SC & ST - பிரிவில் மாநிலங்களின் உள் இட ஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 05, 2024

Comments:0

SC & ST - பிரிவில் மாநிலங்களின் உள் இட ஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி!



SC & ST - பிரிவில் மாநிலங்களின் உள் இட ஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி!

எஸ்.சி., எஸ்.டி. இட ஒதுக்கீட்டில் மாநிலங்களின் உள் ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதிசெய்து இதுதொடர்பான மறு ஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டுள்ளது.

கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் பட்டியலின (எஸ்.சி.) மற்றும் பழங்குடியின (எஸ்.டி.) பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில், உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த ஆக.1 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உள்பட 6 நீதிபதிகள் உள்ஒதுக்கீடு செல்லும் எனத் தெரிவித்தனர். நீதிபதி பெலா எம்.திரிவேதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்.

பட்டியலினத்தில் மிகவும் பின்தங்கியவர்களுக்கு பஞ்சாப் அரசு கொண்டு வந்த உள் ஒதுக்கீடு செல்லும், எஸ்.சி., எஸ்.டி. உள் ஒதுக்கீட்டை மாநில அரசு வழங்க முடியும் என்று கூறினர்.

உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை ஆய்வு செய்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள், 'இந்த மனுக்களில் எந்த முகாந்திரமும் இல்லை. அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பு சரியானது. பட்டியலினத்தவர்களில் மிகவும் பின்தங்கியவர்களுக்கு மாநில அரசுகள் உள் ஒதுக்கீடு வழங்கலாம்' என்று கூறினர். மேலும் இதனை மீண்டும் வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறி மறு ஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் வகையில், ‘பஞ்சாப் பட்டியலின மற்றும் பின்தங்கிய வகுப்பினருக்கான அரசு வேலைவாய்ப்புகள் இடஒதுக்கீடு சட்டம் 2006’ என்ற சட்டத்தை நிறைவேற்றியது.

இதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை கடந்த 2010-ஆம் ஆண்டு விசாரித்த பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றம், ‘அரசு வேலைவாய்ப்புகளில் எஸ்.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் மாநில அரசு 50 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், 2004-ஆம் ஆண்டில் இ.வி.சின்னையா மற்றும் ஆந்திர மாநில அரசுக்கு இடையேயான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு அளித்த தீா்ப்பை மீறும் செயல்’ என்றும் குறிப்பிட்டு, ‘பஞ்சாப் பட்டியலின மற்றும் பின்தங்கிய வகுப்பினருக்கான அரசு வேலைவாய்ப்புகள் இடஒதுக்கீடு சட்டம் 2006’ சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

உயா்நீதிமன்றத் தீா்ப்பை எதிா்த்து மாநில அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதில், ‘உச்சநீதிமன்றத்தின் 2004-ஆம் ஆண்டு தீா்ப்பு பஞ்சாப் மாநிலத்துக்குப் பொருந்தாது’ என்று குறிப்பிட்டது. பின்னர் 2004 ஆம் ஆண்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு இந்த மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.

அதன்படி இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு, பட்டியலினத்தவரில் மாநில உள் இட ஒதுக்கீடு செல்லும் என்று கடந்த ஆக. 1 ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளனர்.

மேலும், இ.வி.சின்னையா மற்றும் ஆந்திர மாநில அரசுக்கு இடையேயான வழக்கில் கடந்த 2004 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews