எண்ணும் எழுத்தும் திட்டம் - மூன்றாம் நபர் ஆய்வை முற்றிலும் கைவிட வலியுறுத்தல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 28, 2023

Comments:0

எண்ணும் எழுத்தும் திட்டம் - மூன்றாம் நபர் ஆய்வை முற்றிலும் கைவிட வலியுறுத்தல்!



மூன்றாம் நபர் ஆய்வை முற்றிலும் கைவிட வேண்டும். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பேரியக்க பொதுச் செயலாளர் திரு ந. ரெங்கராஜன் வலியுறுத்தல்:

பள்ளிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எண்ணும் எழுத்தும் திட்டத்தை ஆய்வு செய்ய ஆசிரியர் பயிற்சி மாணவர்களை கொண்டு மூன்றாம் நபர் ஆய்வு குழு அமைக்கப்பட உள்ளது.

இக்குழுவிற்கு மூன்று நாள் பயிற்சி அளித்து அவர்கள் மூலம் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்வது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வித்திறனை மிகப்பெரிய அளவிற்கு பின்னுக்கு தள்ளிக்கொண்டு இருக்கும் இத்திட்டம் கைவிடப்பட வேண்டும் என தொடர்ந்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி வருகிறது.

ஆனால் அதைப் பற்றி கவலை கொள்ளாமல் திட்டத்தை விளம்பரப்படுத்தி, அதன் மூலம் வெற்றி பெற்றதாக காட்டுவதிலேயே கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டிய திட்டத்தை, மேலும் மேலும் திணிக்கும் வகையில் ஆய்வுக் குழு அமைத்து கண்காணிப்பது என்பது வெற்று வேலைக்கு மேஸ்திரி அமைப்பது போல் உள்ளது.

கற்றறிந்த, அனுபவமிக்க ஆசிரியர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு மறுபரிசீலனை செய்ய வேண்டிய கல்வித்துறை அதைப்பற்றி கவலைப்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

மேலும், மிக சிறந்த திட்டம் எனக் கல்வி துறையால் தனக்குத்தானே பெருமைப்பட்டுக் கொள்ளும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை, ஆய்வு செய்ய பயிற்சி மாணவர்களை நியமிப்பதன் மூலம் அரசு இத்திட்டத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை தெளிவாகத் தெரிகிறது.

உண்மையிலேயே இத்திட்டத்தை சிறப்பானது என அரசு கருதுமேயானால், அனுபவம் மிகுந்த கல்வி நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்திருக்கும்.

விளம்பரத்திற்காக பயன்படுத்தப்படும் இத்திட்டம் என்பதாலேயே பயிற்சி மாணவர்களைக் கொண்டு ஆய்வு செய்கிறது.

இது இத்திட்டத்தின் மீது தவறான புரிதலை ஏற்படுத்தும் என்பதோடு, அனுபவம் மிகுந்த ஆசிரியர்களை, பயிற்சி மாணவர்களைக் கொண்டு ஆய்வு செய்து அவர்களது மதிப்பை குறைத்து காட்டும் நோக்கமாகவே தெரிகிறது. மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகளின் இந்த முயற்சி ஆசிரியர்களை ஒருபோதும் பாதிக்காது. அதே நேரத்தில் ஆசிரியர்களுடைய அதிருப்தி வேறு விதமாய் திரும்பும் என்பது மட்டும் நிச்சயம். மாணவர்களின் கல்வி நலன் மீது மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், தேவையற்ற பயிற்சிகள் அளிப்பதை தவிர்த்து, ஆசிரியர்களை கல்வி பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.

இது போன்ற கேலிக்கூத்தான ஆய்வு குழுக்களை நியமிப்பதையும் நிறுத்த வேண்டும்.

இதன் பிறகாவது உண்மையை உணர்ந்து ஆசிரியப் பயிற்சி மாணவர்களை கொண்டு ஆய்வு செய்வது என்ற திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம். மூன்றாம் நபர் ஆய்வு என்ற மூன்றாம் தர நடவடிக்கைகள் தொடருமேயானால் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றும் ஆசிரியர் நலனில் ந.ரெங்கராஜன், பொதுச்செயலாளர், TESTF. இணை பொதுச்செயலாளர், AIPTF. பொதுச்செயலாளர், WTTC.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews