தனியாருக்கு தாரை வார்க்கப்பட்ட மின்சார வாரிய பணியிடங்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 18, 2020

Comments:0

தனியாருக்கு தாரை வார்க்கப்பட்ட மின்சார வாரிய பணியிடங்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக மின்வாரியத்தில் 30,000 காலிப் பணியிடங்களை தனியார் மூலம் நிரப்ப நடவடிக்கை. ஐடிஐ முடித்த மாணவர்கள் அதிர்ச்சி.
தமிழகத்தில் மின் வாரிய பராமரிப்பு பணிகளை நிர்வகிக்கும் பொறுப்பு தனியாரிடம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 12 ஆயிரம் பேரை தனியார் நிறுவனமே தேர்வு செய்வதற்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ரயில்வே, வங்கி மற்றும் மத்திய அரசு நிறுவனங்களில் கடந்த சில ஆண்டுகளாக வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களுக்கே அதிக அளவில் வேலை கொடுக்கப்படுகிறது என்றும், இதனால் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோன்று, தமிழக அரசு அலுவலகங்களில் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களின் பணியிடங்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு, அந்த இடங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை பணி அமர்த்தும் நிலை உள்ளது. இதனால் தமிழகத்தில் படித்த இளைஞர்கள், பல லட்சக்கணக்கானவர்கள் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் கூட சென்னை தலைமை செயலகத்தில் துப்புரவு பணிக்கு ஆட்கள் எடுக்கப்பட்டது. அந்த வேலைக்கு கூட இன்ஜினியர்கள், எம்பிஏ உள்ளிட்ட உயர்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கும் அவலநிலை ஏற்பட்டது. தற்போது ரேஷன் கடைக்கு எடையாளர்கள் பணிக்கு ஆட்கள் தேர்வு நடக்கிறது. இந்த வேலைக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு படித்தாலே போதும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனாலும், அந்த பணிக்கும் கூட இன்ஜினியர்களும், பட்டதாரிகளுமே விண்ணப்பித்துள்ளனர். இந்த சூழ்நிலையில் தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத்தில், மின் பராமரிப்பு பணிக்கு நேரடியாக ஆள் எடுப்பதை நிறுத்திவிட்டு தனியார் மூலம் ஆட்களை நியமிக்க டெண்டர் வழங்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, தமிழக மின்சார வாரியத்தில் பணியாற்ற 12 ஆயிரம் பேரை தனியார் நிறுவனமே தேர்வு செய்து கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு மின் பகிர்மான வட்டத்தின் பிரிவு அலுவலகத்தின் மூலம் மின்நுகர்வோருக்கு தடையற்ற மின் விநியோகம் வழங்குதல், தினசரி பராமரிப்பு பணிகள் உள்ளிட்டவற்றை ஒப்பந்த ஊழியர்கள் மூலமாக மேற்கொள்வது தொடர்பான ஒப்பந்த புள்ளிகளை தேர்வு செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தமானது ஒரே தவணைத் தொகை செலுத்துவதன் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாகும். விதி மற்றும் நிபந்தனைக்கு உடன்பட்டால் மேலும் ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்படலாம். இந்த ஒப்பந்தப்புள்ளியை சம்பந்தப்பட்ட கண்காணிப்பு பொறியாளர் உறுதி செய்வார். இதற்கான தொகை, பிஎப், இஎஸ்ஐ உள்ளிட்ட ஊழியர் நலன் சார்ந்த விஷயங்களோடு ரூ.1 கோடியே 80 லட்சத்து 88 ஆயிரம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் தேர்வு செய்யும் துணை பிரிவு அலுவலகங்களில் 25 சதவீதம் அல்லது அதற்கு அதிகமான காலி பணியிடம் இருந்தால் அவர்கள் இரண்டு பிரிவு அலுவலகங்களை பராமரிக்க வேண்டும். அதே நேரம் 25 சதவீதத்துக்கும் குறைவான காலி பணியிடம் உள்ள அலுவலகத்தின் பணிகளை மின்வாரிய அலுவலர்களே கவனித்துக்கொள்ள வேண்டும். தேர்வாகும் ஒப்பந்ததாரர் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் வகையில் குறைந்தது 20 ஊழியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.412 எனும் வகையில், மாதம் ரூ.12,360 ஊதியமாக வழங்க வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இப்படி, ஒரு தனியார் நிறுவனம் அல்லது ஏஜென்சி 12 ஆயிரம் பேரை தேர்வு செய்ய அனுமதி அளித்தால், அவர்கள் எப்படி தமிழக இளைஞர்களுக்கு வழங்குவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்ற கேள்வியை மின்சார ஊழியர் சங்க பிரதிநிதிகள் எழுப்பி உள்ளனர். இதன்மூலம் அரசு வேலை கிடைக்கும் என்று பல ஆண்டுகளாக காத்துக்கிடக்கும் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே உதய் மின் திட்டத்தில் தமிழகமும் இணைந்ததால், மின்வாரிய பொறியாளர்களாக வெளி மாநிலத்தவர்கள் பலர் நியமிக்கப்பட்டனர். இப்போது, ஹெல்பர், வயர்மேன் போன்ற சாதா ரண பணிகளிலும், தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை உருவாகி உள்ளது. இதுவரை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தேவையான ஊழியர்கள் தேர்வு நடத்தப்பட்டு அதன்மூலம் ஆட்களை தேர்வு செய்து வந்தார்கள். அப்படி ஆட்களை நியமிக்கும்போது, இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வந்தது. இனி தனியாரே ஊழியர்களை நியமித்துக் கொள்ளலாம் என்றால் இடஒதுக்கீடு முறை முற்றிலும் கைவிடப்பட்டு விடும். இதனால் சமூகத்தில் பின்தங்கியவர்கள் எப்படி அரசு வேலைக்கு வர முடியும்? தனியார் நிறுவனங்கள் பணியாளர்களுக்கு ஒழுங்காக சம்பளம் வழங்குவார்களா என்பதற்கு என்ன உத்தரவாரம்? சம்பளம் கொடுக்கவில்லை அல்லது வேறு ஏதோ பிரச்னைக்காக இந்த தனியார் ஊழியர்கள் திடீரென வேலைநிறுத்தம் செய்தால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள மின்சாரத்தை தடையில்லாமல் எப்படி வழங்க முடியும்? இப்படி நிறைய பிரச்னைகள் உள்ளது. அதனால் தமிழக அரசு, 12 ஆயிரம் பணியிடங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று மின்சார வாரிய தொழிற்சங்க பிரதிநிதிகள் கோரிக்கை வைத்துள்ளனர். * தடையற்ற மின் விநியோகம் வழங்குதல், தினசரி பராமரிப்பு பணிகள் உள்ளிட்டவற்றை ஒப்பந்த ஊழியர்கள் மூலமாக மேற்கொள்ள முடிவு. * இதற்காக ஒப்பந்த புள்ளிகளை கோர முடிவு. * 4 ஆண்டுகள் வரை தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள். * நாள் ஒன்றுக்கு ரூ.412 எனும் வகையில், மாதம் ரூ.12,360 ஊதியமாக வழங்க வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. * தனியார் நிறுவனங்கள் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களை குறைந்த ஊதியத்துக்கு நியமிக்க வாய்ப்பு. * தகுதியற்றவர்கள் வேலைக்கு வரும் அபாயம் மின்வாரிய பொறியாளர் சங்கம் எச்சரிக்கை இது குறித்து மின்வாரிய பொறியாளர் தொழிலாளர் ஐக்கிய சங்கத்தின் பொதுச்செயலாளர் சுப்ரமணியன் கூறியதாவது: மின்சார வாரியத்தில் ஒப்பந்த ஊழியர்களை வைத்துக் கொண்டு டெண்டர் விடுகின்றனர். அதாவது ரூ.2.30 லட்சம் செலுத்தி யார் வேண்டுமானாலும் டெபாசிட் செய்து கான்ரெக்ட்டுகளை எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு கீழே 20 பேர் வைத்துக் கொண்டு வேலை பார்த்துக் கொள்ளலாம். ஏற்கனவே நிரந்தர ஊழியர்கள் பார்த்துக் கொண்டு இருந்த பராமரிப்பு பணிகளை தான் ஒப்பந்த ஊழியர்கள் வைத்து பார்க்கப் போகிறீர்கள். அவர்கள் ஒரு நாள் வேலை பார்த்தால் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். இந்த வேலை என்று இல்லை 20 பேர் வைத்துக் கொண்டு அனைத்து வேலைகளையும் அவர்கள் தான் பார்க்க வேண்டும். தற்போது களத்தில் மட்டும் 32,573 காலி இடங்கள் இருக்கிறது. அதில் மூன்று வகையான வேலைகள் இருக்கும். கள உதவியாளர், வயர்மேன், பிஏ இதில் மட்டுமே இவ்வளவு காலியிடங்கள் இருக்கிறது. இதைப்போன்று மற்ற காலி இடங்களை சேர்த்தால் 53 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட காலிப்பணியிடங்கள் இருக்கிறது. மேலும் ஒவ்வொரு வேலைக்கும் தகுதிக்கு ஏற்ப வேலைகள் கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது யார் வேண்டுமானாலும், எந்த வேலைக்கும் வரலாம். அப்படி வரும் போது அளவுக்கு அதிகமான உயிர் இழப்புகள் ஏற்படும் காரணம். அவர்கள் புதியவர்கள். மின்சார வாரியம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதிக விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் வகையில் தான் சேர்மேன் வழி செய்திருக்கிறார். மேலும் இறப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் கொடுப்பதாக சொல்லி தான் ஆர்டர் போட்டு இருக்கிறார். இந்த ஒப்பந்த ஊழியர்கள் 20 பேரை வைத்துக் கொண்டு அவர்கள் ஏற்கனவே நிரந்தர ஊழியர்கள் செய்திருக்கும் லயனை மாற்றி செய்யும் போது மறுபடியும் நிரந்தர ஊழியர்கள் வந்து அதை பணியை செய்யும் போது நாம் ஏற்கனவே இப்படி தான் லயனை கொடுத்தோம் என்று பணியை செய்யும் போது உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக முதலமைச்சர் இந்த உத்தரவை திரும்ப பெறவில்லை என்றால் தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு சுப்ரமணியன் கூறினார். * அமைச்சர் தங்கமணி விளக்கம் நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்,நேற்று இரவு மின்துறை அமைச்சர் தங்கமணி அளித்த பேட்டி: தமிழக மின்சார வாரியத்தில், 10 ஆயிரம் கேங்மேன் பணியிடத்துக்கு, ஆட்களை தேர்வு செய்ய தேர்வு நடத்தப்பட்டு, மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. அதற்கு பின்னர் சில தொழிற்சங்கங்களின் தவறான வழிகாட்டுதல் படி, சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு முடிந்தால், 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 50 சதவீதத்துக்கு மேல் மின் ஊழியர்கள் பணியிடம் காலியாக இருந்தால், அவுட்சோர்சிங் முறைப்படி ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். எந்த சூழ்நிலையிலும், தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் மயம் ஆகாது. என தெரிவித்தார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews