பாரத சாரணர் இயக்குநரக வைர விழாவை திருச்சியில் நடத்த முடிவு: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 04, 2024

Comments:0

பாரத சாரணர் இயக்குநரக வைர விழாவை திருச்சியில் நடத்த முடிவு: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்



பாரத சாரணர் இயக்குநரக வைர விழாவை திருச்சியில் நடத்த முடிவு: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

பாரத சாரணர் இயக்குநரகத்தின் வைர விழாவை ரூ.10 கோடி மதிப்பில் திருச்சியில் நடத்த முடிவு செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

பாரத சாரணர் இயக்குநரகத்தின் வைர விழா ஆண்டை முன்னிட்டு தேசிய அளவிலான முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு வைர விழா ரூ.10 கோடியில் நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த வைர விழாவை நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு சாரணர் இயக்குநரகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், தமிழ்நாடு சாரணர் இயக்குநரக மாநிலத் தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். இதில் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக்கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ், சாரணர் இயக்குநரகத்தின் மாநில முதன்மை ஆணையர் க.அறிவொளி உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியது: “பாரத சாரணர் இயக்கத்தின் வைர விழாவை சிறப்பாக கொண்டாடுவதன் மூலம் தமிழகத்தின் பெருமையை உலகம் முழுவதும் நிலைநாட்ட ஒரு நல்ல வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. முதற்கட்டமாக 38 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அதற்கான பதிலை பொறுத்து விழாவை தேசிய அல்லது சர்வதேச அளவில் நடத்துவது குறித்து முடிவு செய்வோம். ரூ.10 கோடி செலவில் திட்டமிடப்படும் வைரவிழாவை முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் நடத்த அனுமதி பெற்றுள்ளோம். எனவே, அதை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யவேண்டும். சாரணர் இயக்குநரகத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் 12 லட்சம் என்ற இலக்கை எட்ட வேண்டும். எதிர்காலத்தில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநரே சாரணர் இயக்குநரகத்தின் மாநில ஆணையராகவும் இருப்பார். அதுதொடர்பான விதிமுறைகள் மாற்றம் செய்யப்படும்” என்று அவர் பேசினார்.

தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஸ் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘பாரத சாரணர் இயக்குநரகத்தின் வைரவிழாவை திருச்சியில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்த தேதி என்பதை முதல்வருடன் ஆலோசித்து பின்னர் தெரிவிக்கப்படும். குறைந்தது 5 நாட்கள் விழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு முன்னதாக கர்நாடகாவில் சர்வதேச அளவிலும், ராஜஸ்தானில் தேசிய அளவிலும் பாரத சாரணர் இயக்குநரக நிகழ்வை நடத்தியுள்ளனர். அதைவிட பிரம்மாண்டமாக நடத்த உள்ளோம். மாணவர்களுக்கான ஒழுக்கம் தொடர்பான கல்வி இத்தகைய இயக்கங்கள் வாயிலாகவே கிடைக்கும்’’ என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews