👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட (ஐ.சி.டி.எஸ்.) கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையங்களில் நிகழ் கல்வியாண்டில் தொடங்கப்பட்டுள்ள மாண்டிசோரி கல்வி அடிப்படையிலான எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள், எந்தவித திட்டமிடலும் இல்லாமல் தொடங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் இருமொழிக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டாலும், தாய்மொழிக் கல்வியை கற்கும் மாணவர்களைவிட ஆங்கில மொழி வழியில் பயில்வதில் மாணவர்கள் அதிக விருப்பம் கொள்கின்றனர். மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆங்கில மொழி மீது இருக்கும் மோகம் காரணமாக தங்களது பொருளாதார நிலை எதுவாக இருப்பினும், அதிக கட்டணம் செலுத்தி குழந்தைகளை தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் சேர்க்கத் தயாராகி விடுகின்றனர்.
மாணவர்கள் பெரும்பாலானோர் தனியார் பள்ளிகளில் சேர்ந்துவிடுவதால், அரசுப் பள்ளிகளில் ஒவ்வோர் ஆண்டும் சேர்க்கை குறைந்து வருகிறது. இதைத் தடுக்கும் நோக்கில், தமிழக அரசு அனைத்து அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்தி, பல்வேறு குழப்பங்களுக்கிடையே செயல்படுத்தி வருகிறது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள், தனியார் பள்ளிகளை விஞ்சும் வகையில் வண்ணச் சீருடைகள், காலணிகள், ஸ்மார்ட் கார்டு திட்டம், இலவச சைக்கிள், மடிக்கணினி, ஊக்கத் தொகைகள் போன்ற எண்ணற்ற சலுகைகளை வழங்கி மாணவர்களை ஈர்த்து வருகிறது.
தமிழக அரசு மேற்கொண்டு வரும் தொடர் முயற்சியால் நிகழ் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும், புள்ளி விவரங்கள் உறுதி செய்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். ஏழை, எளிய விளிம்பு நிலை மாணவர்களும் ஆங்கில வழிக் கல்வியைப் பயில வேண்டும் என்பதற்காக, சமூக நலத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் (ஐ.சி.டி.எஸ்.) கட்டுப்பாட்டின் கீழ் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி மற்றும் அரசு நடுநிலைப்பள்ளி வளாகங்களில், தமிழகம் முழுவதும் செயல்படும் 2, 381அங்கன்வாடி மையங்களில் மாண்டிசோரி முறையிலான எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளை தொடங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு 11.12.2018}இல் வெளியிட்டது. இந்த அறிவிப்பு கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் அறிவிப்பாகவும் இருந்தது.
இதுதொடர்பான அறிவிப்புகள் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி, தமிழக தொடக்கக் கல்வித்துறை அலுவலகங்கள், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன என்ற விவரங்கள் கேட்டறியப்பட்டு, தமிழகத்தில் 2, 381அங்கன்வாடி மையங்களில் உள்ள 52, 933 குழந்தைகள் பயன்பெறும் வகையில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. மையங்கள் தொடங்கப்பட்டு, வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்துக்காக ரூ. 7.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் பள்ளி முன்பருவக் கல்வி பயிலும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் 4 ஜோடி சீருடைகள், ஒரு ஜோடி காலணி, ஸ்வர்ட்டர், மழைக் காலங்களில் அணியக்கூடிய ஷூ, கல்விச் சான்று, ஆசிரியர்களுக்கு பயிற்சி, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல் ஆகியவைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி செலவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சோதனைக்காக முதற்கட்டமாக நடுநிலைப்பள்ளி வளாகங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மாண்டிசோரி பாடத் திட்டம் முறையில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. திட்டமிடப்படாத இந்த அவசர அறிவிப்பு மற்றும் செயலாக்கம் காரணமாக வகுப்புகள் நடைபெறுவதற்கான போதிய வசதிகள், கட்டமைப்புகள் இல்லாததால் மாணவர்கள் ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பாடப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் கிடைக்காததால் ஆசிரியர்களும், மாணவர்களும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இடவசதியின்மையால் மாணவர்கள் அனைவரும் ஒன்றாக அமர வைக்கப்படுகிறார்கள். அங்கன்வாடி மையங்களில் பணியமத்தர்ப்பட்டுள்ள ஆசிரியர்கள் மழலையர்களுக்கான ஆசிரியர்கள் இல்லை. அனைவரும் இடைநிலை ஆசிரியர்களாக இருப்பதால், மழலையர்களை கையாளுவதிலும், பாடங்களைக் கற்பிப்பதிலும் தயக்கம் காட்டுகின்றனர்.
வகுப்புகள் தொடங்கப்பட்டு 2 மாதங்கள் ஆனநிலையில், இதில் பணியாற்றும் தாங்கள் பணியாற்றுவது கல்வித்துறையிலா? அல்லது சமூக நலத்துறையிலா என்ற குழப்பத்திலும் ஆழ்ந்துள்ளனர். அங்கன்வாடி மையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர்கள் என்பதால் 3 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை கையாளுவதிலும், பாடங்களை கற்பிப்பதிலும் தயக்கம் காட்டுகின்றனர். 1 முதல் 5 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளுக்கான ஆசிரியர்களாகப் பணியமத்தப்பட்டுள்ளதால் தங்களின் தகுதி குறைக்கப்பட்டிருப்பதாகவும் ஆசிரியர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
எனவே, அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்டுள்ள மாண்டிசோரி கல்வி முறையிலான எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க மழலையர்களை கையாளும் பயிற்சிப் பெற்ற தகுதியான ஆசியர்களை நியமிக்கவும், மாணவர்களுக்கு ஆசிரியர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்களை வழங்கவும், போதிய கட்டடங்கள் இல்லாத இடங்களில் புதிய கட்டடங்களை கட்டுவதற்கும் தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.
இதற்கான பணிகளை மழைக் காலத்துக்கு முன்னரே தொடங்குவதற்கு அரசு முனைப்புக் காட்ட வேண்டும் என்பதே கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலாளர் கி. பாலசண்முகம் கூறியது: நாகை மாவட்டத்தில் 24 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மாணவர்களுக்குத் தேவையான வகுப்பறைகள் இல்லாததால் அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளும் மாண்டிசோரி முறையில் பள்ளி முன்பருவக் கல்வி பயிலும் மழலையர்களும் ஒரே இடத்தில் அமர வைக்கப்படுகின்றனர். சில நேரங்களில் பள்ளி வளாகத்தில் உள்ள பிற கட்டடங்களும் வகுப்பறைகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த மையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் இடைநிலை ஆசிரியர்களாகவே பணியாற்றியவர்கள். யாரும் மழலையர்களை கையாளும் பயிற்சிப் பெற்றவர்களும் கிடையாது. அங்கன்வாடி மையங்களில் வகுப்புகள் நடத்துவதற்கான கட்டமைப்புகள் சிறிதுமில்லை.
அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி இதுவரை எந்த ஒரு உதவியும் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. தமிழக அரசின் திட்டமிடப்படாத நடவடிக்கையால் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. பயிலும் மழலையர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறியது: எதிர்கால தலைமுறையினரான குழந்தைகளின் நிலையை மேம்படுத்தினால், அது நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும். குழந்தைகளுக்கான கல்வியை வழங்குவது அரசின் கட்டாய கடமையாகும்.
இதற்காக 3 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு மாண்டிசோரி முறையில் கல்வி கற்கும் முறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்துவதற்காக முயற்சி மேற்கொண்டிருப்பது வரவேற்புக்குரியதாகும். அதேநேரத்தில், வகுப்புகள் நடத்துவதற்கான வசதியையும் அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார்.
அங்கன்வாடி மையத்தில் மாண்டிசோரி கல்வி முறையில் பயிலும் மழலையர்கள்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U