ஏப்., 5 ல் ஆசிரியர்கள் போராட்டம் - தடுக்க அரசு நெருக்கடி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 02, 2025

Comments:0

ஏப்., 5 ல் ஆசிரியர்கள் போராட்டம் - தடுக்க அரசு நெருக்கடி

857


ஏப்., 5 ல் ஆசிரியர்கள் போராட்டம் - தடுக்க அரசு நெருக்கடி

சென்னையில் ஏப்., 5 ல் நடக்க உள்ள ஆசிரியர்கள் போராட்டத்தை தடுக்கும் வகையில் தமிழக அரசு நெருக்கடி கொடுப்பதாக அதிருப்தி எழுந்துள்ளது.

தொடக்க கல்வித்துறையில் 2009 ல் தி.மு.க., ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட ஆறாவது ஊதிய குழுவில் 'ஒரே கல்வி தகுதி, ஒரே பணிக்கு இரு வேறு' அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் 1.6.2009 க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8370 எனவும், 1.6.2009க்கு பின் (ஒரு நாள் இடைவெளியில்) நியமிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 5200 எனவும் நிர்ணயிக்கப்பட்டது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு இந்த சம்பள முரண்பாடு 15 ஆண்டுகளாக நீடிக்கிறது. இதைக் கண்டித்து பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடக்கின்றன. அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த போராட்டத்தில் அப்போதைய எதிர்க்கட்சி தலைராக இருந்த ஸ்டாலின், ''தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் சம்பள முரண்பாடு சரி செய்யப்படும்,'' என உறுதியளித்தார். அதன்படி 2021ல் தி.மு.க., தேர்தல் வாக்குறுதியிலும் '20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் (எண்:311)' என உறுதியளிக்கப்பட்டது. இதுவரை நடவடிக்கை இல்லை.

இதை கண்டித்து 2022ல் டிசம்பரில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (எஸ்.எஸ்.டி.ஏ.,) சார்பில் 6 நாட்கள் நடந்த காலவரையற்ற உண்ணாவிரதம், ஆசிரியைகள், குழந்தைகள் மயக்கம், போலீஸ் நெருக்கடி, கைது என சர்ச்சை ஏற்படுத்தியது. பிரச்னைக்கு தீர்வுகாண 3 நபர் குழு அமைக்கப்பட்டது. அது 2 முறை மட்டுமே கருத்து கேட்டது. அதிலும் முன்னேற்றம் இல்லை. இதை கண்டிக்கும் வகையிலும், சட்டசபை கூட்டத்தொடரில் 110 விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட வலியுறுத்தியும் சென்னை ஆர்.ஆர்., மைதான நுழைவு வாயிலில் ஏப்.5 ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எஸ்.எஸ்.டி.ஏ., அறிவித்துள்ளது. இப்போராட்டத்திற்கு அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் திரண்டு விடக்கூடாது என்ற வகையில் போலீஸ் மூலம் நெருக்கடி கொடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

எஸ்.எஸ்.டி.ஏ., நிர்வாகிகள் கூறியதாவது:

சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் நேரத்தில் 2022ல் நடந்தது போல் இந்த போராட்டம் மாறிவிட்டால் அரசுக்கு தேவையில்லாத நெருக்கடி ஏற்படும். இதனால் ஏப்., 5 அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் திரளாமல் அந்தந்த மாவட்டங்களிலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக முக்கிய நிர்வாகிகள், ஆசிரியர்களை பள்ளி சென்று வீடு திரும்பும் வரை போலீசார் தீவிரமாக கண்காணிக்கின்றனர். கடைசி நேரத்தில் 'ஹவுஸ் அரெஸ்ட்' கூட செய்யலாம். இது போராட்ட உரிமையை பறிப்பதாகும். இதையும் மீறி சென்னை போராட்டத்தில் பங்கேற்போம் என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84643695