மகளிருக்கு ரூ.1,000 கொடுக்க வீடு வீடாக செல்லும் ஆசிரியர்கள்.
இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு அமர்த்தப்பட்ட தன்னார்வலர்கள் பலர், மகளிர் உரிமை தொகை திட்ட பணிகளுக்கு மாற்றப்படுவதால், 5ம் வகுப்பு வரை கற்பித்தல் பணி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
கொரோனா தொற்று பரவல் பிரச்னை ஏற்பட்டதால், அரசு பள்ளிகளில் கற்பித்தல் பணி பாதிக்கப்பட்டது.
அதனால், மாணவர்களுக்கான கற்றல் ஆர்வமும் குறைந்தது. இதை ஈடுகட்டும் வகையில், இல்லம் தேடி கல்வி திட்டத்தை, பள்ளிக்கல்வி துறை அறிமுகம் செய்தது.
ஆண்டுக்கு, 200 கோடி ரூபாய் ஒதுக்கி, தன்னார்வலர்களை நியமித்து, மாணவர்களுக்கு மாலை நேர டியூஷன் ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து, இயல்பு நிலை திரும்பி உள்ளதால், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில், கற்பித்தல் பணி மேற்கொள்ள பயன்படுத்தப்படுகின்றனர். குறிப்பாக, கிராமப்புறம் மற்றும் மலையடிவார பகுதிகளில் உள்ள, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்க பள்ளிகளில் பாடம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில், பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய் உதவி தொகை வழங்கும், மகளிர் நிதியுதவி தொகை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் சிறப்பு அதிகாரியாக, இல்லம் தேடி கல்வி திட்ட அதிகாரி இளம் பகவத் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் அறிவுறுத்தியதாக கூறி, இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்கள், மகளிர் உரிமை தொகை திட்ட பணிகளை மேற்கொள்ள, சில மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கு தன்னார்வலர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் தகுதி தேர்வு முடித்து, பி.எட்., படித்த தங்களை, கற்பித்தல் பணிகளில் மட்டுமே ஈடுபடுத்த வேண்டும் என்றும், வேறு திட்டங்களுக்கு மாற்றுவதால், தாங்கள் படித்த பட்டப்படிப்புக்கான அனுபவம் கிடைக்காமல், எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும், அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.