10, 11, 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுக்கான மையங்கள் அதிகரிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 27, 2023

Comments:0

10, 11, 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுக்கான மையங்கள் அதிகரிப்பு

IMG_20230227_162952
10, 11, 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுக்கான மையங்கள் அதிகரிப்பு

10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுக்காக கடந்த ஆண்டைக் காட்டிலும் 200 தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன.

நடப்பாண்டுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 20-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வை சுமார் 26 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இதற்கான இறுதிக்கட்டப் பணிகளை தேர்வுத் துறை தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், முந்தைய ஆண்டைவிட பொதுத்தேர்வு மையங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக தேர்வுத் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: பொதுத்தேர்வுக்கான இறுதிக்கட்டப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேர்வு மையங்கள் இறுதி செய்யப்பட்டு, கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. முதல்கட்டமாக 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் அடுத்த வாரம் தொடங்குகிறது. பின்னர், மார்ச் 13-ம் தேதி பொதுத் தேர்வு தொடங்கும். 2022-ம் ஆண்டில் 11, 12-ம்வகுப்புகளுக்கு 3,262 தேர்வு மையங்களும், 10-ம் வகுப்புக்கு 4,092 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. மாணவர்களின் வசதிக்காக நடப்பாண்டில் 200-க்கும் மேற்பட்ட மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், கடந்த ஆண்டில் தேர்வு மையங்களாக செயல்பட்ட சில பள்ளிகளில் தற்போது போதுமான வசதிகள் இல்லாததால், அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

தேர்வுகளை விரைவாக முடித்து, திட்டமிட்டபடி முடிவுகளை வெளியிட்டால்தான், மாணவர்கள் உயர்கல்வி பயில ஏதுவாக இருக்கும். எனவே, உரிய வழிமுறைகளைப் பின்பற்றி, தேர்வுகளை பாதுகாப்பாக நடத்துவதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேர்வுக்கான ஹால்டிக்கெட் வழங்குதல், விடைத்தாள்களை மையங்களுக்கு எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளன. மாணவர்களுக்கு சிரமமின்றி எளிய வடிவிலேயே தேர்வுகள் நடத்தப்படும். இவ்வாறு தேர்வுத் துறை அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84623094