“தமிழகத்தில் கல்வித் தரம் குறித்து அறிய...” - ஆளுநர் ரவிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 29, 2025

Comments:0

“தமிழகத்தில் கல்வித் தரம் குறித்து அறிய...” - ஆளுநர் ரவிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி

1348578


“தமிழகத்தில் கல்வித் தரம் குறித்து அறிய...” - ஆளுநர் ரவிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி

“தமிழக ஆளுநரின் நிலைப்பாடு அடிக்கடி மாறுகிறது. ஒருநாள் தமிழக அரசை புகழ்ந்து பேசுகிறார். அடுத்த நாள் அதற்கு நேர் மாறாக கருத்து தெரிவிக்கிறார்” என்று பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விமர்சித்துள்ளார்.

சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை திட்டத்தின் நிறைவு பணிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திங்கள்கிழமை ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியின்போது, தமிழகத்தில் கல்வித் தரம் குறைந்திருப்பதாக ஆளுநர் கருத்து தெரிவித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அமைச்சர் பதிலளிக்கும்போது, “தமிழக ஆளுநரின் நிலைப்பாடு ஒருநாள் ஒரு மாதிரியாகவும் மற்றொரு நாள் வேறு மாதிரியாகவும் உள்ளது. அவரது நிலைப்பாடு மாறி வருகிறது. எதன் அடிப்படையில் அவர் இவ்வாறு நடந்துகொள்கிறார் என்பது தெரியவில்லை. திடீரென தமிழக அரசின் செயல்பாடுகளை புகழ்ந்து பேசுகிறார். மறுநாள் அப்படியே வேறு மாதிரியாக பேசுகிறார். மனதில் உள்ளபடி பாராட்டி பேசியதால் டெல்லியில் இருந்து அவருக்கு ஏதேனும் தொலைபேசி வந்ததா என்று தெரியவில்லை. மறுநாள் அப்படியே மாற்றி அறிக்கை கொடுக்கிறார். எப்போது தமிழ்த்தாய் பாட வேண்டும்? எப்போது தேசிய கீதம் பாட வேண்டும் என்பதுகூட தெரியாத ஓர் ஆளுநருக்கு தமிழகத்தின் கல்வி எப்படி இருக்கிறது என்பது குறித்து எங்கள் மாணவர்களின் பெற்றோர் பதில் சொல்வார்கள். எண்ணும் எழுத்தும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் எங்கள் ஆசிரியர்கள் பதில் அளிப்பார்கள். அந்த பதில்களே ஆளுநருக்கு போதுமானதாக இருக்கும். ஆளுநரின் கருத்தை பார்க்கும்போது தமிழக கல்வி மீது கொண்ட அக்கறை காரணமாக அவர் சொல்வது போல் தெரியவில்லை. அரசியல் கடந்து சொன்னதுபோல் தெரிகிறது.

பொதுவாக குடியரசு தின உரையின்போது நமது அரசியல் சாசனத்தின் பெருமைகளை உயர்த்தி பிடிக்கும் வகையில் கருத்து தெரிவிப்பதுதான் வழக்கம். ஆளுநர் என்பவர் ஒட்டுமொத்த தமிழகத்தின் அவைத்தலைவராக இருப்பார் என்று நினைத்தால், அவர் ஒரு இயக்கத்தின் தலைவராக செயல்படுவது போல் தெரிகிறது.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஏதேனும் சொல்லியிருந்தால் அதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அதில் அரசியல் பார்க்கக் கூடாது. கற்றல் குறைவாக இருந்தால் அதை மேம்படுத்திக்கொள்ள இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கலாம். ஆனால், தற்போது இருக்கிற நிலைமை என்பது ஒட்டுமொத்த இந்தியாவில் கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

பள்ளிக் குழந்தைகளுக்கு கூட்டல், கழித்தல் கணக்கு தெரியவில்லை என்று குறிப்பிடு்ம்போது அது இருண்டு விதமான தாக்கங்களை ஏற்படுத்தும். ஒன்று குழந்தைகளிடம் தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்தும். இன்னொன்று ஆசிரியர்களை அவமதிப்பது போல் இருக்கும். எனவே, இந்த விஷயத்தில் ஆளுநருக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஆளுநரின் கருத்தை நாங்கள் எப்படி பார்க்கிறோம் என்றால் மாணவர்களின் பெற்றோர் பதில் சொல்லட்டும். எண்ணும் எழுத்தும் திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வரும் ஆசிரியர்களிடம் போய் கேட்கட்டும். குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறையின் அலங்கார ஊர்திகளே ஆளுநரின் அறிக்கைக்கு சரியாக பதில் சொல்லும்” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, "மத்திய அரசிடமிருந்து தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு வரவேண்டிய ரூ.2155 கோடி நிதி இன்னும் வரவில்லை. பெற்றோரை கொண்டாடும் என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி பிப்ரவரி 22-ம் தேதி விருத்தாச்சலத்தில் நடைபெற உள்ளது. இதில் முதல்வர் கலந்துகொள்கிறார். ஒரு லட்சம் பேர் இதில் பங்கேற்கின்றனர். அந்த நிகழ்ச்சியின்போது, நான் 234 தொகுதிகளுக்கும் சென்று அரசு பள்ளிகளை ஆய்வு செய்தது ஓர் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும்" என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84559947