CBSE மற்றும் ICSE பள்ளிகள் ‘கட்டாயக் கல்வி சட்ட இடஒதுக்கீடு’ வரையறைக்குள் வராது - ஐகோர்டில் தமிழக அரசு தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 03, 2024

Comments:0

CBSE மற்றும் ICSE பள்ளிகள் ‘கட்டாயக் கல்வி சட்ட இடஒதுக்கீடு’ வரையறைக்குள் வராது - ஐகோர்டில் தமிழக அரசு தகவல்



சிபிஎஸ்இ, ஐசிஎஸ் பள்ளிகள் ‘கட்டாயக் கல்வி சட்ட இடஒதுக்கீடு’ வரையறைக்குள் வராது: தமிழக அரசு @ ஐகோர்ட்

சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ் பாடத்திட்ட பள்ளிகள் கட்டாயக்கல்வி சட்ட இடஒதுக்கீடு வரையறைக்குள் வராது என்பதால் 25 சதவீத ஒதுக்கீடு வழங்கும்படி கோர முடியாது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் போது பள்ளியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வசிக்கவில்லை எனக்கூறி பள்ளி நிர்வாகங்கள் விண்ணப்பங்களை நிராகரித்து வருவதாகக்கூறி கோவையைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகசுந்தரம், “ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வசிக்கவில்லை எனக்கூறி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவது தவறு. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றமே ஏற்கெனவே உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆந்திராவிலும் இதுசம்பந்தமாக விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ் பள்ளிகளையும் கொண்டு வர வேண்டும். இதுதொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்குத்தான் உள்ளது” என வாதிட்டார்.

அதற்கு பதிலளித்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான மாநில அரசு ப்ளீடர் எட்வின் பிரபாகர், “மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளிகளுக்கு மாநில அரசின் கட்டண நிர்ணயக் குழு கட்டணங்களை நிர்ணயித்து, அதன் அடிப்படையில், 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தி வருகிறது. ஆனால் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ் பள்ளிகளுக்கு மாநில அரசின் கல்வி கட்டண நிர்ணயக்குழு கட்டணங்களை நிர்ணயிக்க முடியாது என்பதால் இந்த பள்ளிகளை அந்த வரையறைக்குள் கொண்டுவர முடியாது. எனவே 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் இந்த பள்ளிகளில் சேர்க்கை வழங்க வேண்டும் எனக் கோர முடியாது. தமிழகத்தில் தற்போது ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் ஒரு அரசு தொடக்கப் பள்ளியும், மூன்று கிலோ மீட்டர் இடைவெளியில் அரசு நடுநிலைப் பள்ளியும், தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் உள்ளனர் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. 25 சதவீத ஒதுக்கீடு காரணமாக அரசுக்கு அதிக நிதிச்சுமை உள்ளது” என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 18-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews