பிளஸ் 2 வினாத்தாள் விவகாரம் மாவட்ட கல்வி அதிகாரி 'சஸ்பெண்ட்'District Education Officer 'suspend' Plus 2 question paper issue
பிளஸ் 2 வினாத்தாள் விவகாரம் மாவட்ட கல்வி அதிகாரி சஸ்பெண்ட்
பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று துவங்கிய நிலையில், வினாத்தாள்களை உரிய நேரத்தில் பெறாமல் அலட்சியமாக செயல்பட்ட, மாவட்ட கல்வி அதிகாரி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
மாநிலம் முழுதும், 7.73 லட்சம் மாணவ, மாணவியர் எழுதும் பிளஸ் 2 தேர்வு, 3,302 மையங்களில் நேற்று துவங்கியது.
எந்த குளறுபடியுமின்றி பணிகளை மேற்கொள்ள, 39 உயர் அதிகாரிகள் இடம் பெற்ற உயர்மட்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு அதிகாரிகள், தங்களுக்கான மாவட்டங்களில், சி.இ.ஓ., - டி.இ.ஓ., ஆகியோரை ஒருங்கிணைத்து, தேர்வு பணிகளை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், பிளஸ் 2 பொது தேர்வுக்கான வினாத்தாள் கட்டுகள், அரசு தேர்வுத் துறையில் இருந்து, மாவட்ட கட்டுப்பாட்டு மையங்களுக்கு, சில நாட்களுக்கு முன் வாகனங்களில் அனுப்பப்பட்டன. மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகள் பெற்று, உரிய மையங்களில் போலீஸ் பாதுகாப்பில் வைக்க வேண்டும்.
இந்நிலையில், வேலுார் மாவட்டத்தில் ஒரு கட்டுப் பாட்டு மையத்திற்கு, வினாத்தாள் கட்டுகள் வந்தபோது, உரிய அங்கீகார கடிதம் மற்றும் அடையாள அட்டையை காட்டி, அதை பெறுவதற்காக நியமிக்கப்பட்ட, மாவட்ட கல்வி அதிகாரியான டி.இ.ஓ., நேசப்பிரபா வரவில்லை.
வினாத்தாள் வாகன பொறுப்பு அலுவலர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பு அதிகாரிகள், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் பதிலளிக்கவில்லை. இதனால், 2.30 மணி நேரமாக வினாத்தாள் கட்டுகளுடன், வாகனம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர், முதன்மை கல்வி அதிகாரி மணிமொழி, வினாத்தாள் கட்டுகளை பெற்று, மையத்தில் வைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா, வேலுார் மாவட்ட பொறுப்பு அதிகாரி இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் விசாரணை நடத்தி, பள்ளி கல்வித்துறை செயலர் குமரகுருபரன் மற்றும் இயக்குனர் அறிவொளிக்கு அறிக்கை அளித்தனர்.
இதையடுத்து, ரகசியம் காக்க வேண்டிய பணியில், மிகவும் அலட்சியமாக செயல்பட்ட டி.இ.ஓ., நேசப்பிரபாவை 'சஸ்பெண்ட்' செய்து, பள்ளிக் கல்வி இயக்குனர் அறிவொளி நேற்று உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.