டிஜிட்டலுக்கு மாறாத ஆசிரியர்கள்; பள்ளிக்கல்வித்துறை கிடுக்கிப்பிடி - Teachers who do not switch to digital; School Education Department takes action
அரசு பள்ளிகளில், டிஜிட்டல் போர்டுகளையும், புதிய செயலிகளையும் பயன்படுத்தாத ஆசிரியர்களை கண்காணிக்கும்படி, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்ப யுகத்துக்கு ஏற்ப, மாணவர்களுக்கான கற்பிக்கும் சூழலும் மாறி வருகிறது. அதன் அடிப்படையில், 20,000க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில், மின்னணு திரைகளும், இணையதள வசதியும் கூடிய, ஸ்மார்ட் வகுப்பறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான ஆசிரியர்கள், அவற்றை காட்சிப் பொருளாகவே வைத்துள்ளதாக, அந்தந்த பள்ளிகள் அமைந்துள்ள ஊர்த் தலைவர்கள், கவுன்சிலர்கள், பள்ளிக்கல்வித் துறைக்கு புகார் அனுப்பி உள்ளனர். இதையடுத்து, அனைத்து ஒன்றியத்திலும் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்களும், தங்களிடம் உள்ள ஸ்மார்ட் வகுப்பறையையும், ஹைடெக் ஆய்வகத்தையும் பயன்படுத்த வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது; ஆனாலும், ஆசிரியர்கள் ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில், இந்த மாதத்தில் இருந்து, மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட, மணற்கேணி என்ற செயலி வாயிலாக, சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான காணொலிகள், விளக்கங்களை, மாணவர்களுக்கு காண்பிக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், பெரும்பாலான ஆசிரியர்கள், தங்களின் மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்டவற்றில், அந்த செயலியை பதிவிறக்கம் செய்யவில்லை. பதிவிறக்கம் செய்தோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
இதனால், ஆசிரியர்கள் மீது அதிருப்தி அடைந்துள்ள அதிகாரிகள், டிஜிட்டல் போர்டில், மணற்கேணி செயலி வாயிலாக பாடம் நடத்துவதை, புகைப்படம் எடுத்து, வட்டார கல்வி அதிகாரிகளுக்கு ஆசிரியர்கள் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், பள்ளிகளில் நேரடியாக இதை ஆய்வு செய்யவும் உள்ளனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.