Breaking

Showing posts with label ENGLISH. Show all posts
Showing posts with label ENGLISH. Show all posts

Thursday, August 25, 2022

August 25, 2022

ஆங்கிலத்தால் 5% மட்டுமே பயன் தாய் மொழியில் படிப்பதால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு

‘ஆங்கில மோகத்தால் நாட்டின் ஐந்து சதவீத மக்களின் திறன் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது,’ என்று அமித்ஷா பேசிய நிலையில், அவர் இந்திக்கு ஆதரவாக மீண்டும் கருத்து தெரிவித்துள்ளதாக சர்ச்சை கிளம்பி உள்ளது. மத்திய பிரதேசத்தில் புதிய கல்விக் கொள்கை - 2020 என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:

குஜராத் அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு அடியெடுத்து வைத்த காலத்தில், ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் இந்தியில் இருந்து குஜராத்திக்கு மொழி பெயர்த்து கட்டுரைகளை படித்தேன். இந்தியில் எனது புலமையை மேம்படுத்துவதற்கு பதிலாக ஆங்கிலத்தில் கவனம் செலுத்துங்கள் என்று தலைவர் ஒருவர் கூறினார். தாய் மொழியில் படிக்கும் 95 சதவீத குழந்தைகளின் திறன்கள் பயன்படாமல் போவதால், நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தாய் மொழி திறனை முழுமையாக பயன்படுத்தினால் நாடே பிரகாசமாக இருக்கும்.

ஆங்கில மோகத்தால் நாட்டின் ஐந்து சதவீத மக்களின் திறன் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார். இந்தியை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என அமித்ஷா ஏற்கனவே கூறியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது இந்திக்கு ஆதரவாக அவர் பேசி இருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Monday, January 17, 2022

January 17, 2022

அரசு பள்ளிகளில் ஆங்கில ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேசி பாடம் நடத்த வேண்டும்: பள்ளி கல்வி கமிஷனரகம்

'அரசு பள்ளிகளில், ஆங்கில ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேசி பாடம் நடத்த வேண்டும்' என, பள்ளி கல்வி கமிஷனரகம் அறிவுறுத்தி உள்ளது.

பள்ளி கல்வித்துறை பணிகள் குறித்து, விழுப்புரத்தில் மண்டல ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் திருவாரூர் மாவட்ட கல்வி அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், பள்ளி கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார் தலைமையிலான அதிகாரிகள், விழுப்புரம் மண்டலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நடத்திய ஆய்வின் முடிவுகளை சமர்ப்பித்தனர். இந்த ஆய்வறிக்கை அடிப்படையில், கமிஷனர் தரப்பில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன. அதன் விபரம்:ஆசிரியர்களின் பாடக்குறிப்பேடு சரியாக மேற்கொள்ளப்படவில்லை. வகுப்பறை செயல்பாடுகளில் திருப்தி இல்லை. சில ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தவே தெரியவில்லை. ஆங்கில ஆசிரியர்கள் தமிழில் பேசி பாடம் நடத்துகின்றனர். ஆங்கில பாடம் எடுப்பவர்கள், தமிழில் பேசுவது எப்படி பொருத்தமாக இருக்கும். இதை மாற்றி, அவர்கள் ஆங்கிலத்தில் பேச முயற்சிக்க வேண்டும்.

பள்ளிகளின் கண்காணிப்பு பதிவேடு சரியாக பராமரிக்கப்பட வேண்டும். பதிவேடுகளில் போலியான, தவறான தகவல்கள் இடம் பெறக்கூடாது. தலைமை ஆசிரியருக்கு, மாணவர்களுக்கான பாடங்களை பற்றிய புரிதல் இருக்க வேண்டும். பாடக்குறிப்பேடு எழுதாத ஆசிரியர்கள் மீது, தலைமை ஆசிரியர்கள், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் தலைமை ஆசிரியர் பள்ளி வளாகத்தில் சுற்றி வந்து, வகுப்பறை செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும்.வகுப்பறைகளில் மாணவர் வழிபாட்டு கூட்டம் நடத்த வேண்டும். கட்டுரை, பாட நோட்டுகள் ஆகியவற்றை உரிய நேரத்தில் ஆசிரியர்கள் திருத்தி, மாணவர்களுக்கு பிழைகளை விளக்க வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவை கட்டாயம் பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது, பாலியல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து, விரைந்து சரிசெய்ய வேண்டும். வீட்டு பாடங்களை மாணவர்களுக்கு வழங்கி அவற்றை திருத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, October 13, 2021

