Martial arts project funding for female students to be stopped this year - is the Tamil Nadu government giving up? - மாணவிகளுக்கான தற்காப்புக்கலை திட்ட நிதி இந்தாண்டு நிறுத்தம் - கைவிடுகிறதா தமிழக அரசு
அரசு பள்ளி மாணவிகளுக்கான தற்காப்பு கலைத் திட்டத்திற்கு இந்தாண்டு தமிழக அரசு நிதி ஒதுக்கப்படாததால் திட்டம் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது பள்ளி மாணவிகளுக்கான பாலியல் வன்முறை அதிகரித்துவரும் நிலையில் பெண்கள் மீதான வன்முறையை தடுக்கும் நடவடிக்கையாக பார்க்கப்பட்ட இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்காதது மாநில அரசின் முரண்பாடான நடவடிக்கையை தெளிவுபடுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
பெண்கள் மீதான வன்முறையை தடுக்கவும், மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கவும் தமிழக அரசால் இத்திட்டம் துவங்கப்பட்டது. இதன்படி அரசு பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் மார்ச் வரை சிலம்பம், கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ போன்ற தற்காப்பு கலைகள் கற்பிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக பள்ளிகளில் நியமிக்கப்படும் பயிற்சியாளர்கள் சம்பளம், மாணவிகளுக்கு சிற்றுண்டி செலவுக்காகவும் பள்ளிகளுக்கு தலா ரூ.9 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும்டிசம்பரில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் மூலம் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கப்படும். அப்போது தான் ஜனவரி முதல் பயிற்சிகள் அளிக்க ஏற்பாடு செய்ய முடியும். ஆனால் இந்நிதியை இந்தாண்டிற்கு இதுவரை ஒதுக்கவில்லை. இதனால் பயிற்சியாளர்களுக்கு சம்பளம் தர முடியாமல் அனைத்து பள்ளிகளிலும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:
கிருஷ்ணகிரி, திருச்சி மாவட்ட சம்பவங்கள் உட்பட தற்போது பள்ளி மாணவிகள் மீதான பாலியல் தொல்லை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனால் பெற்றோர் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவிகளுக்கான தற்காப்பு கலை திட்டத்திற்கு ஆதரவு இருந்தது.
பென்சில், பேனாக்களை கொண்டுகூட எவ்வாறு தற்காத்துக்கொள்ள முடியும் என்ற மாணவிகளுக்கான பயிற்சி பயனுள்ளதாக இருந்தது. இத்திட்டத்திற்கான நிதியை நிறுத்தி வைத்துள்ளது மாணவிகள், பெற்றோரை அதிர்ச்சியடைய வைத்துஉள்ளது என்றனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.