11,265 அரசு பள்ளிகளில் தலா 30 மாணவர்களே படிக்கின்றனர்: பள்ளிக் கல்வித் துறை தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 04, 2022

Comments:0

11,265 அரசு பள்ளிகளில் தலா 30 மாணவர்களே படிக்கின்றனர்: பள்ளிக் கல்வித் துறை தகவல்

11,265 அரசு பள்ளிகளில் தலா 30 மாணவர்களே படிக்கின்றனர்: பள்ளிக் கல்வித் துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் 11,265 அரசு பள்ளிகளில் 30 பேருக்கும் குறைவாகவே மாணவர் எண்ணிக்கை இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,387 அரசு பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் 52.75 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த சுமார் 2.3 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

இதற்கிடையே கரோனா பரவலுக்கான பிந்தைய பொருளாதார நெருக்கடி, அரசின் நலத்திட்டங்கள், சிறப்பு இடஒதுக்கீட்டு செயல்பாடுகளால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளில் கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரம் தமிழகத்தில் 11,265 அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 30 பேருக்கும் குறைவாகவே இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு செலவினங்களுக்காக மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப மத்திய அரசு நிதி அளிக்கும். அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான (2022-23) மத்திய அரசின் நிதியானது மாநிலத் திட்ட இயக்குநரகம் வழியே அண்மையில் விடுவிக்கப்பட்டது.

மானியத்தொகை:

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர் இரா.சுதன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், "தமிழகத்தில் 11,251 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 14 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 11,265 பள்ளிகளில் 1 முதல் 30 வரையான மாணவர்களே படித்து வருகின்றனர். இந்த பள்ளிகளுக்கு பராமரிப்பு நிதியாக தலா ரூ.10 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 31 முதல் 100 மாணவர்கள் வரை பயிலும் 13,594 அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரமும், 101 முதல் 250 வரை மாணவர் எண்ணிக்கையுள்ள 8,364 பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘முந்தைய கல்வியாண்டுகளின் அடிப்படையில் இந்த நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. எனினும், தற்போது பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளது. தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews