்ற நிலை காலம் காலமாக தொடர்வதை அனுமதிப்பது அன்னை தமிழுக்கு இழைக்கப்படும் இரண்டகமாகும்.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடமாக்கும் சட்டம் 2006-ஆம் ஆண்டு ஜூன் 9-ம் நாள் தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சி கொடுத்த தொடர் அழுத்தத்தின் காரணமாகவே இப்படி ஒரு சட்டத்தை முதல்வர் கருணாநிதி தலைமையிலான அன்றைய அரசு கொண்டு வந்தது. அச்சட்டத்தின்படி 2006-ம் ஆண்டில் ஒன்றாம் வகுப்பு, 2007-ம் ஆண்டில் இரண்டாம் வகுப்பு, 2008-ம் ஆண்டில் மூன்றாம் வகுப்பு என படிப்படியாக தமிழ் கட்டாயப்பாடமாக்கப்பட்டு 2015-16ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விலும் தமிழ் கட்டாயப்பாடமாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த சட்டத்திற்கு எதிராக மொழிச்சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 2015-16ம் ஆண்டில் தமிழ் கட்டாயப்பாட சட்டத்தை செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்தது. இந்தத் தடை உயர்நீதிமன்றத்தால் 2021-22 வரை நீட்டிக்கப்பட்டது. அதற்குப் பிறகு இந்த தடையை நீட்டிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், அதை எதிர்த்து மொழிச்சிறுபான்மை பள்ளிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டின் மீது தான் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தகுதியின் அடிப்படையிலானது அல்ல; பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக இந்த வழக்கை விசாரித்து முடிக்க இயலாது என்ற அடிப்படையில் தான் இந்த இடைக்காலத் தீர்ப்பை வழங்கியுள்ளது. வரும் ஜூலை 11-ம் தேதி தொடங்கும் வாரத்தில் இந்த வழக்கின் இறுதி விசாரணையை நடத்தவுள்ள உச்சநீதிமன்றம், அதன்பின் இறுதித் தீர்ப்பை வழங்கும். ஆனால், 2016-ம் ஆண்டில் கட்டாயப் பாடமாகியிருக்க வேண்டிய தமிழ் மொழி, அந்த தகுதியை அடைய இன்னும் ஒராண்டு ஆகுமே? என்பது தான் கவலையளிக்கிறது.

தமிழகத்தில் தமிழை கட்டாயப்பாடமாக கற்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மொழிச் சிறுபான்மை பள்ளிகள் கோருவதில் நியாயமும் இல்லை; அறமும் இல்லை. மொழிச் சிறுபான்மை பள்ளிகளில் படிப்போர் அனைவரும் மொழிச் சிறுபான்மையினர் அல்ல. மொழிச் சிறுபான்மையினராகவே இருந்தாலும் அவர்கள் தமிழ்நாட்டில் தமிழ் மொழியை படித்து தான் ஆக வேண்டும். ஆங்கிலத்தை கட்டாயப் பாடமாகவும், இந்தி, சமஸ்கிருதம் போன்றவற்றை விருப்பப்பாடமாகவும் கற்பிக்கும் பள்ளிகள், தமிழ்நாட்டு அரசின் உதவிகளையும், சலுகைகளையும் பெற்றுக் கொண்டு, தமிழை மட்டும் கட்டாயப் பாடமாக கற்பிக்க மாட்டோம் என்று கூறுவதற்கு எந்த தகுதியும் கிடையாது; உரிமையும் கிடையாது. அதுமட்டுமின்றி, தமிழைக் கட்டாயப் பாடமாக்கும் நடைமுறையில் சிறுபான்மை பள்ளிகள் நேர்மையாக நடந்துகொள்ளவில்லை. 2006-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஓவ்வொரு வகுப்புக்கு நீட்டிக்கப்பட்டு பத்தாவது ஆண்டில் தான் பத்தாம் வகுப்புக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு வகுப்புக்கு தமிழ்ப் பாடம் நீட்டிக்கப்படும் போது அந்த வகுப்பில் தமிழ் கற்பிக்கப்பட்டதற்கான சான்றிதழை அனைத்துப் பள்ளிகளின் நிர்வாகங்களும் அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். அது கட்டாயமாகும். அதன்படி முந்தைய 9 ஆண்டுகளும் தங்களது பள்ளி மாணவர்களுக்கு தமிழ் பாடத்தைக் கற்றுக் கொடுத்ததாக அரசிடம் சான்றிதழ் வழங்கிய தனியார் பள்ளிகள், பத்தாவது ஆண்டில் மட்டும் சரியான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் குழந்தைகளுக்கு தமிழ்ப் பாடத்தை கற்பிக்க முடியவில்லை என்று கூறி விலக்கு கோருவது எவ்வகையில் நியாயம்?

தமிழ் கட்டாயப்பாடச் சட்டத்திற்கு எதிராக, அந்த சட்டம் கொண்டு வரப்பட்ட போதே சிறுபான்மை பள்ளிகள் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தன. ஆனால், அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்,‘‘அரசியல் சட்டத்தின் 29 மற்றும் 30 ஆவது பிரிவுகளின்படி சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள எந்த உரிமையையும் தமிழ் கட்டாயப் பாட சட்டம் பறிக்கவில்லை. உள்ளூர் மொழியை கற்றுக்கொள்வது குழந்தைகளின் நலனுக்கு மிகவும் நல்லது. மாறாக உள்ளூர் மொழியை கற்பிக்க மறுப்பது நாட்டின் ஒற்றுமைக்கு நல்லதல்ல’’ எனத் தீர்ப்பளித்தது. சிறுபான்மை பள்ளிகளின் கோரிக்கை நியாயமற்றது என்பது அவற்றின் நிர்வாகங்களுக்கே தெரியும். ஆனால், அந்த பள்ளிகளின் முயற்சிகளை முறியடிக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்காதது தான் ஏமாற்றமளிக்கிறது. தமிழ் கட்டாயப் பாடத்தை எதிர்த்து சிறுபான்மை பள்ளிகள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை முன்கூட்டியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால், நடப்பாண்டிலிருந்து பத்தாம் வகுப்பு வரை தமிழ்க் கட்டாயப்பாடமாக்கப்பட்டிருக்கும். ஆனால், அதை செய்ய அரசு தவறிவிட்டது.

தமிழக அரசு வழங்கும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் ஆங்கிலம், அறிவியல் உள்ளிட்ட பாடங்களின் பெயர்கள் அப்படியே அச்சிடப்படும் நிலையில், தமிழ் என்று இருக்க வேண்டிய இடத்தில் மட்டும் மொழிப்பாடம் என்று குறிப்பிடப்படுவதை காண சகிக்கவில்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். அதற்காக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை சிறப்பாக நடத்தி, அடுத்த ஆண்டிலிருந்தாவது பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, September 06, 2022

September 06, 2022

மாணவர்களுக்கு அக். 1-ல் தமிழ் ‘திறனறித் தேர்வு’: வெற்றி பெற்றால் மாதம் ரூ. 1,500!

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தமிழ்மொழி திறனை மேம்படுத்தும் வகையில் அக்டோபர் 1ஆம் தேதி திறனறித் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தேர்வில் வெற்றி பெறும் 1,500 மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.1,500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பள்ளி மாணவ / மாணவியர்கள் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்குப் பெருமளவில் தயாராகிப் பங்குபெறுவதைப் போன்று தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் “திறனறித் தேர்வு” அரசு தேர்வுகள் இயக்ககம் வாயிலாக நடைபெறவுள்ளது.

2022-2023 ஆம் கல்வியாண்டில் அரசுப்பள்ளி மற்றும் அனைத்துவகை பள்ளியில் பயிலும் (சி.பி.எஸ்.இ/ஐ.சி.எஸ்.இ) பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் / மாணவிகள் இத்தேர்வினை எழுத 09.09.2022 வரை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாடம் இதற்கான பாடத்திட்டம் ஆகும்.

இத்தேர்வு கொள்குறி வகையில் (அப்ஜெக்டிவ் டைப்) நடைபெறும். ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வீதம் 100 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்படும். இத்தேர்வு 01.10.2022 அன்று காலை 10.00 – 12.00 வரை நடைபெறும். இத்தேர்விற்கு விண்ணப்பிப்பவர்கள் இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டினை மேற்குறிப்பிடப்பட்ட இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் இத்தேர்வில் வெற்றிபெறும் 1500 மாணவ / மாணவியர்களுள் 750 அரசு பள்ளி மாணவர்களும் 750 இதர பள்ளி மாணவர்களுக்கும் திங்கள் ஒன்றுக்கு ரூ.1500/- இரண்டு ஆண்டுகளுக்கு தொகை வழங்கப்படவிருக்கிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இத்திட்டத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் நிகழ்வாண்டிற்கு 2.70 கோடியும், வரும் ஆண்டுமுதல் ரூ. 5.40 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog