“ஆசிரியர் பணியிடங்களை நிரப்புக” - ‘டெட்’ தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 13, 2025

Comments:0

“ஆசிரியர் பணியிடங்களை நிரப்புக” - ‘டெட்’ தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை



“ஆசிரியர் பணியிடங்களை நிரப்புக” - ‘டெட்’ தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை

அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்று `டெட்' தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு டெட் தேர்வு (தாள்-1) தேர்ச்சி அவசியம். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய டெட் தகுதித் தேர்வில் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பதவியில் 2,563 காலியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்திய பணி நியமன போட்டித் தேர்வை 25,319 பேர் எழுதினர். இவர்கள் அனைவரும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள். டெட் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனத் தேர்வை எழுத முடியும். அதில் 23,872 பேர் தேர்வு செய்யப்பட்டாலும் காலியிடங்களின் அடிப்படையில் 2,563 பேருக்கு மட்டுமே பணி வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில், கடந்த 12 ஆண்டு காலமாக இடைநிலை ஆசிரியர் நியமனம் நடைபெறாததால் அரசுப் பள்ளிகளில் 20 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் அந்த இடங்களை அண்மையில் நடத்தப்பட்ட பணி நியமனத் தேர்வு மூலம் நிரப்ப வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் நியமனத் தேர்வுகள் கூட்டமைப்பின் தலைமை நிர்வாகி சவுமியா சுரேஷ் கூறியது: “அரசு தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனம் நடந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. காலியிடங்கள் அதிகம் இருந்தும் மிகக்குறைந்த ஆசிரியர்களே நியமிக்கப் படுகிறார்கள். எஞ்சிய இடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். கருணாநிதி முதல்வராக இருந்த போது 2008 முதல் 2010 வரை 16,401 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அதேபோல், ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில் 2011 முதல் 2015 வரை 20,920 பேர் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், தற்போதைய திமுக ஆட்சியில் வெறும் 2,768 பேரை நியமிக்கவே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் 20 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளதால், இந்த அனைத்து காலியிடங்களையும் தற்போது நடத்தி முடிக்கப்பட்ட பணி நியமனத் தேர்வு மூலம் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சவுமியா சுரேஷ் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews