அடிப்படை வசதிகள் குறித்து பள்ளிகளில் நேரடி ஆய்வு: முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 23, 2024

Comments:0

அடிப்படை வசதிகள் குறித்து பள்ளிகளில் நேரடி ஆய்வு: முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு



அடிப்படை வசதிகள் குறித்து பள்ளிகளில் நேரடி ஆய்வு: முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

குடிநீர், கழிப்பறை வசதி, ஆய்வகவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில், பள்ளிக்கல்வித் துறையின் பொதுவான செயல்பாடுகள் தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது:

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக தமிழகம் முழுவதும் 175தொகுதிகளுக்குச் சென்று பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டேன். அப்போது பல பள்ளிகளில் வகுப்பறை, ஆய்வகம், கழிவறைஉள்ளிட்ட வசதிகள் சரியாக இல்லாததை நேரில் பார்த்தேன். மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் பள்ளிகளுக்குச் சென்று நேரில் ஆய்வு செய்யும்போது, அங்கு வகுப்பறை, சுற்றுச்சுவர் கட்டிடம் தேவையென்றால் உடனடியாக அதுகுறித்து அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டுதான் எந்தெந்த பள்ளிகளுக்கு என்னென்ன கட்டிடங்கள் கட்டலாம், அதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யலாம் என்பதை அரசு திட்டமிடும். களஆய்வின்போது, தரம்உயர்த்தப்பட்ட ஒரு அரசு பள்ளியில் ஆய்வகமே இல்லாததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

ஒரு பள்ளியில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் முறையாக இருக்கிறதா என்பதை முதன்மைக் கல்வி அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும். பள்ளிகளில் பழைய கட்டிடங்கள் இருந்தால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் படிப்பைபாதியில் நிறுத்துவதைக் கண்டறிந்து உடனடியாக அவர்களைப் பள்ளியில் சேர்க்க வேண்டும். மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும், மாவட்ட கல்வி அதிகாரிகளும் பள்ளிகளை முறையாகப் பார்வையிட்டு ஆய்வுசெய்ய வேண்டும். சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளிட்ட தனியார் பள்ளிகளில் முறையான அனுமதி இல்லாமல் என்சிசி, என்எஸ்எஸ் உள்ளிட்ட முகாம்கள் நடத்த அனுமதிக்கக் கூடாது. பள்ளிகளில் மாணவர்களிடையே சாதி-மத மோதல்கள் ஏற்படாத வண்ணம் அவர்களுக்கு ஆசிரியர்கள் தகுந்த ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

முதல்வரின் காலை உணவு திட்டம் பள்ளிகளில் முறையாக செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்வதுடன் உணவின் தரத்தையும், உணவு காலதாமதமின்றி மாணவர்களைச் சென்றடைகிறதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

தொடர்ந்து, சென்னை தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் பரிசுப்பதிப்புகளாக கொண்டு வரப்பட்டுள்ள ‘மிளிரும் தமிழ்நாடு’ என்ற தலைப்பின் கீழ் ‘சென்னை டு மெட்ராஸ்’ என்ற புகைப்பட ஓவிய நூலையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews