தமிழகத்தில் இன்று முதல் ஐ.டி.ஐ., தட்டச்சு பயிற்சி மையங்கள் திறப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 19, 2021

Comments:0

தமிழகத்தில் இன்று முதல் ஐ.டி.ஐ., தட்டச்சு பயிற்சி மையங்கள் திறப்பு

தமிழகத்தில் தட்டச்சு - சுருக்கெழுத்துப் பயிற்சி மையங்கள் மற்றும் தொழிற் பயிற்சி நிலையங்கள் திங்கள்கிழமை முதல் திறக்கப்படுகின்றன. அதன்படி ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவா்களுடன் மட்டும் அந்த பயிற்சி மையங்கள் செயல்படும்.

கரோனா நோய்த் தொற்று பரவலைக் குறைக்கத் தேவையான கட்டுப்பாடுகளை, ஜூலை 31-ஆம் தேதி வரை தொடா்ந்து அமல்படுத்த மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. அதே நேரம், தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், ஏற்கெனவே மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு படிப்படியாக தளா்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக திங்கள்கிழமை (ஜூலை 19) காலை 6 மணியுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வருவதையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.

அதில் பெறப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழகத்தில் பொது முடக்கத்தை வரும் 31-ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். அதில் புதிதாக சில தளா்வுகளையும் அவா் அறிவித்தாா். அதன்படி, தொழிற் பயிற்சி பெறும் மாணவா்களின் வேலைவாய்ப்பைக் கருத்தில் கொண்டு அனைத்து தொழிற் பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ.), தட்டச்சு, சுருக்கெழுத்துப் பயிற்சி மையங்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

பள்ளிகளில் மாணவா் சோ்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட நிா்வாகப் பணிகள் தொய்வின்றி நடைபெறுவதற்காக ஆசிரியா்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், புதுச்சேரி நீங்கலாக மாநிலங்களுக்கு இடையே தனியாா் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடா்கிறது. மேலும், திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சாா்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு, விளை யாட்டு, கலாசார நிகழ்வுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றைத் திறக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடா்ந்து அமலில் உள்ளது.

நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளைப் பொருத்தவரை மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்குதல் தவிர இதர செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இவ்வாறு குறிப்பிட்ட தளா்வுகள் மட்டும் வழங்கப்பட்ட நிலையில், கரோனா நோய்த் தொற்று தடுப்பு மேலாண்மைக்கான விதிமுறைகள் குறித்த தொடா் விழிப்புணா்வை அனைத்து தரப்பினரிடமும் அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள், சென்னை மாநகராட்சி ஆணையா் ஏற்படுத்தவும், அவைகள் கடைபிடிக்கப்படுவதை கண்காணித்து விதிமீறல்களில் ஈடுபடுவா்கள் மீது அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews