மருத்துவ கல்லூரிகளில் பாலியல் குற்றங்கள்: 'ஆறுதல்' மட்டும் கூறி அமுக்கப்படும் கொடுமை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 09, 2023

Comments:0

மருத்துவ கல்லூரிகளில் பாலியல் குற்றங்கள்: 'ஆறுதல்' மட்டும் கூறி அமுக்கப்படும் கொடுமை

மருத்துவ கல்லூரிகளில் பாலியல் குற்றங்கள்: 'ஆறுதல்' மட்டும் கூறி அமுக்கப்படும் கொடுமை

தமிழக மருத்துவக் கல்லுாரிகளில் தேசிய மருத்துவ ஆணைய அறிவுறுத்தல்படி, 'விசாகா' கமிட்டி செயல்படாததால், பாலியல் புகார்கள் விசாரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்களை தடுக்கும் சட்ட விதிகளின்படி, அனைத்து இடங்களிலும் குறைதீர்ப்பு மற்றும் புகார் குழுக்களை அமைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துமீறல்:

தொடர்ந்து, நாடு முழுதும் அனைத்து மருத்துவ கல்வி நிறுவனங்களும், பாலியல் புகார்களை விசாரிக்க, விசாகா குழுக்களை அமைக்க வேண்டும் என, தேசிய மருத்துவ ஆணையமும் அறிவுறுத்தியது. ஆனால், தமிழகத்தில் இக்குழுக்கள் முறையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துஉள்ளது.தமிழகத்தில் மருத்துவக் கல்லுாரிகளில் ஒருசில பேராசிரியர்கள், பாலுணர்வை துாண்டும் வகையில் மாணவியரிடம் பேசுவது, சீண்டுவது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவியர் புகார் அளித்தாலும், அவை பேராசிரியர் மட்டத்திலேயே விசாரிக்கப்பட்டு, மாணவிக்கு ஆறுதல் மட்டும் கூறப்படுவதாக சொல்லப்படுகிறது. இதனால், தவறு செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல், எச்சரித்து மட்டுமே விடப்படுகின்றனர்.

'விசாகா' கமிட்டிசமீபத்தில் இதுபோன்று ஒரு கல்லுாரியில், மாணவி ஒருவர் அளித்த புகார் தொடர்பாக, பேராசிரியர் மட்டத்திலேயே விசாரிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லுாரிகளில், விசாகா கமிட்டி முறையாக செயல்படாதது குறித்து, தொடர் புகார்கள் வந்ததை தொடர்ந்து, தேசிய மருத்துவ ஆணையம், பாலியல் புகார்களை விசாரிக்கும் குழுக்களில் இடம் பெற்றவர்களின் எண்கள், மின்னஞ்சல் முகவரிகளை அனைவருக்கும் தெரியப்படுத்தி, அதன் வாயிலாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மருத்துவ கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தது.

கோரிக்கை

ஆனால், அதை தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகள் பின்பற்றாமல், தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு, விசாகா கமிட்டியில் இடம் பெற்றவர்களின் மொபைல் எண்கள், மின்னஞ்சல் முகவரிகளை, 'அறிவிப்பு பலகை'யில் ஒட்டப்படுவதுடன், அவை தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மருத்துவ மாணவியர் கோரிக்கை வைத்துஉள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews