கல்விக்கடன் ரத்து எப்போது? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 05, 2022

Comments:0

கல்விக்கடன் ரத்து எப்போது?

கல்விக்கடன் ரத்து எப்போது? - ஆர்.பி. உதயகுமார் கேள்வி

மாணவர்களின் கல்விக்கடன் எப்போது ரத்து செய்யப்படும் என திமுக அரசுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 'இளைஞர்களின் எதிர்காலத்தை நிலைநிறுத்துவது அரசின் கடமையாகும். திமுக தேர்தலின்போது 525 தேர்தல் அறிக்கைகளை கொடுத்தனர். அதில் மாணவர்கள் வாங்கிய கடன் ரத்து என்பதை அறிவித்தார்கள். ஓர் ஆண்டில் கல்விக்கடனை கட்ட முடியாமல் இருக்கும், 30 வயதுக்குள்ளான இளைஞர்களின் கல்விக்கடனை அரசே ஏற்கும் என்று திமுக தேர்தல் அறிக்கை அறிவித்தது, அது தற்போது கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.

தமிழகத்தில் 6,74,066 மாணவர்கள் 17,193 கோடி அளவில் கல்விக் கடனை வாங்கி உள்ளார்கள். இந்த 18 மாத ஆட்சியில் 30 வயதுக்குட்பட்ட மாணவர்கள் வாங்கிய கடன் குறித்து அரசு விபரம் தெரிவிக்கப்படவில்லை, அது ரத்து செய்யப்பட்டதா ? எத்தனை நபர்களுக்கு கடன் ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்ற விவரம் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

அதேபோல் திமுக தேர்தல் அறிவிப்பில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஐந்தாண்டுகளில் 50 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும் என்று கூறினார்கள். அதேபோல் அரசுத் துறையில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அறிவித்தார்கள். புதிதாக 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அறிவித்தாகள். வேலையில்லா பட்டதாரிகளுக்கு குறுந்தொழில் தொடங்க 20 லட்சம் வரை கடன் வசதி வழங்கப்படும் என்றும் திமுக வாக்குறுதி கொடுத்தனர்.

ஆனால் இன்றைக்கு வாக்களித்து காத்துள்ள இளைஞர்களுக்கு ஏமாற்றம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. திமுக அரசு இன்றைக்கு எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி, நடுத்தெருவில் நிற்கும் இளைஞர்களுக்கு பாதுகாப்பு வழங்க முன்வருமா, இது எல்லோர் மனதில் எழுந்துள்ள கேள்வி.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 446 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பிற்கு 1,50,533 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்பட்ட நிலையில் தற்பொழுது இறுதி நிலையில் எட்டவுள்ள நிலையில் இதுவரை 95,032 இடங்கள்தான் நிரம்பியுள்ளன. நடப்பாண்டில் பொறியியல் கல்லூரியில் சுமார் 50,000 இடங்கள் வரை காலியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏன் இந்த நிலை இன்றைக்கு? உயர்கல்வியில் சேர்வதற்கு சிறந்த பள்ளியில் படித்து, உயர்ந்த மதிப்பெண்கள் மாணவர்கள் பெற்ற அறிவாற்றலை, உயர்கல்விலே தொடர்ந்து பெறுவதற்கு கல்விக் கடன் ரத்து என்ற திமுகவின் அறிவிப்பு கிணற்றில் போட்ட கல்லாக இருக்கின்ற காரணத்தினால், மாணவர்கள் கல்வி கடன் பெற முடியுமா, பெற முடியாதா, வங்கிகள் கடன் தர முன் வருவீர்களா? என்ற குழப்ப சூழ்நிலை உள்ளது.

திமுக அரசு இளைஞர்கள் வாழ்வை கேள்விக்குறியாக்கி உள்ளது. திமுகவின் வாக்குறுதிகள் இளைய சமுதாயத்திற்கு கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. இதனால் இளைய சமுதாயத்தின் எதிர்காலம் என்னாகும் என்ற அச்சம் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.

ஆகவே , மாணவர்கள் கல்விக்கடன் உடனடியாக ரத்து செய்வதற்கு இந்த அரசு முன்வருமா என்று மாணவர்களால் 'ஆல்பாஸ் முதல்வர்' என்று பாராட்டு பெற்ற பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார். ஆகவே, இந்த கோரிக்கையை அரசு செயல்படுத்த முன்வருமா செயல்படுத்துமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews