ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள, IFHRMSல் மாதந்தோறும் தானாகவே வருமானவரிப் பிடித்தம் செய்யும் நடைமுறையை உடனடியாகக் கைவிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 24, 2024

Comments:0

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள, IFHRMSல் மாதந்தோறும் தானாகவே வருமானவரிப் பிடித்தம் செய்யும் நடைமுறையை உடனடியாகக் கைவிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள, IFHRMSல் மாதந்தோறும் தானாகவே வருமானவரிப் பிடித்தம் செய்யும் நடைமுறையை உடனடியாகக் கைவிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை.

வருமான வரிப் பிடித்தம் / 2024 2025 நிதியாண்டின் ஏப்ரல் மாதம் முதல் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை மென்பொருள் (IFHRMS) மூலமாக அரசு ஊழியர்களின் ஊதியத்தில் மாதந்தோறும் பிடித்தம் செய்தல் - இந்நடைமுறையில் ஏற்பட்டுள்ள பெரும் குளறுபடிகள் மற்றும் தவறுகளால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் - பழைய நடைமுறைப்படி வருமானவரிப் பிடித்தம் செய்திட வேண்டுதல் சார்பாக. தமிழ்நாட்டில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தற்போது ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை மென்பொருள் (IFHRMS) மூலமாக அவர்களது சம்பளம் வழங்கும் அலுவலர்களால் (Pay Drawing Officers)ஊதியப் பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2023-2024 ஆம் நிதியாண்டு வரை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மாதந்தோறும் தங்களது ஊதியத்தில் அவரவர் பெறும் ஊதியத்தைக் கணக்கிட்டு அவர்களது விருப்பப்படி குறிப்பிட்ட தொகையை வருமான வரியாக மாத ஊதியத்திலேயே IFHRMS வழியாகவே பிடித்தம் செய்து வந்தார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் வருமானவரி கணக்கிடும்போது துல்லியமாக வருமானத்தைக் கணக்கிட்டு, அதற்குரிய வருமான வரியையும் கணக்கிட்டு ஏற்கனவே மாதந்தோறும் ஊதியத்தில் வருமான வரியாகச் செலுத்திய தொகை போக மீதி செலுத்த வேண்டிய தொகையை பிப்ரவரி மாத ஊதியத்தில் பிடித்தம் செய்து வந்தனர்.

மேற்கண்ட நடைமுறையில் எவ்விதச் சிக்கலும் ஏற்படவில்லை. ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் மிகச்சரியாக தங்களது வருமான வரியைச் செலுத்தி வந்தனர். ஆனால் இந்த நிதியாண்டின் (2024-2025) ஏப்ரல் மாதம் முதல் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் செலுத்த வேண்டிய வருமான வரியை அவர்கள் பெறும் மாத ஊதியத்தைக் கணக்கிட்டு, அதன் மூலம் மொத்த ஆண்டு வருமானத்தைக் கணக்கிட்டு, அதனடிப்படையில் வருமான வரியைக் கணக்கிட்டு, அத்தொகையை 11ஆல் வகுத்து மாத ஊதியத்தில் IFHRMS மூலம் தானாகவே பிடித்தம் செய்யும் நடைமுறையை தமிழ்நாடு அரசின் நிதித்துறை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த நடைமுறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் மற்றும் தவறான வருமான வரிக் கணக்கீடுகளால் தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும், அச்சமும், பெரும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது என்பதைத் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறது. ஏற்கனவே IFHRMS மென்பொருள் மூலமாகவே மாதந்தோறும் தங்கள் ஊதியத்திலிருந்து வருமான வரியை மிகச்சரியாக ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் செலுத்தி வந்த நிலையில், அதில் எவ்விதப் பிரச்சினையும் ஏற்படாத சூழலில், அந்த நடைமுறை தொடர்வது என்பதுதான் சரியாக இருக்கும் என்பதையும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களைப் பாதிக்கக்கூடிய குழப்பமான தவறான புதிய நடைமுறையை உடனடியாகக் கைவிட வேண்டுமெனவும் எங்களது மாநில அமைப்பு தங்களைக் கனிவுடன் கேட்டுக்கொள்கிறது.

IFHRMS மென்பொருள் மூலம் தாமாகவே வருமான வரிப் பிடித்தம் செய்வதில் தற்போது ஏற்பட்டுள்ள இடர்பாடுகள்:

1. வருமான வரிப் பிடித்தம் செய்திட பழைய முறையைத் (Old Regime) தேர்வு செய்தவர்களுக்கும் புதிய முறையிலேயே (New Regime) வருமானவரி கணக்கிடப்பட்டு வருமானவரி பிடித்தம் செய்யப்பட உள்ளது. இவ்வாறான நடைமுறை என்பது ஒன்றிய அரசு வருமானவரி செலுத்துவதற்கு வழங்கியுள்ள விருப்பத்தேர்வு வாய்ப்பை (Old Regime or New Regime) மறுதலிப்பதாக உள்ளது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களின் சேமிப்பு உள்ளிட்ட முதலீடுகள் மற்றும் வீட்டுக்கடன் அசல், வட்டி உள்ளிட்டவற்றுக்கான வரிச்சலுகைகளைப் பெற இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது வருமான வரித்துறையின் உத்தரவுக்கு எதிரானதாகும்.

2. இந்த நடைமுறையில், வருமான வரி செலுத்தும் அளவிற்கு ஊதியம் பெறாத அல்லது குறைவான ஊதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களது மாத ஊதியத்திலும் வருமான வரிப் பிடித்தம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழல் குறைவான ஊதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் குடும்பங்களை மிகக் கடுமையாகப் பாதிக்கக் கூடியதாகும். 3. இந்த நடைமுறையில் சில ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு IFHRMS மென்பொருள் மூலமாக ஏப்ரல் மாத ஊதியப் பட்டியலை Generate செய்தபோது, அவர்களது மொத்த ஊதியத்திற்கும் 30 சதவீத வருமான வரி கணக்கிடப்பட்டு ஊதியத்தில் பெரும் பகுதியை வருமான வரியாகப் பிடித்தம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

4. இந்த நடைமுறையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடம் அவர்கள் செலுத்த வேண்டிய வருமான வரியை விட மிகக் கூடுதலான வருமானவரியை மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யும் நிலை உள்ளது. கூடுதலாகச் செலுத்திய வருமான வரியை வருமானவரித்துறையிடமிருந்து மீளப் பெறுவதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏராளம் உள்ளன.

5. இந்த நடைமுறையில் வருமான வரித்துறை அறிவித்துள்ள பழைய நடைமுறையில் (Old Regime) வருமானவரி கணக்கிடுவதற்குரிய ஏற்பாடுகள் இதுவரை செய்யப்படாதது ஊழியர்களுக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

6. IFHRMS மென்பொருள் வழியாக மாதஊதியத்தில் தானாகவே வருமானவரி பிடித்தம் செய்யும் நடைமுறையில் போதுமான, துல்லியமான வசதிகள் ஏற்படுத்தப்படாததால் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. எப்போதுமே வருமானவரியை மிகச்சரியாக, துல்லியமாகச் செலுத்துபவர்கள் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் என்பது முற்றிலும் உண்மையானது. அவ்வாறு சரியாக வருமானவரி செலுத்தி வந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கும் இந்தப் புதிய நடைமுறையை தமிழ்நாடு அரசின் நிதித்துறை உடனடியாக கைவிட்டு, பழைய நடைமுறை தொடர உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தங்களை கனிவுடன் கேட்டுக்கொள்கிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews