தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயம்: மே 15-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 21, 2025

Comments:0

தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயம்: மே 15-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயம்: மே 15-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

புதிய கல்விக் கட்டண நிர்ணய விண்ணப்பங்களை தனியார் பள்ளிகள் மே 15-க்குள் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் இயக்குநரகத்தின் கீழ் 12 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றுக்கான கல்விக் கட்டணத்தை முறைப்படுத்துவதற்காக உயர்நீதிமன்ற உத்தரவின்படி பள்ளிக்கல்வித் துறை சார்பில் கல்விக் கட்டண நிர்ணயக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியன் தற்போது பதவியில் இருக்கிறார். இந்த குழு சார்பில் தனியார் பள்ளிகளில் இருக்கும் கட்டமைப்பு வசதிகள் அடிப்படையில் கல்விக் கட்டணம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அடுத்து வரவுள்ள 2025-26, 2026-27, 2027-28 ஆகிய 3 கல்வியாண்டுகளுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளன. இதற்கான பரிந்துரை விண்ணப்பங்களை பல்வேறு தனியார் பள்ளிகள் அனுப்பி வருகின்றன. அந்தவகையில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 15-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. கல்விக் கட்டணத்தை உயர்த்த விரும்பும் பள்ளிகள் மட்டும் tnfeecommittee.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

அதேநேரம் கட்டண உயர்வு தேவைப்படாத பள்ளிகள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டாம். மேலும், பள்ளிகள் விண்ணப்பிக்கும் போது மாணவர்-ஆசிரியர் எண்ணிக்கை, ஊழியர்கள் சம்பளம், கடந்த கல்வியாண்டுக்கான வரவு செலவு அறிக்கை உட்பட விவரங்களை தணிக்கை துறையிடம் இருந்து பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டவுடன் இந்த தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். அதை ஒப்பிட்டு பள்ளிகள் கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதாக பெற்றோர்களுக்கு சந்தேகம் எழுந்தால் நேரடியாக இந்த குழுவிடம் புகார் செய்யலாம் என்று துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews