எண்ணும், எழுத்தும் திட்ட மதிப்பீடு பணிகள் பள்ளிகளில் இன்று முதல் தொடக்கம்
அரசுப் பள்ளிகளில் எண்ணும், எழுத்தும் திட்டம் குறித்த மதிப்பீடு பணிகள் இன்று (டிசம்பர் 2) முதல் தொடங்கி நடைபெற உள்ளன.
இதுதொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்இஆர்டிஇ) சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1, 2, 3-ம் வகுப்புகளில் கற்பித்தல், கற்றலின் தரத்தை மேம்படுத்துவதற்காக எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. 2025-ம் ஆண்டுக்குள் மாநிலத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் அடிப்படை கல்வி அறிவு மற்றும் எண்ணியல் திறன்களை அடைவதை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். நடைமுறையில் உள்ள இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து நடுநிலை மதிப்பீடு (மிட்லைன் அசெஸ்மென்ட்) மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 135 பள்ளிகள் (சென்னை 136 பள்ளிகள், நீலகிரி 100 பள்ளிகள் தவிர) வீதம் மொத்தம் 5,096 பள்ளிகள் தேர்வாகியுள்ளன. இதுதவிர, மாவட்டத்துக்கு தலா 1,620 மாணவர்கள் என மொத்தம் 61,560 பேரிடம் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்படும். இந்த மதிப்பீடு பணிக்காக மாவட்டத்துக்கு தலா 144 கணக்கெடுப்பாளர்கள் வீதம் 5,472 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒவ்வொரு முதுநிலை ஆசிரியருடன் சேர்ந்து இந்த மதிப்பீடு பணியை இன்று (திங்கட்கிழமை) தொடங்கி டிசம்பர் 13-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.