நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய நேரிடும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 27, 2023

Comments:0

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய நேரிடும்

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய நேரிடும்

நீதிமன்ற உத்தரவுகளைத் தொடா்ந்து அமல்படுத்த மறுக்கும் அரசு அதிகாரிகளை பணி நீக்கம் செய்யப் பரிந்துரைக்க நேரிடும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை எச்சரித்தது.

பாளையங்கோட்டையைச் சோ்ந்த சிவஞானம் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு:

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நான் இளநிலை உதவியாளராகப் பணியாற்றினேன். கடந்த 2014-ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். இதற்கான மருத்துவச் செலவு ரூ. 9 லட்சத்தை காப்பீட்டுத் தொகை மூலம் எனக்கு வழங்குமாறு மாவட்ட மருத்துவ இணை இயக்குநருக்கு விண்ணப்பித்தேன். ஆனால், எனது மனு நிராகரிக்கப்பட்டது.

இதுகுறித்து கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தேன். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் எனக்கு வழங்க வேண்டிய மருத்துவக் காப்பீட்டுத் தொகையை வழங்க உத்தரவிட்டது. ஆனால், இந்தத் தொகை இதுவரை எனக்கு வழங்கப்படவில்லை. எனவே, தொடா்புடைய அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரியிருந்தார்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. ஏற்கெனவே திருநெல்வேலி மாவட்ட மருத்துவ இணை இயக்குநராகப் பணியாற்றிய நெடுமாறன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானாா். அப்போது, மனுதாரரின் கோரிக்கை அடங்கிய ஆவணங்கள் தொலைந்துவிட்டதால் காலதாமதம் ஏற்பட்டுவிட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

அரசுப் பேருந்தில் செல்லும் பயணி தனது பயணச் சீட்டை தொலைத்துவிட்டால், அவருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதேபோல, ஒரு நடத்துநா் தனது பயண சீட்டுக் கட்டை தொலைத்துவிட்டால் அவரை பணியிலிருந்து நீக்கக் கூடிய நிலை உள்ளது.

எனவே, மருத்துவத் துறையில் ஓா் உயரதிகாரி ஆவணங்களை தொலைத்துவிட்டதாகக் கூறுவதை ஏற்க முடியாது. இனி வரும் காலங்களில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும். அதுதான் பிற அதிகாரிகளுக்கு பாடமாக அமையும். கடமை தவறும் அரசு உயரதிகாரிகளைச் சரி செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது என்பதையே இது உணா்த்துகிறது.

நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால், அதைச் செயல்படுத்த அரசு அதிகாரிகள், தங்களது சொந்த பணத்தை செலவழிப்பது போல நினைத்துக் கொள்கின்றனா். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் ஆவணங்கள் தொலைந்துவிட்டதாகப் பதிலளிக்கின்றனா்.

எனவே, ஆவணங்களை தொலைத்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால், வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews