“ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்ய வழிதெரியும் என்றார்கள்”- ஆர்.பி.உதயகுமார் சாடல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 15, 2021

1 Comments

“ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்ய வழிதெரியும் என்றார்கள்”- ஆர்.பி.உதயகுமார் சாடல்

“ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்ய வழிதெரியும் என்றார்கள்”- ஆர்.பி.உதயகுமார் சாடல்

‘திமுகவினர் எதிர்க்கட்சியாக இருந்தபோது நீட் தேர்வை ரத்து செய்ய வழி தெரியும் என்றனர்’ என முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் சாடியுள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மகளிரணி சார்பில் கலந்தாய்வு கூட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஜெயலலிதா கோவிலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மதுரை திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, “திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது தங்களிடம் ஆட்சி பொறுப்பு இருந்திருந்தால் நீட் தேர்வை ரத்து செய்ய வழி தெரியும் என்று கூறினார்கள். கடந்த சட்டமன்ற தேர்தலில் பிரசாரத்தின்போது கூட நீட் தேர்வை ரத்து செய்ய வழி எங்களுக்கு தெரியும் என்று கூறி தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தார்கள். அதிமுக ஆட்சியின் போது எடப்பாடியார் நீட் தேர்வில் கடைசி வரை சட்டப்போராட்டம் நடத்தினார். நீட் தேர்வுக்கு எதிராக மசோதாவை நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார். சமூக நீதிக்கு எதிரானது என்று கூட போராடினார். இது ஒருபுறம் இருந்தாலும் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழி வகை கிடைக்கும் வகையில் இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றி இதன் மூலம் இன்றைக்கு 435 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளார். ஆனால் தற்போதைய திமுக அரசு முன்னாள் நீதியரசர் ராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்துள்ளது. அந்த குழுவோ நீட் தேர்வை பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை என்று கூறியுள்ளது. நாங்களும் இதை வரவேற்கிறோம். ஆனால் இது அனைவருக்கும் முன்பே தெரியும். ஆனால் ஏதோ தெரியாத ரகசியத்தை கூறியது போல தெரிவித்துள்ளனர்.

இந்தாண்டு நீட் தேர்வு தேதி வெளியாகி உள்ளது. இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். திமுகவின் 505 தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வில் மாணவருக்கு ஏமாற்றத்தை முதல் பரிசாக வழங்கி உள்ளனர். அதேபோல் சுகாதார அமைச்சரும் நீட் தேர்வு நல்லது என்றும் மருத்துவ படிப்புக்கு பயன்தரும் என்றும் நேரத்திற்கு தகுந்தார் போல் பேசுகிறார். நம்பி ஓட்டு போட்டோம், இன்றைக்கு நடுத்தெருவில் நிற்கிறோம் என்று மக்கள் சொல்கிறார்கள். மாணவர்களை ஏமாற்றியது போதும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடியார் மாணவர் நலனுக்காக இன்று குரல் கொடுத்துள்ளார். அனைத்து குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாயை நடைபெறும் நிதி நிலையில் அறிவிக்க வேண்டும். வாக்குறுதியை நிறைவேற்றத் தவறினால் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட மகளிரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மாணவர்கள் கூட்டுறவு வங்கிகளில் மற்றும் தேசிய வங்கிகளில் வாங்கிய 20,000 கோடி கடனை அரசு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாது பிரச்சனையில் அரசு வீர வசனம் பேசாமல் கவனம் செலுத்த வேண்டும். அதிமுக ஆட்சி இருக்கும்போது தொடர்ந்து எதிர்க்கப்பட்டு அணை கட்டப்படாமல் தடுக்கப்பட்டது. மேகதாது அணை கட்டுவோம் என்று கர்நாடகா கூறுகிறது. அப்படி கட்டினால் நமது நெற்களஞ்சியம் எல்லாம் பாலைவனம் போல் ஆகிவிடும்” என்று பேசினார்.

1 comment:

  1. எல்லாமே செய்வார்கள்.உங்களை போல் இரட்டை வேடம் போட மாட்டார்கள்.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews