10 ம் வகுப்பு செய்முறை தேர்வு: ஆசிரியர்களுக்கு நெருக்கடி - Class 10 practical exam: Crisis for teachers
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறை தேர்வுகள் நடக்கும் நாட்களில் ஜாக்டோ ஜியோ சார்பில் ஆசிரியர்கள் போராட்டம், மஹா சிவராத்திரி குலதெய்வ வழிபாடு நாட்கள் குறுக்கிடுவதால் அதற்கு ஏற்ப தேர்வை நடத்தி முடிக்க வேண்டிய நெருக்கடி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மார்ச் 28 முதல் ஏப்., 8 வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடக்க உள்ளன. இதையொட்டி அறிவியல் பாட செய்முறை தேர்வுகளை பிப்.,24 முதல் 28 க்குள், அதாவது 5 நாட்களுக்குள் நடத்தி முடிக்கவும், அதற்கான மதிப்பெண் பட்டியலை மார்ச் 4க்குள் தேர்வுத்துறை உதவி இயக்குநர்களிடம் சமர்ப்பிக்கவும் சம்பந்தப்பட்ட உயர், மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இத்தேர்வுகள் இயல் அறிவியல் (இயற்பியல், வேதியியல்), உயிர் அறிவியல் (தாவரவியல், விலங்கியல்) என தனித்தனியாக காலை 9:00 முதல் 11:00 மணி, மதியம் 2:00 முதல் மாலை 4:00 மணி என இரண்டு வேளையில் தலா ஒரு மணிநேரம் நடத்த வேண்டும். இதற்காக ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு தேர்வுப் பணி ஒதுக்கப்பட்டுள்ளன. பிப்.,25ல் பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடக்கிறது. இதில் பெரும்பாலான ஆசிரியர்கள் பங்கேற்க தயாராகி வருகின்றனர். பிப்., 26, 27 ல் மஹா சிவராத்திரியை முன்னிட்டு குலதெய்வ கோயில்களுக்கு பெரும்பாலானோர் சென்று வழிபாடு செய்வர். இதில் மாணவர்களும் பங்கேற்பர்.
தலைமையாசிரியர்கள் கூறுகையில், 5 நாட்கள் என்றாலும் மறியல், குலதெய்வ வழிபாடு நாட்களுக்கு ஏற்ப அட்ஜெஸ்ட் செய்து தேர்வுகளை முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அவர்களுக்கான செய்முறை தேர்வு மதிப்பெண் பட்டியலை தேர்வுத்துறைக்கு சமர்ப்பிக்க கூடுதலாக ஒருநாள் அவகாசம் வழங்க வேண்டும் என்றனர்.
அதே அசிரியர்; அதே பள்ளியா
பொதுத் தேர்வில் செய்முறை, எழுத்து தேர்வுகளுக்கான பணி ஒதுக்கீடு செய்யும் போது கடந்தாண்டு பணியாற்றிய பள்ளிக்கு மீண்டும் அதே ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்க கூடாது என தேர்வுத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் மதுரை உட்பட சில மாவட்டங்களில் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு கடந்தாண்டு தேர்வுப் பணியாற்றிய பள்ளிக்கே இந்தாண்டும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.