3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் நிலைக்கு திமுக அரசின் அலட்சியமே முக்கிய காரணம்: இபிஎஸ், ஓபிஎஸ் குற்றச்சாட்டு DMK govt's negligence is main reason for de-accreditation of 3 medical colleges: EPS,OPS allegation
சென்னை: தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் நிலைக்கு திமுக அரசின் அலட்சியமே காரணம் என்று அதிமுகபொதுச் செயலாளர் பழனிசாமி,முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: சென்னை ஸ்டான்லி, திருச்சி மற்றும் தருமபுரி ஆகிய மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதற்கு திமுக அரசின் அலட்சியமே காரணம். இதற்காக அரசுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
பயோ-மெட்ரிக் வருகைப் பதிவேடு போன்ற சிறிய காரணங்களுக்காக, 3 மருத்துவக் கல்லூரிகளில் அதிக எண்ணிக்கையில் எம்பிபிஎஸ் இடங்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது வேதனைக்குரியது மட்டுமல்ல, தமிழகத்துக்கே தலைகுனிவு. எனவே, உடனடியாக மத்திய அரசைத் தொடர்பு கொண்டு, மீண்டும் 3 கல்லூரிகளுக்கும் அங்கீகாரம் பெற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:
தமிழ்நாட்டில் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அடிப்படையில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இதில் பெரும்பாலான மருத்துவக் கல்லூரிகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டவை. மருத்துவத்துக்கென தமிழ்நாடு டாக்டர்எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் என்ற தனிப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதும் அதிமுக ஆட்சியில்தான். இப்படி உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளை தக்கவைத்துக் கொள்ளக்கூட தகுதியற்ற அரசாக திமுகஅரசு திகழ்கிறது வேதனையளிக்கிறது.
சென்னை ஸ்டான்லி மற்றும் திருச்சி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாகவும், இதனால் வரும்கல்வியாண்டில் அந்தக் கல்லூரிகளில் 500 எம்பிபிஎஸ் இடங்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. திமுக அரசின் மெத்தனப் போக்குக்கு, அலட்சியமே இதற்கு காரணம். இதற்காக அரசுக்கு கடும்கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களின் நலனையும், மருத்துவம் பயிலும் மாணவ, மாணவிகளின் நலனையும் கருத்தில்கொண்டு, அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை நீக்கவும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் நடவடிக்கை எடுத்து, மருத்துவக் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.