October 13, 2021

1 முதல் 8 ஆம் வகுப்புகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு துவங்க அனுமதி- சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் அனுமதி வழங்க தெரிவித்தல் தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல் முறைகள்

தொடக்கக்கல்வி - ஆங்கில வழி பாடப்பிரிவு செயல்படும் சுயநிதி/ நிதியுதவி/ பகுதிநிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்புகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு துவங்க அனுமதி சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் அனுமதி வழங்க தெரிவித்தல் தொடர்பாக.

பார்வை.

1. அரசாணை எண்.101, பள்ளிக் கல்வித்(Budget-1) துறை, நாள்.18.05.2018,

2. அரசாணை எண்.148, பள்ளிக் கல்வித் துறைநாள்.20.07.2018.

ஆணை:

தொடக்கக் கல்வி துறையின் கீழ் செயல்படும் நிதியுதவி/ பகுதிநிதியுதவி/ சுயநிதி தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்புகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு துவங்க அனுமதி கோரும் கருத்துருக்கள் சம்மந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் சார்ந்த பள்ளியை பார்வையிட்டு அதன்படி கருத்துருக்கள் பரிந்துரையுடன் பெறப்பட்டு அவை பார்வை 2 ல் காணும் அரசாணைகளின்படி பரிசீலிக்கப்பட்டு உரிய அனுமதி இவ்வியக்ககத்தால் வழங்கப்பட்டு வருகிறது.

பார்வை 1-ல் காணும் அரசாணையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சில அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகளில் சுயநிதி/ நிதியுதவி/ பகுதிநிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 6-10 வகுப்புகளில் ஆங்கில வழிப்பிரிவு துவங்க அனுமதியினை உரிய அரசாணைகளின் அடிப்படையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நிலையிலேயே வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ள நிலையில், இனிவரும் காலங்களில் அனைத்து மாவட்டத்தில் செயல்படும் சுயநிதி/ நிதியுதவி/ பகுதிநிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்புகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு துவங்க அனுமதி கோரும் கோப்பின் தன்மையை கருதி கருத்துருக்களை பார்வை 2 ல் காணும்அரசாணையில் தெரிவித்துள்ள அனைத்து நிபந்தனைகளும் முழு அளவில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை நன்கு பரிசீலித்து, ஆங்கில வழிப்பிரிவு துவங்க அனுமதியினை 50% பிரிவுகள் கண்டிப்பாக தமிழ்வழிப் பிரிவுகளாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நிலையிலேயே வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. உதாரணமாக ஒரு பள்ளியில் 4 பிரிவுகள் இருந்தால் 2 பிரிவுகள் தமிழ்வழி பிரிவாகவும், 2 பிரிவுகள் ஆங்கில வழி பிரிவாகவும் செயல்பட அனுமதி வழங்கலாம்." 3 பிரிவுகள் இருந்தால் 2 பிரிவுகள் தமிழ்வழி பிரிவாகவும், 1 பிரிவு ஆங்கில வழி பிரிவாகவும் செயல்பட அனுமதி வழங்கலாம்; 1 பிரிவு மட்டும் செயல்பட்டால் அது தமிழ்வழி பிரிவாகவே செயல்பட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்படுகிறது.

Wednesday, September 22, 2021

September 22, 2021

தமிழ் வழி மாணவர்களுக்கு ஆங்கில பிரச்னை: அமைச்சர் மகேஷ் வருத்தம்

ஆங்கிலம் பேச முடியாமல், தமிழ் வழி மாணவர்கள் உயர் கல்வியில் சிரமப்படுவதாக, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.


அவர் அளித்த பேட்டி: அரசு பள்ளிகளை முன்னேற்றவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி கிடைக்கவும் தேவையான எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும், உரிய சலுகைகள் வழங்குவது குறித்து, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.


தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள், உயர் கல்வியில் படிக்க சிரமப்படுவதாக தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்படும்.இவ்வாறு மகேஷ் கூறினார்.
September 22, 2021

பொறியியல் முதுநிலை படிப்புகள்:விண்ணப்பப் பதிவுக்கு இன்று கடைசி

முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு புதன்கிழமையுடன் நிறைவடையவுள்ளது.


அண்ணாபல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகளில் எம்.இ, எம்.டெக், எம்.ஆா்க், எம்.பிளான் உள்ளிட்ட முதுநிலை படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இதற்கான, மாணவா் சோ்க்கை கலந்தாய்வான ‘டான்கா’ (தமிழ்நாடு பொது சோ்க்கை) அண்ணாபல்கலைகழகம் சாா்பில் நடத்தப்படுகிறது.


நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி தொடங்கியது. இந்தநிலையில், எம்.இ, எம்.டெக், எம்.ஆா்க், எம்.பிளான் முதுநிலை படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை கடைசி நாளாகும். டான்செட், கேட் தோ்வில் தகுதி பெற்ற மாணவா்கள் டான்கா கலந்தாய்வில் பங்கேற்க www.tanca.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Saturday, September 11, 2021

September 11, 2021

தனியாா் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்பு: முதன்மைக் கல்வி அலுவலா்கள் அனுமதி வழங்கலாம்

தனியாா் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்குவதற்கான அனுமதி அளிக்கும் அதிகாரம் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும், அரசு நிதியுதவி மற்றும் தனியாா் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 6 முதல் 10-ம் வகுப்புகள் வரை, ஆங்கில வழிப் பாடப்பிரிவைத் தொடங்கக் கருத்துருக்கள் பெறப்பட்டன. அரசாணைகளின்படி, தனியாா் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்குவதற்கான அனுமதி அளிக்கும் அதிகாரம் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு இயக்குநரகத்தால் வழங்கப்படுகிறது.

இனிவரும் காலங்களில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும், சில அதிகாரப் பகிா்வுகள் அளிக்கப்படும். அதாவது, தங்கள் மாவட்டங்களில் செயல்படும் அரசு நிதியுதவி மற்றும் தனியாா் பள்ளிகளில், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்க, அனைத்து நிபந்தனைகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பரிசீலித்து, தங்கள் நிலையில் அனுமதி வழங்கலாம் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, August 28, 2021

August 28, 2021

6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’- சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்.

சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று கூறியது:

பள்ளிகளில் ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ வகுப்பு நடத்துவது பற்றிபேரவைத் தலைவர் கூறியிருக்கிறீர்கள். 5 ஆண்டுகளுக்கு முன்பு உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடர்ந்தீர்கள். அரசுப்பள்ளிகளில் 8, 10-ம் வகுப்பு முடித்த மாணவர்களால் ஆங்கிலத்தில் பேச முடிவது இல்லை.

பள்ளிக்கூட நேரத்தில் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு நடத்தினால், வழக்கமான பாடத் திட்டங்களை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு,6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனியாகவும், 9, 10, 11, 12-ம்வகுப்பு மாணவர்களுக்கு தனியாகவும் பள்ளி நேரம் முடிந்த பிறகு அரைமணி நேரம் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம்.

பேரவைத் தலைவர் அப்பாவு:இது நல்ல அறிவிப்பு. தமிழக மக்கள் சார்பாக நன்றி. அரசுப் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரைதமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலம் பேசத் தெரியாமல் இருந்தார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளீர்கள். அதற்காக முதல்வருக்கும், உங்களுக்கும் நன்றி. அமைச்சர்: மனப்பாடம் செய்துதேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள், போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற முடிவது இல்லை. எனவே, பாடங்களை புரிந்து படிக்க வேண்டும் என்பதற்காக 413 வட்டாரங்களில் கையடக்க கணினி மூலம் இந்த குறையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

இடியும் நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பல உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நபார்டு வங்கி,ஊரக வளர்ச்சித் துறை ஆகியவற்றிடம் இருந்து நிதி பெற்று புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Thursday, August 26, 2021

August 26, 2021

உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி பாடப்பிரிவுக்கு சிஇஓவே அங்கீகாரம் வழங்கலாம்: கூடுதல் அதிகாரம் வழங்கி ஆணையர் உத்தரவு.

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து சுயநிதி பள்ளிகளும் முழுமையாக ஆங்கில வழிப்பிரிவுக்கு மாறி வருகிறது. ஆங்கில வழிப்பிரிவு தொடங்க பள்ளிக்கல்வித்துறை இயக்ககத்தின் அனுமதி பெற வேண்டும். இதற்காக ஒவ்வொரு பள்ளியும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டியுள்ளதால் அங்கீகாரம் பெறுவதற்கு தாமதம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவுக்கு அந்தந்த மாவட்ட சிஇஓக்களே அங்கீகாரம் வழங்கும் விதமாக, கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட சிஇஓக்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் சுயநிதி, நிதியுதவி, பகுதி நிதியுதவி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்புகளில் ஆங்கில வழிப் பாடப்பிரிவு துவங்க அனுமதி கோரும் கருத்துருக்கள், சம்பந்தப்பட்ட சி.இ.ஓ.,க்களால் பரிந்துரை பெறப்பட்டு, இயக்ககத்தால் உரிய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து மாவட்ட சிஇஓக்களுக்கும் சில அதிகார பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இனிவரும் காலங்களில் தங்கள் மாவட்டத்தில் செயல்படும் சுயநிதி, நிதியுதவி, பகுதி நிதியுதவி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்புகளில் ஆங்கில வழிப் பாடப்பிரிவு தொடங்க வரும் கருத்துருக்களை, அனைத்து நிபந்தனைகளும் முழு அளவில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை பரிசீலித்து, அவர்களே அனுமதி வழங்கிக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, August 15, 2021

August 15, 2021

வரும் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஆசிரியர்களுக்கு 30 நாட்களுக்கு ஆங்கில பயிற்சி

டெல்லி கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம் என்ற நிறுவனத்தால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழி கற்பித்தல் பாடநெறி சான்றிதழ் என்ற தலைப்பில் வரும் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை 30 நாட்கள் இணைய வழி பயிற்சி பட்டறை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில், ஆங்கிலம் பயிற்றுவிக்கும் 25 ஆசிரியர்களும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் 25 ஆசிரியர்களும் மொத்தம் 50 ஆசிரியர்களை இணையவழி பயிற்சிக்கு பரிந்துரை செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி சார்பான விவரங்கள் மற்றும் ஆசிரியர்களை பயிற்சிக்கு பரிந்துரை செய்யும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பயிற்சியில் கலந்துகொள்ள அரசு, அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களில் ஒரு ஆசிரியரும் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களில் ஒரு ஆசிரியரும் என மொத்தம் தகுதியான 2 ஆசிரியர்களை பரிந்துரை செய்ய வேண்டும். அதற்கான பட்டியலை பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு நாளைக்குள் முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பமிட்ட கடிதத்தை விரைவு அஞ்சலில் அனுப்புமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

Saturday, July 10, 2021

July 10, 2021

தமிழகத்தில் ஆங்கில வழிக் கல்வி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் – அதிகாரிகள் விளக்கம்!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு

கொரோனா 2 ஆம் அலை காரணமாக கடந்த 2 மாதங்களாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதற்கிடையில் 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வுகள் இன்றி அடுத்த வகுப்புகளுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தற்போது மதிப்பீட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கான புதிய கல்வியாண்டு வகுப்புகள் சில நாட்களுக்கு முன்னாக ஆன்லைனில் துவங்கியுள்ளது. ஆனால் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் இன்னும் தொடங்கவில்லை. இது குறித்து மருத்துவ வல்லுநர்கள், சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அரசு பள்ளிகளில் பயிலும் தமிழ் வழிக்கல்வி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக புதிய வகுப்புகள் முறையான வழிகாட்டுதல்களுடன் தொடங்கியிருந்தாலும், ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு எவ்வித வகுப்புகளும் இதுவரை நடத்தப்படவில்லை. அதற்கான அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியிடப்படாமல் இருந்தது. இதனால் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி மூலம் பயின்று வரும் மாணவர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான பாடங்கள் தற்போது காணொளியாக மாற்றப்பட்டு வருகிறது. அதன் படி 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வீடியோ வடிவமைப்பு தயாரிப்பு முடிந்துள்ளது. தொடர்ந்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கான வீடியோக்கள் விரைவில் தயாரிக்கப்படும். அதன் பின்பாக கல்வி தொலைக்காட்சியில் அம் மாணவர்களுக்கு பாடங்கள் ஒளிபரப்பப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Total Pageviews

Search This Blog