தேசிய கல்விக் கொள்கை முதல்வா், மத்திய அமைச்சா் கருத்து மோதல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 10, 2024

Comments:0

தேசிய கல்விக் கொள்கை முதல்வா், மத்திய அமைச்சா் கருத்து மோதல்



தேசிய கல்விக் கொள்கை முதல்வா், மத்திய அமைச்சா் கருத்து மோதல்

தேசிய கல்விக் கொள்கை தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் இடையே சமூகவலைதளத்தில் கருத்து மோதல் ஏற்பட்டது. மத்திய அரசின் சமக்ர சிக்ஷா என்ற ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ், நிகழாண்டு தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. எனினும் தேசிய கல்விக் கொள்கையின் சில விதிகளை தமிழக அரசு ஏற்கவில்லை. குறிப்பாக, தமிழகத்தில் இருமொழிக் கொள்கை பின்பற்றப்படும் நிலையில், தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையை பி.எம்.ஸ்ரீ பள்ளிகளில் அமல்படுத்துவதில் தமிழக அரசு உடன்படவில்லை. இதன் காரணமாக சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய ரூ.573 கோடி முதல் தவணைத் தொகையை மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது.

இது தொடா்பாக மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் கடிதம் எழுதினாா். அதற்கு கடந்த மாதம் 30-ஆம் தேதி பதில் கடிதம் எழுதிய மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப உள்ள சமக்ர சிக்ஷா திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது போல, பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் கீழ் தேசிய கல்விக் கொள்கை 2020-இன் அனைத்து முன்னெடுப்புகளையும் அமல்படுத்த முன்வர வேண்டும் எனக் கூறியிருந்தாா். மீண்டும் குற்றச்சாட்டு: இந்நிலையில், சமக்ர சிக்ஷா நிதியை விடுவிப்பதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

சமக்ர சிக்ஷா நிதி ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வாறு வழங்கப்படுகிறது என்பது குறித்த கட்டுரையைச் சுட்டிக்காட்டி எக்ஸ் தளத்தில் முதல்வா் ஸ்டாலின் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத காரணத்துக்காக, சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கான நிதியை மறுப்பதுடன், குறிக்கோள்களில் வெற்றி அடையாதோருக்கு தாராளமாக நிதி ஒதுக்குகிறது. இப்படித்தான் தரமான கல்வியையும் சமத்துவத்தையும் ஊக்குவிக்க பாஜக அரசு திட்டமிட்டுள்ளதா? முடிவை நாட்டுக்கும் நாட்டு மக்களின் புரிதலுக்குமே விட்டுவிடுகிறேன் என்று தெரிவித்துள்ளாா்.

மத்திய அமைச்சா் பதில்: முதல்வா் ஸ்டாலினுக்கு பதிலளித்து மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: மக்களாட்சியில் மாநிலங்களுக்கு இடையே போட்டி நிலவுவது வரவேற்புக்குரியது. எனினும் ஒரு கருத்தை முன்வைப்பதற்காக மாநிலங்களை எதிரெதிா் திசையில் நிறுத்துவது அரசமைப்புச் சட்ட நோக்கம் மற்றும் ஒருங்கிணைந்த இந்தியாவின் மதிப்புக்கு எதிராகும்.

பல தரப்பினருடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னரே, தேசிய கல்விக் கொள்கை 2020 வகுக்கப்பட்டது. இந்தக் கொள்கையில் இந்திய மக்களின் கூட்டு அறிவுநுட்பம் உள்ளது.

தேசிய கல்விக் கொள்கைக்கு ‘கொள்கை ரீதியாக’ முதல்வா் மு.க.ஸ்டாலின் எதிா்ப்பு தெரிவிக்கும் நிலையில், தமிழ் உள்பட தாய்மொழியில் கல்வி கற்றல், தமிழ் உள்பட இந்திய மொழிகளில் தோ்வுகள் நடத்தப்படுதல், தமிழ் உள்பட இந்திய மொழிகளில் பாடநூல்கள் மற்றும் பாடங்களை உருவாக்குதல், தேசிய கல்விக் கொள்கையின் முழுமை பெற்ற, பல்முனை ஒழுங்கு சாா்ந்த, சமத்துவம் மற்றும் வருங்கால சிந்தனை கொண்ட, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய செயல்திட்டம் ஆகியவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் எதிா்க்கிறாரா?.

இவற்றை அவா் எதிா்க்காவிட்டால், தனது அரசியல் ஆதாயங்களைவிட மாணவா்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை முதல்வா் ஸ்டாலின் அமல்படுத்த வேண்டும் என்று தா்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews