தமிழ்நாட்டில் 6 லட்சம் பணியிடங்கள் காலி - TNPSC மூலம் நிரப்பப்படுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 20, 2024

Comments:0

தமிழ்நாட்டில் 6 லட்சம் பணியிடங்கள் காலி - TNPSC மூலம் நிரப்பப்படுமா?



TNPSC குரூப் 4 - மூலம் நிரப்பப்படும் பணியிடங்களின் எண்ணிக்கை 15 ஆயிரமா?

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 6 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட நான்காம் தொகுதி (குரூப் - 4) பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு கடந்த ஜூன் 9ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வின் மூலம் 6244 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 16 லட்சம் பேர் இந்தத் தேர்வுகளை எழுதிய நிலையில் காலியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், டி.என்.பி.எஸ்.சி கடந்த 11ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் காலியிடங்களின் எண்ணிக்கை 480 மட்டுமே உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது எந்த வகையிலும் போதுமானது அல்ல. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 6 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 2 லட்சம் பணியிடங்கள் நான்காம் தொகுதியைச் சேர்ந்தவை ஆகும். இவற்றை நிரப்புவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக அதை செய்யவில்லை. டி.என்.பி.எஸ்.சி நான்காம் தொகுதித் தேர்வு இரு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் நடக்கிறது. இடைப்பட்ட காலத்தில் 15 ஆயிரத்திற்கும் கூடுதலான நான்காம் தொகுதி பணியாளர்கள் ஓய்வு பெற்று இருப்பார்கள். அவ்வாறு இருக்கும் போது வெறும் 7024 பணியிடங்களை மட்டும் நிரப்புவது நியாயமல்ல. ஒரு தேர்வை 16 லட்சம் பேர் எழுதுகிறார்கள் என்பதிலிருந்தே தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். எனவே, தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று டி.என்.பி.எஸ்.சி நடத்திய தேர்வின் மூலம் நிரப்பப்படவுள்ள நான்காம் தொகுதி பணியிடங்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக அரசு உயர்த்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews