Breaking

Showing posts with label Films. Show all posts
Showing posts with label Films. Show all posts

Tuesday, November 14, 2023

November 14, 2023

பள்ளிகளில் சாா்லி சாப்ளின் திரைப்படம் - கல்வித் துறை உத்தரவு



பள்ளிகளில் சாா்லி சாப்ளின் திரைப்படம் கல்வித் துறை உத்தரவு Charlie Chaplin Films in Schools Department of Education Directive

தமிழக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த மாதம் சாா்லி சாப்ளின் இயக்கி, நடித்த ‘தி கிட்’ திரைப்படம் திரையிடப்படவுள்ளதாக கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் சிறாா் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த மாதம் ‘தி கிட்’ எனும் மெளனப் படம் திரையிடப்படவுள்ளது. சாா்லி சாப்ளின் இயக்கி, நடித்த இந்த படமானது 1921-ஆம் ஆண்டு வெளியானது. சாா்லி சாப்ளினின் மிகச் சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்றாகும்.

இந்த படத்தை ‘எமிஸ்’ வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்குரிய பாடவேளைகளில் படத்தைத் திரையிட வேண்டும். அதற்குமுன் பொறுப்பாசிரியா் அந்த படத்தை பாா்த்து, அதன் கதைச் சுருக்கத்தையும் படித்து, மாணவா்களுக்கு படத்தின் அடிப்படை பின்னணியை விளக்க வேண்டும். இதுசாா்ந்த வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி, பள்ளி தலைமை ஆசிரியா்கள் படத்தை மாணவா்களுக்கு திரையிட்டு காண்பிக்க வேண்டும்.

மாநில அளவில் நடைபெறும் சிறாா் திரைப்பட விழாவில் பங்கேற்று, சிறந்து விளங்கும் 25 மாணவா்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவாா்கள். இதற்கான அறிவுறுத்தல்களை பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, October 17, 2023

October 17, 2023

பள்ளி மாணவி இயக்கிய அனிமேஷன் படம் வெளியீடு - குண்டான் சுட்டி

பள்ளி மாணவி இயக்கிய அனிமேஷன் படம் வெளியீடு - குண்டான் சுட்டி

ஓர் ஆண்டு மட்டும் ஆன்லைன் வாயிலாக அனிமேஷன் பயிற்சி பெற்று, துணிச்சலுடன் தனி ஆளாக “குண்டான் சட்டி” என்னும் 2 மணி நேர முழுநீள அனிமேஷன் தமிழ் திரைப்படத்தை இயக்கி, 8ஆம் வகுப்பு பயிலும் 12 வயது கும்பகோணம் பி.கே.அகஸ்தி, சர்வதேச திரைப்பட வரலாற்றில் புதிய சாதனை புரிந்துள்ளார்.இந்நிலையில், இவர் இயக்கிய “குண்டான் சட்டி” திரைப்படம் தமிழகம் முழுவதும் நாளை (அக்.13) 120 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. கும்பகோணம் பூர்ணிமா கார்த்திகேயன் தம்பதியினரின் இளைய மகள் 12 வயதே ஆன பி.கே.அகஸ்தி. இவர் கல்வியில் மட்டுமின்றி, விளையாட்டிலும் அதிக ஆர்வம் காட்டி, மாவட்ட மற்றும் மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தனது தனித்திறன் மற்றும் குழுத்திறனை வெளிபடுத்தி சான்றிதழ்களையும், பதக்கங்களையும், கோப்பைகளையும் குவித்துள்ளார். கரோனா காலகட்டத்தில் அதிகமான புத்தகங்கள் படித்தும், அதிலும் குறிப்பாக கார்ட்டூன்கள் குறித்த அனிமேஷன் புத்தகங்கள் என எண்ணற்ற புத்தகங்களை முழுமையாக படித்ததன் எதிரொலியாக, அது குறித்த ஓர் புத்தகம் எழுத வேண்டும் என்ற ஆவல் இவருக்கு எழுந்துள்ளது.அதற்கு இவரது பெற்றோர் இசைவு தர, பின்னர் அது வளர்ந்து ஏன் புத்தகத்துடன் நிறுத்த வேண்டும்? அதனை ஏன் ஒரு திரைப்படமாக இயக்கி உருவாக்கக் கூடாது என்ற எண்ணம் அவரது மனதில் துளர் விட்டுள்ளது. அதனை தன் பெற்றோரிடம் மீண்டும் எடுத்து வைக்க, இளைய மகளின் ஆசையைக் கண்டு முதலில் திகைத்த பெற்றோர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.அதைத் தொடர்ந்து தனது கனவை சிதைக்க விரும்பாத அகஸ்தி, தனக்கென “குண்டான் சுட்டி” என வித்தியாசமான பெயர் சூட்டி யூடியூப் சேனல் தொடங்கி, அதில் வெற்றி பெறத் தொடங்கினார்.

மகளின் விடாமுயற்சி மற்றும் அவரின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றியை நேரில் கண்டு வியந்த அவரின் பெற்றோர், தங்களது முடிவை மகளுக்காக மாற்றிக் கொண்டுள்ளனர்.அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு (2022) இதற்கான பூர்வாங்கப் பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கியது. மகளின் கனவிற்காக பாட்டியின் பெயரில் செல்லம்மா மூவி மேக்கர்ஸ் என்ற பெயரில் தந்தை கார்த்திகேயனே தயாரிப்பாளராக மாறியுள்ளார். பின்னர், விறுவிறுப்பாக திரைப்பட வேலைகள் நடைபெற்று வந்தது. தற்போது தமிழ் திரையுலகில் 12 வயது பள்ளி மாணவி அகஸ்தி, குண்டான் சட்டி என்ற அனிமேஷன் திரைப்படம் வாயிலாக இயக்குநராக அறிமுகமாகி, சர்வதேச அளவில் இளம் இயக்குநர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார்.குழந்தைகள் வீட்டில் பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்கின்றனர். குழந்தைகளிடம் பெற்றோர் எப்படி நடந்து கொள்கின்றனர். பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவ - மாணவிகளிடம் மற்றும் மாணவ - மாணவிகள் ஆசிரியர்களிடம் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பது போன்ற, சிறு சிறு விஷயங்களையும் இயல்பாகவும், சிறப்பாகவும் இந்த திரைப்படத்தின் மூலம் வெளி கொண்டு வந்திருக்கிறார் மாணவி, அகஸ்தி.இது மாணவ மாணவியர்கள், பெற்றோர் என அனைத்து தரப்பினரையும் கவரும் திரைப்படமாக வெளிவரவுள்ளது. அரங்கன் சின்னத்தம்பி திரைக்கதை எழுதியுள்ள இந்த திரைப்படத்திற்கு எஸ்.அமர்கித் இசையமைத்துள்ளார்.


இந்த திரைப்படம் தமிழகம் முழுவதும் 120 திரையரங்குகளில் வெளியாகிறது.ஏற்கனவே கும்பகோணத்தை பூர்வீகமாக கொண்ட இயக்குநர்கள் ஷங்கர், லிங்குசாமி, நடிகை ஸ்ரீப்ரியா, நடிகர்கள் தியாகு, நினைத்தாலே இனிக்கும் ராஜப்பா, உள்ளிட்ட எண்ணற்றோர் வெள்ளித்திரையில் பிரகாசித்து வருவதைப்போல, இவரும் தனக்க்கென தனி இடத்தை பிடிப்பார் என்பதில்லை ஐயமில்லை. மேலும், வரும் காலத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைத்தால், தொடர்ந்து திரைப்படங்கள் இயக்குவேன் என நம்பிக்கையோடு தெரிவிக்கிறார் இளம் இயக்குநர் அகஸ்தி.

Saturday, August 27, 2022

August 27, 2022

அரசுப் பள்ளிகளில் 6-9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு சிறாா் திரைப்படங்கள் வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சிறாா் திரைப்படங்கள் திரையிடுவது தொடா்பான புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையா் நந்தகுமாா், தொடக்கக் கல்வி இயக்குநா் க.அறிவொளி ஆகியோா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசு நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு, சிறாா் திரைப்படங்களை அவற்றிற்கென ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் திரையிட வேண்டும். அதிக எண்ணிக்கையிலான மாணவா்கள் இருந்தால் குழுக்களாகப் பிரித்து திரையிட வேண்டும்.

வாடகைக்குப் பெற்று... திரைப்படக்காட்டி (‘புரொஜெக்டா்’), தொலைக்காட்சிப் பெட்டி, ஒலிபெருக்கி இல்லாத பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலமாக வாடகைக்குப் பெற்றுத் திரையிடப்பட வேண்டும். திரைப்படம் திரையிடுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட ஆசிரியா் தங்களது மாணவா்களிடம் திரைப்படம் குறித்து சிறு உரையாடல் நிகழ்த்தி, மாணவா்களை ஊக்கப்படுத்த வேண்டும். படம் முடிந்த பிறகு அதுதொடா்பாக மாணவா்களிடம் ஆசிரியா்கள் கலந்துரையாட வேண்டும். மேலும் மாணவா்களின் கருத்துகளை பின்னூட்டக் கேள்வித்தாள் வாயிலாகப் பெறுதல் அவசியம்.

ஏதேனும் ஐந்து மாணவா்களை (வழக்கமாக வகுப்பில் பேசாத மாணவா்களை முன்னிலைப்படுத்துதல் நலம்) கண்டறிந்து அனைத்து மாணவா்கள் முன்னிலையிலும் திரைப்படம் குறித்து 3 நிமிஷங்கள் பேசச் செய்ய வேண்டும். பின்னா், அனைத்து மாணவா்களையும் திரைப்படம் குறித்து தங்கள் கருத்துகளை அவா்கள் சொந்த நடையில் எழுதித் தரச் சொல்ல வேண்டும். அனைத்து மாணவா்களின் படைப்புகளையும் ஆவணப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் திரையிடப்பட வேண்டிய திரைப்படத்துக்கான இணைப்பு (‘லிங்க்’) பள்ளிகளுக்கு அனுப்பப்படும். பள்ளி அளவில் ஒவ்வொரு மாதமும் சிறந்து விளங்கும் மாணவா்களை ஒன்றிய அளவிலும், ஒன்றிய அளவில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களை மாவட்ட அளவிலும் பங்கேற்க வாய்ப்பளிக்க வேண்டும்.

வெளிநாடுகளுக்கு சுற்றுலா: ஒவ்வொரு மாதமும் இவ்வாறு மாவட்ட அளவில் தெரிவு செய்யப்படும் மாணவா்கள் அனைவரும் ஆண்டுக்கொரு முறை மாநில அளவில் நடைபெறும் சிறாா் திரைப்பட விழாவில் பங்கேற்பா். அந்த நிகழ்வில் கலைத் துறையைச் சோ்ந்த வல்லுநா்களுடன் கலந்துரையாடுவா். மாநில அளவில் பங்கேற்கும் மாணவா்களில் சிறந்து விளங்கும் 15 மாணவா்கள் தெரிவு செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog