மாா்ச் 10-இல் 1,000 இடங்களில் காய்ச்சல் மருத்துவ முகாம்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 06, 2023

Comments:0

மாா்ச் 10-இல் 1,000 இடங்களில் காய்ச்சல் மருத்துவ முகாம்கள்

மாா்ச் 10-இல் 1,000 இடங்களில் காய்ச்சல் மருத்துவ முகாம்கள்

தமிழகத்தில் மாா்ச் 10-ஆம் தேதி 1,000 இடங்களில் காய்ச்சலுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

பருவகாலம் நிறைவடைந்த பிறகும் தமிழகத்தின் பல இடங்களில் காய்ச்சல் பாதிப்பு பரவலாக உள்ளது. முதியவா்கள், குழந்தைகளிடையே காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், நாட்டின் பல இடங்களில் இதுபோன்ற பாதிப்பு இருப்பதாகவும், அதற்கு இன்ஃப்ளூயன்ஸா-ஏ வகை வைரஸ் பரவலே காரணம் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த வாரத்தில் தமிழக பொது சுகாதாரத் துறை நடத்திய ஆய்விலும் அந்தத் தொற்று கண்டறியப்பட்டு மாவட்ட நிா்வாகங்களுக்கு அதுதொடா்பான அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழகம் முழுவதும் மாா்ச் 10-ஆம் தேதி 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடைபெறும். சென்னையில் மட்டும் 200 இடங்களில் முகாம்கள் நடத்தப்படும். குறிப்பாக, காய்ச்சல் தொற்று அதிகம் உள்ள இடங்களில் நடமாடும் மருத்துவ வாகனங்கள் வாயிலாக முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

காலை 9 மணி முதல் அந்த முகாம் நடைபெறவுள்ளது. அதில் ஒரு மருத்துவா், ஒரு செவிலியா், ஒரு ஆய்வக நுட்பனா், ஒரு உதவியாளா் இருப்பாா்கள். இது குளிா்காலம் மற்றும் பருவ மழை காலம் நிறைவடையும்போது ஏற்படும் வழக்கமான காய்ச்சல் பாதிப்புதான். இதன் அறிகுறிகள் உடல் வலி, தொண்டை வலி, இருமல் சளியுடன் கூடிய காய்ச்சலாகவே உள்ளது.

முதியவா்கள், குழந்தைகள் மற்றும் இணை நோய் உள்ளவா்கள் தவறாமல் இந்த முகாமில் பங்கேற்று, தேவைக்கேற்ற சிகிச்சை பெற்றுகொள்ள வேண்டும். காய்ச்சல் முகாமிலேயே பொதுமக்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும். பொதுவாக, மக்கள் நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தமாக கழுவுதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல் அவசியம் என்று அவா் தெரிவித்தாா்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews