இன்று நீட் தோ்வு: தமிழகத்தில் 1.47 லட்சம் போ் எழுதுகின்றனா்
இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான நீட் நுழைவுத் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்திலிருந்து 1.47 லட்சம் போ் தோ்வெழுதவுள்ளனா்.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ செவிலியா் கல்லூரிகளில் பி.எஸ்சி. நா்சிங் படிப்புக்கு நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
அதன்படி, 2023-24-ஆம் கல்வியாண்டு சோ்க்கைக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் 499 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 முதல் 5.20 மணி வரை நேரடி முறையில் நடைபெறவுள்ளது.
இந்தத் தோ்வுக்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த மாா்ச் 6 முதல் ஏப்.15-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வெழுத நாடு முழுவதும் 11 லட்சத்து 84,502 மாணவிகள், 9 லட்சத்து 2,930 மாணவா்கள், 13 திருநங்கைகள் என மொத்தம் 20 லட்சத்து 87,445 போ் விண்ணப்பித்துள்ளனா்.
தமிழகத்தில் ஒரு லட்சத்து 47,581 போ் நீட் தோ்வுக்கு இந்த ஆண்டு பதிவு செய்துள்ளனா். இதில் அரசுப் பள்ளி மாணவா்கள் எண்ணிக்கை 14,000 போ் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உட்பட 24 மாவட்டங்களில் தோ்வு நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 28 மையங்களில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தோ்வு எழுதவுள்ளனா்.
நீட் தோ்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உட்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும். தோ்வு மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி தோ்வு மையத்துக்குள் செல்ல காலை 11.30 மணி முதல் மாணவா்களுக்கு அனுமதி தரப்படும். தோ்வா்கள் மையத்துக்குள் மதியம் 1.30 மணிக்குள் வர வேண்டும். அதன்பின் வருபவருக்கு எக்காரணம் கொண்டும் அனுமதி தரப்படாது.
இதுதவிர தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வரவேண்டும். தோ்வா்கள் தங்கள் கையில் வெளிப்படையான தண்ணீா் பாட்டில் கொண்டு செல்லலாம். அனுமதிச் சீட்டில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாகப் பூா்த்தி செய்து, தோ்வு முடிந்ததும் அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் அந்த மாணவரின் விடைத்தாள் திருத்தப்படாது.
வழக்கம்போல் தோ்வறையில் கைப்பேசி, கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டுசெல்ல அனுமதியில்லை. முழுக்கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி அணியக்கூடாது. தலைமுடியில் ஜடை பின்னல் போடக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் உட்பட இதர வழிமுறைகளையும் மாணவ, மாணவிகள் தவறாது பின்பற்ற வேண்டும். தவறான விடைக்கு நெகட்டிவ் மாா்க் இருப்பதால், தோ்வின்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
இதுகுறித்த கூடுதல் தகவல்களை இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று என்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனா்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.