Continuous training for students to improve their skills: School Education Department project to improve proficiency - திறன் இயக்க மாணவர்களுக்கு தொடர் பயிற்சி: தேர்ச்சியை மேம்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டம்
அரசுப் பள்ளிகளில் திறன் இயக்க மாணவர்களுக்கும் அரையாண்டுத் தேர்வு வரை தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொழிப்பாடம் மற்றும் கணிதத் திறனை மேம்படுத்தும் வகையில் திறன் இயக்கம் கடந்த ஜூலையில் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்துக்காக தேர்வான மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு காலாண்டுத் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகளின்படி அடிப்படை கற்றல் விளைவுகள் பகுதியில் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி பெற இன்னும் கூடுதல் காலஅவகாசம் தேவைப்படுகிறது. எனவே, இந்த திட்டத்தில் தேர்வான அனைத்து மாணவர்களும் அடிப்படை கற்றல் விளைவை அடையும் வகையில் அடுத்த 6 வாரங்களுக்கு (அரையாண்டுத் தேர்வு வரை) தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டும். தினம் ஒரு பாடம் என 90 நிமிடங்கள் கற்பிக்கப்பட வேண்டும்.
திறன் இயக்கத்துக்கு தேர்வான அனைத்து மாணவர்களும் மாதாந்திர மதிப்பீட்டுத் தேர்வில் பங்கேற்பது அவசியம். நடப்பு மாதத்துக்கான மாதாந்திரத் தேர்வு நவம்பர் 25 முதல் 27-ம் தேதி வரை வழக்கமான நடைமுறையின்படி நடைபெறும். திறன் இயக்கத்தில் அல்லாத மாணவர்களுக்கு வழக்கமான நடைமுறையின்படி அரையாண்டுத் தேர்வு நடத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.