போராட்டத்தில் ஆசிரியர் தற்கொலை முயற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 13, 2026

Comments:0

போராட்டத்தில் ஆசிரியர் தற்கொலை முயற்சி



போராட்டத்தில் ஆசிரியர் தற்கொலை முயற்சி

பணி நிரந்தரம் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆசிரியர் கண்ணன் என்பவர் வார்னிஷ் குடித்துத் தற்கொலைக்கு முயன்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்னும் சில மாதங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர் அமைப்புகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில், தமிழ்நாடு உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை

எனினும் இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கைக்கு அரசு இன்னும் செவி சாய்க்கவில்லை. அதேபோல பகுதி நேர ஆசிரியர்களும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 2012-ஆம் ஆண்டில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். குறிப்பாக உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், தையல், இசை, தோட்டக் கலை, கட்டிடக்கலை, வாழ்க்கைக்கல்வி ஆகிய கல்வி இணைச் செயல்பாடு பாடங்களை கற்பிக்க 16 ஆயிரத்து 549 பேர் அப்போது 5 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்கள்.

14 ஆண்டாக பணி நிரந்தரம் இல்லை

இதைத் தொடர்ந்து 15ஆவது கல்வி ஆண்டாகியும் பகுதிநேர ஆசிரியர்கள் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இடைப்பட்ட இந்த காலங்களில் படிப்படியாக சம்பள உயர்வு மட்டுமே 7,500 ரூபாய்வரை வழங்கி தற்போது 12,500 ரூபாயாக வழங்கப்படுகிறது. இது இன்றைய காலகட்டத்தில் சிறிதளவு கூடப் போதுமானதாக இருப்பதில்லை. இதில் மரணம், பணி ஓய்வு, ராஜினாமா உள்ளிட்ட காரணங்களால் தற்போதுவரை சுமார் 5 ஆயிரம் பேர் பணியிடங்கள் காலியாகிவிட்டன.

இதனால் தற்போது சுமார் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் மட்டுமே பணி செய்கின்றார்கள். இவர்களுக்குப் பணி நிரந்தரம் கொடுப்பது மிகவும் சவாலான காரியமில்லை என்று ஆசிரியர்கள் குரல் எழுப்புகின்றனர். ஆசிரியர் கண்ணன் தற்கொலைக்கு முயற்சி

இதையடுத்து, பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர் கண்ணன், தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தொடர்ந்து ஆறு நாட்களாக போராட்ட களத்தில் உள்ள ஆசிரியர் கண்ணன், மிகுந்த மன உளைச்சல் காரணமாக இந்த முடிவை திடீரென்று எடுத்திருக்கிறார்.

போராட்டத்தில் ஈடுபட்டதால் கைதாகி வானகரத்தில் உள்ள மண்டபத்தில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் ஆசிரியர் கண்ணன், வார்னிஷ் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளார். தற்போது ஆபத்தான நிலையில் உள்ள அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆசிரியர்கள் மத்தியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews