பள்ளிகளில் நிரந்தர சுகாதாரப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.
தமிழகத்தில் பள்ளிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதற்காக நிரந்தரப் பணியாளர்கள் நியமனம் செய்யப்படாமல் உள்ளனர். அதே நேரத்தில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதற்காக மிக மிக சொற்ப ஊதியத்தில் முற்றிலும் தற்காலிக பணியாளர்கள் ஏற்பாடு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நியமனம் செய்யப்படும் பணியாளர்களின் ஊதியம் மற்றும் சுகாதாரப் பணிகளுக்கு தேவையான மருந்து உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு என அனைத்திற்கும் சேர்த்து தொடக்கப்பள்ளிகளுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ 1300, நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ 2000 என நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதியும் முறையாக வழங்கப்படுவதில்லை. கிட்டத்தட்ட பள்ளிகளில் 10 மாதங்களுக்கு மேலாக இந்த நிதி வழங்கப்படாமல் உள்ளது. அதனை ஈடு செய்யும் வகையில் ஆசிரியர்கள் தங்களது சொந்த நிதியிலிருந்தே சுகாதாரப் பணிகளை மேற்கொள்கின்றனர். 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்ற பள்ளிகளில் அரசால் வழங்கப்படும் இந்த குறைந்த தொகையை வைத்து எப்படி சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். ஊதியம் மிக மிக குறைவாக உள்ளது என்பதாலும், முற்றிலும் தற்காலிக பணியாளர்கள் என்பதாலும், நியமனம் செய்யப்பட்ட பணியாளர்களிடம் முழுமையாக பணிகளை பெற முடியவில்லை.
இதனால் பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்களே கழிவறை சுத்தம் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். சமுதாய நலன் கருதி மாணவர்களின் சுகாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் ஆசிரியர்களே இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் ஒரு சில இடங்களில் குறைபாடுகள் ஏற்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் மாண்புமிகு பொது கணக்குக் குழு தலைவர் மற்றும் மாண்புமிகு உறுப்பினர்களின் ஆய்வின்போது கழிவறை சுகாதார குறைபாடு கண்டறியப்பட்டு தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி சாருஸ்ரீ அவர்களும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் பூண்டி கலைவாணன் அவர்களும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு புகழேந்தி அவர்களும் தலையிட்டு நிலைமையை சரி செய்த அடிப்படையில், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. இதற்காக மூன்று பேருக்கும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். பள்ளிகளின் கழிவறைகள் தூய்மை செய்ய பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டியது அரசினுடைய கடமையாகும். ஆனால் அதிகாரிகள் ஆய்வு செய்கின்றபோது கழிவறை சுகாதாரப் பணிகளில் குறைபாடுகள் தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்ற நிலைகளை மேற்கொள்கின்றனர். பள்ளிகளில் கற்பித்தல் பணிக்காக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களை கழிவறை சுத்தம் செய்யும் பணிகளிலும் ஈடுபடுத்த வைப்பது எந்த விதத்தில் நியாயம்? இனிமேலாவது இந்த தவறுகள் ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் கழிவறை உள்ளிட்ட தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்கு உரிய ஊதியத்தில் பிரத்தியேகப் பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும்.
அது போன்று பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவதற்கு காலதாமதம் ஏற்படும் நிலையில் பள்ளிகளின் சுகாதாரப் பணிகளுக்கு ஊராட்சிகளில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்களை மாற்றுப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். இதுவரை பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய சுகாதாரப் பணிகளுக்கான நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும். எதிர்வரும் காலங்களில் கண்டறியப்படும் குறைபாடுகளுக்கு கிடைத்தவர்கள் மீது நடவடிக்கை என்ற நிலையை மாற்றி, உரிய தீர்வை ஏற்படுத்த முயல வேண்டும். மேலும் பள்ளிகளில் மாலை நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் தேவையற்ற நபர்கள் உள்ளே நுழைந்து மது அருந்துதல் உள்ளிட்ட தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனையும் ஆசிரியர்களே சுத்தம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளிலும் காவல்துறை மற்றும் அரசு நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.
அன்புடன்...
ந.ரெங்கராஜன், பொதுச்செயலாளர், TESTF, இணைப் பொதுச்செயலாளர், AIPTF.
பொதுச்செயலாளர், WTTC
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.