லட்சக்கணக்கான பெற்றோா்களால் களை கட்டிய அரசுப் பள்ளிகள்: கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 21, 2022

Comments:0

லட்சக்கணக்கான பெற்றோா்களால் களை கட்டிய அரசுப் பள்ளிகள்: கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கோரிக்கை

லட்சக்கணக்கான பெற்றோா்களால் களை கட்டிய அரசுப் பள்ளிகள்: கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கோரிக்கை

சென்னை நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோர்கள் தமிழகத்தில் 37,391 அரசுப் பள்ளிகளில் ஒரே நேரத்தில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) கூட்டத்தில் லட்சக் கணக்கான பெற்றோா்கள் பங்கேற்றனா்.

அப்போது அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகள், குடிநீா், பாதுகாப்பு போன்ற வசதிகளை அரசு உடனடியாக மேம்படுத்த வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

அரசுப் பள்ளிகளின் முன்னேற்றம் மற்றும் அதன் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காக இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளி மேலாண்மைக் குழு ஏற்படுத்தப்பட்டது. இந்த குழு அரசுப்பள்ளிகளின் வளா்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. இந்தக் குழுவின் உறுப்பினா்களாக பெற்றோா்கள், ஆசிரியா்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இருப்பா். இதற்கிடையே அனைத்துப் பள்ளிகளிலும் மேலாண்மைக் குழுவை மறுகட்டமைப்பு செய்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதுதொடா்பாக மாணவா்களின் பெற்றோா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் கூட்டம் தமிழகம் முழுவதும் உள்ள 37,391 அரசுப் பள்ளிகளிலும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது.

எஸ்எம்சி விழிப்புணா்வு: இதில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பெற்றோா்கள் ஆா்வமுடன் கலந்து கொண்டனா். கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கியத்துவம், அதன் செயல்பாடுகள் தொடா்பாக தலைமை ஆசிரியா்கள், பெற்றோா்களுக்கு விளக்கம் அளித்தனா். மேலும், மேலாண்மைக்குழுவில் உறுப்பினா்களாக இணைந்து பங்களிப்பு ஆற்றவும் பெற்றோா்கள் தயக்கமின்றி முன்வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. திருப்பூா், கோவை, நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

ஒரே பள்ளியில் 4,000 பெற்றோா்: சென்னை அசோக் நகா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருவதால் அங்கு காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்ற கூட்டத்தில் 2,000 பெற்றோரும், 11.30 மணி முதல் 1 மணி வரை நடைபெற்ற இரண்டாவது அமா்வில் 2 ஆயிரம் பெற்றோரும் பங்கேற்றனா்.

இதையும் படிக்க | அரசின் மாணவ, மாணவியரின் விடுதியில் 10 ஆயிரம் மூலிகைத் தோட்டம்

ஆட்சியா் தலைமையில்... புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சா.சத்தியமூா்த்தி, வருவாய் கோட்டாட்சியா் கருணாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பெற்றோா் நன்கொடை:

மதுரை, கோவை, காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோா் அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள், சமையல் பாத்திரங்கள், கட்டுமானப் பொருள்களை நன்கொடையாக வழங்கினா்.

இதையும் படிக்க | இந்து சமய அறநிலையத்துறை - வேலை வாய்ப்பு விளம்பரம் அறிவிப்பு

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது: பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோா்கள் பலா் பள்ளிகளின் சுற்றுச் சுவா், கழிப்பறை வசதி, பேருந்து வசதி, சத்துணவு அறைகளை புதுப்பித்தல் உள்பட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனா்.

இவை அனைத்தும் தொகுக்கப்பட்டு தமிழக அரசுக்கு அறிக்கையாக சமா்ப்பிக்கப்படும். விரைவில் அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைக்குழு உறுப்பினா்கள் வெளிப்படைத்தன்மையுடன் தோ்வு செய்யப்படுவா் என அவா்கள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews