இனி வினாத்தாளில் ‘ஆ’ பிரிவு கேள்விகள் கட்டாயம்: JEE தேர்வில் தளர்வுகள் திரும்பப் பெறப்படுவதாக NTA அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 19, 2024

Comments:0

இனி வினாத்தாளில் ‘ஆ’ பிரிவு கேள்விகள் கட்டாயம்: JEE தேர்வில் தளர்வுகள் திரும்பப் பெறப்படுவதாக NTA அறிவிப்பு

இனி வினாத்தாளில் ‘ஆ’ பிரிவு கேள்விகள் கட்டாயம்: JEE தேர்வில் தளர்வுகள் திரும்பப் பெறப்படுவதாக NTA அறிவிப்பு



இனி வினாத்தாளில் ‘ஆ’ பிரிவு கேள்விகள் கட்டாயம்: ஜேஇஇ தேர்வில் தளர்வுகள் திரும்பப் பெறப்படுவதாக என்டிஏ அறிவிப்பு

ஜேஇஇ முதன்மைத் தேர்வில் வழங்கப்பட்ட தளர்வுகள் திரும்பப் பெறப்படுவதாக என்டிஏ அறிவித்துள்ளது. இனி வினாத்தாளில் பகுதி ஆ பிரிவில் வரும் கேள்விகளுக்கு மாணவர்கள் கட்டாயம் பதில் அளிக்க வேண்டும். நம் நாட்டில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டுக்கான முதன்மைத் தேர்வு ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தளர்வுகள் திரும்பப் பெறப்படுவதாக என்டிஏ அறிவித்துள்ளது. இதுகுறித்து என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: “ஜேஇஇ முதன்மைத் தேர்வு பிஇ, பி.ஆர்க், பி.பிளானிங் ஆகிய 3 விதமான படிப்புகளுக்காக நடத்தப்படுகிறது. எனவே, ஒவ்வொரு படிப்புக்கும் ஏற்றவாறு 3 தேர்வுகள் நடைபெறும். அதாவது, பிஇ, பி.டெக் படிப்பில் சேர விரும்புபவர்கள் முதன்மைத் தேர்வின் முதல் தாளை எழுத வேண்டும். அதில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். பி.ஆர்க், பி.பிளானிங் படிப்புகளுக்கான 2-ம் தாள் தேர்வில் கணிதம் மற்றும் வரைப்படம், திட்டமிடல் தொடர்பான வினாக்கள் மட்டுமே இடம்பெறும். முதன்மைத் தேர்வு வினாத்தாளில் பகுதி அ, பகுதி ஆ என இரு பிரிவுகளாக கேள்விகள் கேட்கப்படும். இதில் ஆ பிரிவில் வரும் 5 கேள்விகளும் கட்டாயம் பதிலளிப்பவையாக இருந்தன. கரோனா பரவல் காலக்கட்டத்தில் மாணவர்களின் நலன் கருதி அதில் தளர்வு வழங்கப்பட்டது.

அதன்படி பகுதி ஆ பிரிவில் 10 கேள்விகள் வழங்கி அதில் 5 வினாக்களுக்கு மட்டும் பதில் அளித்தால் போதும் என்ற நடைமுறை இந்தாண்டு வரை அமலில் இருந்தது. தற்போது கரோனா பேரிடர் முடிந்து இயல்புநிலை திரும்பிவிட்ட நிலையில் தேர்வு முறையில் வழங்கப்பட்ட தளர்வுகள் திரும்பப் பெறப்படுகின்றன. அந்தவகையில் பகுதி ஆ இனி பழைய தேர்வு முறைப்படி கட்டாயப் பிரிவாகவே இருக்கும். அதிலுள்ள 5 கேள்விகளுக்கும் மாணவர்கள் பதில் அளிக்க வேண்டும். இந்த நடைமுறை 2025-ம் ஆண்டு தேர்வு முதல் அமலுக்கு வருகிறது. கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற வலைத்தளத்தில் அறியலாம்” என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews