பொறியியல் மாணவர் சேர்க்கை: சான்றிதழ் பதிவேற்ற புதன்கிழமை கடைசி நாள் Engineering Admission: Wednesday is the last day to upload certificates
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்கள் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் புதன்கிழமை உடன் முடிவடைகிறது. தகுதியுள்ள விண்ணப்பங்களுக்கு நாளையே ஆன்லைனில் ரேண்டம் எண் ஒதுக்கப்படும்.
பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 6-ம் தேதி தொடங்கி ஜுன் 6-ம் தேதி முடிவடைந்தது. பொறியியல் படிப்புக்கு 2 லட்சத்து 48 ஆயிரத்து 848 மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் பதிவுசெய்திருந்த நிலையில், அவர்களில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 439 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியிருந்தனர். அதில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 145 பேர் மட்டுமே தேவையான சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்திருந்தனர். விண்ணப்ப பதிவு 6-ம் தேதி முடிவடைந்துவிட்டாலும் ஆன்லைனில் விண்ணப்பித்து கட்டணத்தை செலுத்தியவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய ஜுன் 12-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கான கடைசி நாள் நாளையுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது.
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவுசெய்து அதற்கான கட்டணத்தை செலுத்தியிருந்தாலும் தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தால் மட்டுமே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். இதைத்தொடர்ந்து பொறியியல் படிப்புக்கு முழுமையாக விண்ணப்பித்த மாணவர்களுக்கு 12-ம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கப்படும். அதைத் தொடர்ந்து, ஜுன் 13 முதல் 30-ம் தேதி சேவை மையங்கள் வாயிலாக சான்றிதழ்கள் ஆன்லைனிலேயே சரிபார்க்கப்பட்டு ஜூலை 10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். தரவரிசை பட்டியலில் ஏதேனும் குறை இருப்பின் அதை ஜூலை 11 முதல் 20-ம் தேதிக்குள் நிவர்த்தி செய்து கொள்ளலாம். அதன்பிறகு கலந்தாய்வு தொடங்கும். கலந்தாய்வு தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.கடந்த ஆண்டு கலந்தாய்வுக்கு 2 லட்சம் இடங்கள் கிடைக்கப்பெற்றன. ஆனால், இந்த ஆண்டு எத்தனை கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கேற்கும்? அக்கல்லூரிகளிலிருந்து எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் புருஷோத்தமனிடம் கேட்டபோது, “பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 10-ம் தேதி அன்று வெளியிடப்பட இருக்கிறது. தரவரிசை பட்டியல் வெளியிடுவதற்கு முன்பாக கல்லூரிகள் மற்றும் இடங்களின் பட்டியலை வழங்குமாறு அண்ணா பல்கலைக்கழகத்திடம் கேட்டுள்ளோம். தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஏற்கெனவே உள்ள படிப்புகளுக்கான இடங்கள் அதிகரிக்கலாம். அதுபோல், புதிய பாடப்பிரிவுகள் மூலமாக கூடுதல் இடங்கள் வரலாம்,” என்றார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.