ரூ.145 கோடியில் மாநகராட்சி பள்ளிகள்... தரம் உயர்வு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 11, 2022

1 Comments

ரூ.145 கோடியில் மாநகராட்சி பள்ளிகள்... தரம் உயர்வு!

சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளிகளை, உலகத்தரத்தில் நவீன முறையில் அமைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. இதற்காக முதற்கட்டமாக, 'சிட்டிஸ்' மற்றும் 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தில் 145 கோடி ரூபாய் செலவில், 50 பள்ளிகளை 'மார்டன்' பள்ளியாக மாற்றும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. அதே போல், மாநகராட்சி பள்ளிகள் அனைத்தையும் தரம் உயர்த்த, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என, 281 பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளில் ஆண்டுக்கு, 1.50 லட்சம் பேர் வரை படிக்கும் வசதி உள்ளது. அதே நேரம், தனியார் பள்ளிகள் அதிகரிப்பு, அதன் மீதான பெற்றோர்களின் மோகம் போன்றவற்றால், மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தது.

கடந்த 2019ம் ஆண்டு வரை, சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 90 ஆயிரம் என்ற அளவில் தான், மாணவர்கள் படித்து வந்தனர். 'சிட்டிஸ்' திட்டம்

இந்நிலையில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக, மாநகராட்சி பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதன் ஒரு பகுதியாக, பள்ளி சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு, சுத்தம், சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டன. கடந்த, 2020ம் ஆண்டு கொரோனா பாதிப்பால், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.அப்போது, ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், பெற்றோர் பலர் தனியார் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்தனர். இதனால், தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள், மாநகராட்சி பள்ளிகளை நோக்கி இடம் பெயர்ந்தனர்.

அதன்படி, மாநகராட்சி பள்ளிகளில் தற்போது, மாணவர் எண்ணிக்கை, 1.10 லட்சமாக உயர்ந்து உள்ளது. மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பால் உற்சாகம் அடைந்துள்ள மாநகராட்சி நிர்வாகம், மாநகராட்சி பள்ளிகளின் உட்கட்டமைப்பை நவீனப்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, உலகத் தரத்தில் வகுப்பறைகள் உருவாக்கும் வகையில், பிரான்ஸ் நாட்டு நிதியுதவியுடன் 'சிட்டிஸ்' திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தியது.

துவக்கம்



இத்திட்டத்தில், 95 கோடி ரூபாய் மதிப்பில், 28 பள்ளிகள் 'மார்டன்' எனப்படும் நவீன வகுப்பறைகளாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இதில், டிஜிட்டல் முறையில் கல்வி, நவீன ஆய்வகம், ஆசிரியர்களுக்கு பயிற்சி, விளையாட்டு வசதி உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் 60 சதவீதம் முடிந்துள்ளன.இதைத் தவிர, சிங்கார சென்னை 2.0 திட்டத்தில், 50 கோடி ரூபாய் மதிப்பில் 22 பள்ளிகளில் நவீன வகுப்பறை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. மொத்தம் 50 பள்ளிகளில் 145 கோடி ரூபாய் செலவில் உலகத்தரத்திலான வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.இந்த பள்ளிகளின் மேசை, நாற்காலி போன்றவற்றிற்கு, சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனமும், 10 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இந்த 50 பள்ளிகளில் நவீன வகுப்பறை அமைக்கும் பணிகள் முடிந்து, இந்தாண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், சென்னை மாநகராட்சியின் மீதமுள்ள பள்ளிகளையும் நவீன வகுப்பறைகளாக மாற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக, பல்வேறு நாட்டு வங்கிகள் மற்றும் தன்னார்வலர்களிடம் நிதியுதவி கோரியுள்ளது.

சென்னை மாநகராட்சி பள்ளிகளை நவீன முறையில் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, சிட்டிஸ் திட்டத்தில் 28 பள்ளிகள்; சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் 22 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் நிறைவடைந்தால் மாணவர்களுக்கு தரமான வகுப்பறைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் கிடைக்கும்.

-- சினேகாமாநகராட்சி கல்வி துணை கமிஷனர்.

- நமது நிருபர் -

1 comment:

  1. TRS kaluku thaguthi tharvu thavai elai sonathu payizum pertru than varaga puthu zu solathiga

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews