ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களின் உயர்கல்வி உதவித்தொகைக்கான மத்திய அரசின் புதிய விதிமுறைகளை ஏற்று, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு உயர்கல்வியில் பட்டப்படிப்பு முதல், முனைவர் படிப்பு வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் மத்திய அரசு உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டத்தில் கடந்த 2017-18-ம் ஆண்டில் மட்டும் 7 லட்சத்து 21 ஆயிரத்து 812 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
இதுதவிர, மாநில அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் 26,041 பேர் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ், ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உயர்கல்வியில் சேரும்போதும் அவர்ளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சமீபத்தில் மத்திய அரசு நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதை ரத்து செய்தது. மேலும், புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் அமல்படுத்தியது.
இதனால், ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கான உயர்கல்வி உதவித்தொகை முழுமையாக கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக, சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “புதிய வழிகாட்டு நெறிமுறைகள்படி மாநில அரசின் பொறுப்புத் தொகையை ரூ.1,526 கோடியே 46 லட்சமாக உயர்த்தி, மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இந்த 2018-19-ம் ஆண்டுக்கான மொத்த தேவை, இந்தத் தொகைக்கு மேல் உயர வாய்ப்பில்லை என்பதால், இந்த நிதிச்சுமையை மாநில அரசே ஏற்று திட்டத்தை, தொடர்ந்து செயல்படுத்தும்” என்று தெரிவித்தார்.
இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு ஏற்று, அதன்படி புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.