தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அரசுப்பள்ளிகளில் ஆன்லைனிலும் மாணவர் சேர்க்கை: அனைத்து கலெக்டர்களும் களம் இறங்குகின்றனர், பள்ளி கல்வித்துறை தீவிர நடவடிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 04, 2024

Comments:0

தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அரசுப்பள்ளிகளில் ஆன்லைனிலும் மாணவர் சேர்க்கை: அனைத்து கலெக்டர்களும் களம் இறங்குகின்றனர், பள்ளி கல்வித்துறை தீவிர நடவடிக்கை



தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அரசுப்பள்ளிகளில் ஆன்லைனிலும் மாணவர் சேர்க்கை: அனைத்து கலெக்டர்களும் களம் இறங்குகின்றனர், பள்ளி கல்வித்துறை தீவிர நடவடிக்கை Online admissions in govt schools surpassing private schools: All collectors pitch in, school education department steps up

அரசுப் பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 1ம் தேதி தொடங்கியது. இதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறைக்கு சிறப்பு கவனம் செலுத்தி, அடிக்கடி ஆய்வு செய்து வருகிறார். இதனால், கல்வித்துறைக்கு ஏராளமான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்துவதோடு, அடிப்படை கட்டமைப்புகளையும் உருவாக்க உத்தரவிட்டுள்ளார். தற்போது அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு போட்டி போடும் அளவுக்கு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. பாடத்திட்டங்களும், செயல்முறைகளும் தனியாரை மிஞ்சும் அளவுக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, கோடை விடுமுறைக்கு முன்னரே பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து உள்ளது.

இந்த முறை ஆன்லைன் மூலமும் பள்ளி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்தியாவில் அதிக அரசு பள்ளிகள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. மாநிலம் முழுவதும் 38,000 அரசு பள்ளிகளும், 8,000 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன. இதில் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனி நிர்வாகத்தை கொண்டு இருந்தாலும், பள்ளியின் பாடத்திட்டம் தொடங்கி தேர்வுகள், விடுமுறை விதிகள் எல்லாம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 45 லட்சம் மாணவ மாணவியர் படிக்கின்றனர். இந்த கல்வியாண்டில் 10-15 லட்சம் பேர் வரை அரசு பள்ளிகளில் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வரும் நாட்களில் ஆன்லைன் வழி மற்றும் நேரடி வழி சேர்க்கை முறை மூலம் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. இதனால் 1 நேரடியாக சேர்க்கை நடைபெறும் போது ஏற்படும் முறைகேடுகள் ஆன்லைனில் தவிர்க்கப்படும்.

2 மாணவ மாணவியரின் சேர்க்கையை போலியாக அதிகரித்து காட்ட முடியாது.

3 மாணவர்கள் எந்த பள்ளியில் அதிகம் சேருகிறார்கள், எங்கே பள்ளிகளில் தேவை அதிகம் உள்ளது என்பதை எளிதாக டிராக் செய்ய முடியும்.

4 போலி விண்ணப்பங்கள் பதிவு செய்வதை தவிர்க்க முடியும்.

இதற்காக இந்த வருடம் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். நேரில் வரும் குடும்பங்களுக்கு, பள்ளியிலேயே ஆசிரியர்கள் மூலம் ஆன்லைன் அட்மிஷன் செய்யப்படும். ஆதார் எண், ரத்தப்பிரிவு, பெற்றோரின் மொபைல் எண் ஆகியவை மூலம் ஆன்லைன் சேர்க்கை செய்யப்படும். அதோடு இவர்களின் சமூகப்பிரிவுகள் தொடங்கி இடஒதுக்கீடு வரை அனைத்தையும் பள்ளி கல்வித்துறை எளிதாக கண்காணிக்க இது வசதியாக மாறும்.

இந்நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் குமரகுருபரன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: வரும் கல்வியாண்டில் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் திறன் வகுப்பறைகள், அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் அதற்கு தேவையான இணையதள வசதியுடன் அமைக்கப்பட உள்ளது. மேலும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினியும் வழங்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டில் பெரும்பான்மையான அரசு பள்ளிகள் ஊரகப் பகுதிகளில்தான் அமைந்துள்ளது. ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில் 3 முதல் 5 வயதுடைய குழந்தைகள் பள்ளி முன்பருவக் கல்வியை கற்று வருகின்றனர். இங்கு கல்வியை நிறைவுசெய்து வெளியே வரும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை முழுமையாக அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1ம் வகுப்பில் சேர்க்கை செய்வதற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் மாவட்ட திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகளை ஒருங்கிணைந்து செயல்பட உரிய அறிவுரைகள் வழங்கிட வேண்டும்.

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், சுய ஆர்வலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இருபால் ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்கி இந்த முன்னெடுப்பு சிறந்த முறையில் நடைபெற ஒத்துழைப்பினை நல்குவதோடு மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெறும் நிகழ்வினை தங்களுடைய கள ஆய்வுப் பணிகளின் ஒரு நிகழ்ச்சி நிரலாக பட்டியலிட்டு கொள்ளவும் கேட்டுக்கொள்கிறேன்.

2024-25ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து அரசு பள

2024-25ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை விகிதம் கணிசமான அளவில் உயர்ந்திட வேண்டும். மாணவர் சேர்க்கை பணி மற்றும் விழிப்புணர்வு சேர்க்கை பேரணி தங்கள் மாவட்டத்தில் சிறப்பாக நடத்தி அனைத்து பள்ளி வயது குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்க்கை செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். * அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்திட வேண்டும் என்ற நோக்கில் பள்ளிக்கல்வித் துறை தீவிர களப்பணி ஆற்றி வருகிறது. ஒரு மாதத்துக்கு முன்னதாகவே அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையையும் தொடங்கிவிட்டது. இந்நிலையில் தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

ஊரகப் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 3 முதல் 5 வயதுடைய குழந்தைகள் பள்ளி முன்பருவக் கல்வியை கற்று வருகின்றனர். அந்த வகையில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 548 குழந்தைகள் நிறைவு செய்து வெளியே வர இருக்கின்றனர். இதில் அதிகபட்சமாக சேலத்தில் 19 ஆயிரத்து 242 குழந்தைகளும், அடுத்து மதுரையில் 18 ஆயிரத்து 127 குழந்தைகளும் உள்ளனர். மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையின்படி, முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் மாவட்ட திட்ட அலுவலருடன் ஒன்றிணைந்து செயல்பட்டு அங்கன்வாடி மையங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகளில் ஒருவர்கூட விடுபடாமல் அனைவரையும் அரசு பள்ளிகளில் சேர்க்கை செய்திட வேண்டும்.

மேலும் வேறு பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு வரும் குழந்தைகள், மாணவர்களுக்கு அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் இடங்கள் வழங்க வேண்டும். இந்த மாணவர் சேர்க்கை விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை முறைமை (எமிஸ்) இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews